காயல்பட்டினத்தில் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ரமழான் மாத இரவுகளில் தராவீஹ் - சிறப்புத் தொழுகையின்போது திருமறை குர்ஆனின் வசனங்கள் பகுதி பகுதியாக ஓதப்பட்டு, ரமழான் 27 அல்லது 29ஆம் நாளில் முழு குர்ஆனும் ஓதி தமாம் செய்யப்படும்.
இந்த தமாம் நிகழ்வை முன்னிட்டு, நகரின் பல பள்ளிகளில் அடுத்தடுத்த தினங்களில் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களறி சாப்பாடு தயாரிக்கப்பட்டு, ஸஹர் - நோன்பு நோற்பு உணவாக அந்தந்த ஜமாஅத் மஹல்லாவாசிகளுக்கு விருந்துபசரிப்பு செய்யப்படும்.
இந்த விருந்துபசரிப்பில் சீர்கேடுகள் ஏற்பட்டுவிடாது தடுக்கும் நோக்குடன், தற்காலத்தில் சில பள்ளிவாசல்களில் முற்கூட்டியே மஹல்லாவாசிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, அதனைக் கொண்டு வரும் ஜமாஅத்தார் உணவுண்ண அனுமதிக்கப்படுகிறது.
இன்னும் சில பள்ளிகளில், களறி சாப்பாடு சமைக்கப்பட்டு, மஹல்லாவாசிகள் பள்ளிக்கு அழைக்கப்படாமல் - அவரவர் இல்லங்களுக்கு சாப்பாட்டுப் பொதி அனுப்பி வைக்கும் முறையும் உள்ளது.
வேறு சில பள்ளிகளில், நெய்சோறு சமைக்கப்பட்டு பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டியில் (மிட்டாய் பெட்டி) அடைக்கப்பட்டு - மஹல்லாவாசிகளுக்கு வினியோகிக்கப்படும் வழமை உள்ளது.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளியில் இம்மாதம் 06ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று பின்னிரவில் (ரமழான் 27ஆம் நாளில்) திருமறை குர்ஆன் ஓதி முடித்து தமாம் செய்யப்பட்டது.
அதனையடுத்து, இம்மாதம் 07ஆம் தேதி புதன்கிழமையன்று மாலையில் அந்த மஹல்லாவைச் சார்ந்த அனைத்து குடும்பங்களுக்கும், புதுப்பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட ரிஸ்வான் சங்க வளாகத்தில் தமாம் சாப்பாடாக நெய்சோறு தயாரித்து வினியோகிக்கப்பட்டது. மஹல்லாவிற்குட்பட்ட குடும்பத்தினர் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
அன்றிரவு களறிக்கறி மற்றும் கத்திரிக்காய் - மாங்காய் பருப்பு சமைக்கப்பட்டு, ரூபாய் 180 என்ற கட்டண நிர்ணயப்படி, முன்பதிவு செய்தோருக்கு வினியோகிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை, புதுப்பள்ளி செயலாளர் ஏ.எஸ்.அஷ்ரஃப் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
M.U.முஹம்மத் இம்ரான்
புதுப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) ரமழான் மாதத்தில் நடைபெற்ற தமாம் சாப்பாடு வினியோக நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |