காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 02 - வெள்ளிக்கிழமை) மாலை 06.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களான டி.ஞானய்யா, எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, எல்.கே.துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் என்.பீர் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்துறை மருத்துவ நிபுணர்களான டாக்டர் கண்ணன், டாக்டர் பாவநாசகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்குடன், பல்சமயங்களைச் சேர்ந்த இப்பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, கடந்த காலங்களில் பள்ளி ஆசிரியர்களே இந்த இஃப்தார் - சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்ததாகவும், இதனைக் கேள்வியுற்ற பள்ளி தலைவர் டாக்டர் அஷ்ரஃப், இப்படியொரு நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகமே நடத்துவதில் பெருமிதம் கொள்வதாகக் கூறி, கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து இந்த இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியை சிறப்புற நடத்தி வருவதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ “நோன்பின் மகத்துவம்” என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், துஆ இறைஞ்சப்பட்டது. அதனைத் தொடர்ந்து நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது.
அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர் புட்டி, கறிகஞ்சி, வடை வகைகள், பழக்கூழ், குளிர்பானம் ஆகிய உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம், கே.எம்.டி.மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப், ஹாஜி ஏ.ஆர்.லுக்மான், ஹாஜி ஏ.ஆர்.இக்பால், பள்ளியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் பள்ளியின் முன்னாள் - இந்நாள் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னர், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு (ஹிஜ்ரீ 1433) இப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |