சவுதி அரேபியா - ஜித்தா, கடந்த 26.07.2013 வெள்ளிக்கிழமை ஜித்தாவில் நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 73-ஆவது செயற்குழு கூட்ட விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 73-வது செயற்குழு கூட்டம் கடந்த 26-07-2013-ஆம் தேதி மாலை 6-30 மணியளவில் ஜித்தா ஷரஃபியாவிலுள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடந்தேறியது. மன்றத்துணைத்தலைவர் சகோ,மருத்துவர்,எம்.ஏ.முஹம்மது ஜியாது தலைமை ஏற்க, சகோ. பொறியாளர்,அல்ஹாபிழ், எஸ்.எம்.செய்கு ஆலம் இறைமறை ஓதிட, சகோ. நஹ்வி ஏ.எம். ஈசா ஜக்கரியா அனைவரையும் அகமகிழ வரவேற்க முதல் அமர்வு இனிதே ஆரம்பமானது.
கடந்த கூட்ட அறிக்கை:
கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவி தொகைகள், இக்ரா கல்வி அமைப்பிற்கு வழங்கிய இந்தாண்டுக்கான நிர்வாக செலவு, பல ஆண்டுகளாக இக்ரா மூலமாக வழங்கி வரும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவி தொகைகளின் விபரம் மற்றும் கலந்தாலோசிக்கப்பட்ட செய்திகள், அதன் நிமித்தம் நடந்தேறிய மன்றப்பணிகளையும் மேலும் அனைத்துலக காயல் நலமன்றங்களின் ஒருமித்த கருத்தோடு
உருவாகியுள்ள ஷிபா மருத்துவ கூட்டமைப்பிற்கு ஆரம்பகால மற்றும் ஓராண்டு நிர்வாக செலவுக்கென நம்மன்றம் சார்பில் ரூபாய், 50,000- அளித்திட கடந்த 70-ஆவது செயற்குழுவில் முடிவு செய்துள்ளதும் மற்றும் தாய்லாந்து காயல் நலமன்றம் மூலமாக கடந்தாண்டு முதல் நமதூரில் உள்ள மொத்தம் 35-பள்ளிவாயில்களின் இமாம்கள், முஅத்தின்களுக்கு நபர் ஒருவருக்கு ருபாய்,5,000, வீதம் 70-நபர்களுக்கு மொத்தம் ரூபாய் 3,50,000, ஈகைத்திருநாள் ஊக்கத்தொகை வழங்கியது போல் இந்தாண்டும் வழங்கிட உள்ளதும் இதற்காக நமது மன்றத்தின் பங்களிப்பினையும் அவர்கள்
வேண்டியுள்ளதும் இது போன்ற நலஉதவிகளுக்கு நாம் உதவிட இந்த சங்கையான ரமலான் மாதத்தில் நன்கொடைகள் அளிக்க மன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் வழியாக வேண்டியதும் இதனை ஏற்று உதவிய, உதவும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியையும் மன்றச்செயலர் சகோ. ஜட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் தெரிவித்து கொண்டார்.
மன்ற செயல்பாடுகள்:
நம் மன்றம் துவங்கி இதுவரை இறையருளால் தொய்வில்லா பல மக்கள் நலப்பணிகளை செய்து வருவதும் இன்னும் திறம்பட நாம் செய்திட மன்ற உறுப்பினர்கள் தங்களது சந்தாவை முறையோடு செலுத்துவதோடு, இந்த புனிதமிகு ரமலானில் நமது நன்கொடைகளையும் வாரி வழங்குவதுடன் நாம் இறைவனின் புறத்திலிருந்து அதிக நன்மைகளை பெற்றிட இந்த மாதத்தை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளவேண்டுமாயும், நம் மன்றம் செய்த நலஉதவிகள்,நகர் நலப்பணிகள் மூலம் பயனடைந்த நமதூர் பயனாளிகள் நம் ஈருலக வாழ்வும் சிறக்க அவர்கள் செய்யும் பிராத்தனைகள் பல கோடி நன்மைகளை நமக்குபெற்றுத்தருமென்றும் கூறியஅவர், நமக்கு அறிந்த நண்பர்கள், ஐக்கியமான அன்பர்களிடம் நம்மன்றப்பணிகளை எடுத்துக்கூறி அவர்களிடமிருந்து நன்கொடைகளை பெற்றளித்தால் இன்னும் பல சேவைகளாற்ற உதவியாக, உறுதுணையாக இருக்குமென்றும் கூறியதுடன், இம்மன்றதால் நாம் ஆற்ற வேண்டிய மக்கள் நலப்பணிகளையும் அழகாக எடுத்துரைத்து தனதுரையை நிறைவு செய்தார் இம்மன்றத்தின் செயலாளர் சகோ.எம்.ஏ .செய்யது இப்ராகிம்.
