அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் - தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 01 முதல் 13ஆவது வார்டு வரையிலும், 15ஆவது வார்டிலும் முழுமையாகவும், 18ஆவது வார்டில் பெரும்பாலோரிடமும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் 16ஆவது வார்டு பொதுமக்களிடம் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 16ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் தலைமையிலான குழுவினர் வழிகாட்டுப் பணிகளைச் செய்து வருகின்றனர். இம்முகாம் நாளையுடன் (ஆகஸ்ட் 03) முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயல்பட்டினம் 14ஆவது வார்டுக்குட்பட்ட பொதுமக்களிடம், இரத்தினபுரி அருள்ராஜூ துவக்கப்பள்ளியிலும், லெக்ஷ்மிபுரம் அங்கன்வாடி கட்டிடத்திலும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 14ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா வழிகாட்டுப் பணிகளைச் செய்து வருகிறார்.
14, 16ஆவது வார்டுகளில் பணி நிறைவுற்ற பின்னர், 17ஆவது வார்டு பொதுமக்களிடம் விபரங்கள் சேகரிக்கும் பணி நடைபெறும் என அறியப்படுகிறது.
அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுமக்களில், பல்வேறு காரணங்களால் விபரங்கள் சமர்ப்பிக்க முடியாமல் போன பொதுமக்களுக்காக இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் சிறப்பு முகாம், காயல்பட்டினம் கூலக்கடை பஜாரிலுள்ள எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |