இந்திய - சவுதி அரசாங்கங்கள் மார்ச் 16, 2013 அன்று இவ்வாண்டிற்கான ஹஜ் பயண இட ஒதுக்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்திட்டனர். அதன்படி - இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட இடமாக 170,025 இடங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் 125,025 இடங்கள் இந்திய ஹஜ் குழு மூலம் ஒதுக்கப்படும் என்றும், 45,000 இடங்கள் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம், ஜூன் 5 அன்று இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பியது. அதில் தற்போது மக்காவில் நடைபெற்றுவரும் விரிவாக்க திட்டங்களை காரணம் கூறி - சவுதி உள்நாட்டு ஹஜ் பயணியர் எண்ணிக்கை இவ்வாண்டு 50 சதவீதம் குறைக்கப்படுகிறது என்றும், அது போல் வெளிநாடுகளில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணியர் எண்ணிக்கை 20 சதவீதம் குறைக்கப்படுகிறது என்றும் தெரிவித்தது.
இது குறித்து - இந்திய வெளியுறவு அமைச்சகம், சவுதி அரசாங்கத்திடம் முறையீடு செய்ததது. ஜூன் 21 தேதியிட்ட கடிதம் மூலம், தன் முடிவில் மாற்றம் இல்லை என சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் - இந்தியாவிற்கு வழங்கப்பட்ட இடம் 170,025 இல் இருந்து 136,020 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹஜ் குழு மூலம் பயணியர் தேர்வு பல கட்டங்களை தாண்டிவிட்டது. ஏறத்தாழ அனைத்து பயணியரிடம் இருந்தும் முன் தொகை பெறப்பட்டுவிட்டது. மேலும் இந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பம் செய்துள்ளவர்களில் பெருவாரியானவர்கள் முதல் முறை ஹஜ் செய்பவர்கள். இது இவ்வாறு இருக்க, தகுதியான தனியார் ஹஜ் நிறுவனங்கள் பட்டியல் இது வரை வெளியிடப்படவில்லை.
இவைகளை கருத்தில் கொண்டு - சவுதி அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டினால், இழப்பு ஏற்படும் 34,005 இடங்களையும், தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 45,000 இடங்களில் இருந்து கழித்திட அரசு முடிவு செய்துள்ளது. ஆகவே - தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு, இவ்வாண்டு 10,995 இடங்களே ஒதுக்கப்படுகின்றன. |