நிதி நிலை அறிக்கை:
கல்வி மற்றும் மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கிடு, உறுப்பினர்கள் வழங்கிய சந்தா மற்றும் நன்கொடைகளின் வரவு பயனாளிகளுக்கு வழங்கியதின் முழு விபரம் மற்றும் தற்போதைய நிதிஇருப்பு தொகைகளின் நடப்புகளையும் பட்டியலிட்டார் மன்றப்பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
நோன்பு திறப்பு நிகழ்வு :
நோன்பு திறக்க இப்தார் நேரம் நெருங்கிட அவரவர்கள் மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபடவும் பாங்கொலி கேட்க புகழுக்குரிய அல்லாஹ்விற்கு நன்றி செலுத்திய வண்ணம் நோன்பு திறக்கப்பட்டது. எலுமிச்சை குளிர்பானம் ஜில்லென்று அருந்திட,பலதர பழவகைகளும், காரமான கடலை,மண மணக்கும் மசாலா வடை,சமூசா மற்றும் நம்காயலின் சுவையும், மணமும் மாறா பிரியாணிகஞ்சியுடன் சிறப்பாக நிறைவேறியது இஃப்தார் நிகழ்வு. மக்ரிப் தொழுகையை ஜமாஅத்துடன் அனைவரும் நிறைவேற்றியும் சூடும் சுவையும் குறையாத காயலின் இஞ்சி தேனீருடன் மீண்டும் இரண்டாவது அமர்வு இனிதே ஆரம்பமானது.
மன்றத்தலைவர் உரை :
நம் மன்றம் துவங்கி 10-ஆவது ஆண்டினை நிறைவு செய்தும், இந்த காலங்களில் நம்மன்றம் மூலம் நாம் ஆற்றிய நம் மக்களுக்கான பல நலச்சேவைகள் அளப்பரியது என்றும்,இதற்காக வேண்டி எல்லா வகைகளிலும்,வழிகளிலும் நல உதவியுடன், நல்ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுடன் நெஞ்சார்ந்த நன்றியும் கூறியதுடன்,இன்னும் பலசேவைகள் நாம் செய்திட வேண்டியுள்ளதும் நம் மன்றத்தின் அனைத்து பணிகளுக்கும் முழுமுதல் காரணியாக விளங்கும் சந்தாவின் தேவையின் அவசியத்தை எடுத்துரைத்தும் இதற்காக வேண்டி அனைவரும் சந்தா தொகையினையும், நன்கொடைகளையும் வாரி வழங்கி இந்த புனிதமிக்க ரமலானில் பயனாளிகளின் பிரார்த்தனைகளின் மூலம் வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தம்தனையும் பெறுவோமாக எனவும்,நம் மன்றத்தின் நற்பணிகள் மென்மேலும் சிறந்தோங்கவும், நாம் செய்யும் அனைத்து நலப்பணிகளும் வல்ல அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படவும் பிரார்திக்குமாறும்
மன்றத்தலைவர் சகோ.குளம்,எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் அனைவரையும் வேண்டிக்கொண்டார்.
சிறப்பு விருந்தினரின் சீர்மிகும் பாராட்டுரை:
புனித மக்கா நகரில் முப்பது ஆண்டுகளுக்கு முன் உலகின் முதன்முதலாக காயல் நல மன்றம் துவக்கி இன்று அனைத்துலக காயல் நலமன்றங்கள் உருவாகி பல்கி பெருகிடவும் நம் மக்கள் நன்மைகள் பல பெற வித்திட்ட பெருமகனாரும், எங்கள் மன்றத்தின் துணைத்தலைவர், சகோ, மருத்துவர், எம்.எ.முஹம்மது ஜியாதின் அருமை தந்தையும், ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் ஆலோசகருமான பொறியாளர், ஹாஜி,எம்.ஏ.எம்.அபூபக்கர் (லண்டன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நமது மக்களுக்காக நாம் செய்யும் இந்த மகத்தான பணியானது நம் இம்மை,
மறுமை வாழ்க்கைக்கு நிரந்தரமான கூலியும்,நல்லதோர் பலனையும் இறைவனிடத்தில் பெற்று தரும் எனவும் பகிர்ந்து அளிக்கும் தொகையை தேவையுடைய வறியவர்களை சரியாக நாம் அடையாளம் கண்டு அவர்களின் வறுமையை போக்கிட நாம் பேருதவி செய்தால் அதுவே மிக சிறப்பானதாக அமையும் என்ற கருத்துக்களையும் மேலும் பல அரிய யோசனைகளையும் எடுத்துரைத்தும், அவர்கள் சார்ந்த ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் கல்வி சேவை மற்றும் நகர்நலப்பணிகளையும் விளக்கியதோடு மேலும் ஜித்தா நற்பணி மன்றம் ஆற்றிவரும் நல்லதோர் சேவைகளையும் வெகுவாக
பாராட்டினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்:
ரியாதிலிருந்து பணி நிமித்தமாக மாற்றலாகி அண்மையில் ஜித்தா வந்திருக்கும் சகோ.ஏ.எம்.செய்யது அஹமது சிறப்பு அழைப்பாளராக இந்த அமர்வில் கலந்து கொண்டு பல நல்ல கருத்துகளை ஆலோசனைகளாக வழங்கியும், மன்ற உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டும் மேலும் இக்ராவின் ஆயுள்கால உறுப்பினராகவும் தன் பெயரை பதிவு செய்திட கூட்டத்தில் அனைவரும் அகங்குளிர வாழ்த்தினார்கள்.
நல உதவிகள்:
மன்றத்திற்கு மருத்துவ உதவிகேட்டு வந்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு சகோ,மருத்துவர்,எம்,எ,முஹம்மது ஜியாது பரிந்துரையின்படி எட்டு மாத குழந்தையின் இருதய ஓட்டை சரி செய்ய அறுவை சிகிச்சை,புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் சகோதரருக்கு, மஞ்சக்காமாலை நோயால் நுரையீரல் பாதிப்படைந்தவர், இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் மற்றும் பேறுகால கடன்பட்ட நபர்கள் என ஆக மொத்தம் 5 பயனாளிகளுக்கு மருத்துவ உதவியும், சிவில்,கணிணி, இயந்திரவியல்,மின்சாரவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இரண்டாம்,மூன்றாம் மற்றும் நான்காமாண்டுகள் பொறியியல் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் மொத்தம் 15 நபர்களுக்கு உயர்கல்விக்கான உதவிகளும் ஆக மொத்தம் 20 பயனாளிகளுக்கு உதவி தொகைகள் அளிக்க ஒரு மனதாக முடிவு செய்தும் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் உடல் சுகவீனமுற்றோர்கள் பரிபூரண நலம் பெறவும், உயர் கல்வி பயிலும் மாணவமணிகள் நன்கு படித்து வாழ்வில் முழு வெற்றி பெறவும், அனைவரின் வாழ்வு நனிசிறக்கவும் பிரார்த்திக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
* கடந்த 70-ஆவது செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானித்த பிரகாரம் அனைத்துலக காயல் நலமன்றங்களின் ஒருமித்த கருத்தோடு உருவாகியுள்ள ஷிபா மருத்துவ கூட்டமைப்பிற்கு ஆரம்பகால மற்றும் ஓராண்டு நிர்வாக செலவுகென ரூபாய்,50,000-நிதி ஒதுக்கியும் இதனை மன்ற உள்ளூர் பிரதிநிதி சகோ,எ.எம்.இஸ்மாயில் நஜீப் அவர்கள் மூலமாக வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
* தாய்லாந்து காயல் நலமன்றம் சார்பாக கடந்தாண்டு முதல் நமதூரில் உள்ள
35, பள்ளிவாயில்களின் இமாம்கள்,முஅத்தின்களுக்கு ஈகைத்திருநாள் ஊக்கத்தொகை
ருபாய்,5,000, வீதம் வழங்கியது போல் இந்தாண்டும் வழங்கிட இருப்பதும்
இதற்காக நமது மன்றத்தின் பங்களிப்பினையும் அவர்கள் வேண்டியதுக்கு இணங்க
நம் மன்றம் சார்பில் ரூபாய் 25,000,அளித்திட முடிவு செய்யப்பட்டது.
* சங்கைமிகு ரமலானில் நாம் செய்த நற்காரியங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட
வல்ல ரஹ்மானிடம் இம்மன்றம் மனமுருகி பிரார்த்தித்து மன்ற உறுப்பினர்களுக்கும், நமதூர் கண்மணிகளுக்கும், மன்றப்பணிகளுக்கு உதவிகள் புரியும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மற்றும் உலக முஸ்லீம் உம்மத்துக்கும் ஜித்தா காயல் நற்பணி மன்றம் புனித நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்களை மனமகிழ்வோடு தெரிவிக்கிறது.
* மன்றத்தின் 30-வது பொதுக்குழு கூட்டம் ஈகைத்திருநாள் சந்திப்பு நிகழ்வாக
எதிர்வரும் 13-09-2013 வெள்ளியன்று மாலை 5.30 மணியளவில் ஜித்தா, ஷரபியா,
இம்பாலா கார்டன்,உள்ளரங்கில் வைத்து இன்ஷாஅல்லாஹ் நடாத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி கூறல்:
சகோ.சீனா,எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது பெருந்திரளாக வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க, பொறியாளர்,அல்ஹாபிழ், எஸ்.எம்.செய்கு ஆலம் துஆ,கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்! சகோ. குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் மற்றும் சகோ. வேணா, எஸ்.எஸ்.அஹ்மது சித்தீக் ஆகியோரின் அனுசரணையுடன் இப்தார் மற்றும் இரவு உணவு அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தகவல்,
எஸ்.ஹெச்.அப்துல் காதர் மற்றும் ஜட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,
நிழற்படங்கள்,
ஜட்னி,எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி,
காயல் நற்பணி மன்றம்-ஜித்தா.
|