காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் இம்மாதம் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 03.00 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் துவங்கியது. நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பின்வரும் கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது:-
வருகை தந்த உறுப்பினர்கள்:
மதியம் 03.30 மணியளவில்,
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன்,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகிய உறுப்பினர்கள் கூட்டரங்கிற்கு வருகை தந்தனர்.
வெளிநடப்பு:
கூட்டப் பொருட்களை, நகராட்சி அலுவலர் செந்தில் குமார் வாசிக்கத் துவங்கினார். உடனடியாக எழுந்து பேசிய நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்றத் தலைவர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால், அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு (ஆர்.டி.எம்.ஏ.) தாங்கள் கடிதம் அளித்துள்ளதாகவும், அதற்கான கூட்டத்தை அவர் கூட்டுவார் என எதிர்பார்ப்பதாகவும், இக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும் கூற, அதனையடுத்து, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர அனைத்துறுப்பினர்களும், கூட்டரங்கிலிருந்து வெளியேறினர்.
இதுகுறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!
பார்வையாளர்கள்:
இக்கூட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து விடுமுறையில் ஊர் வந்துள்ள பொதுமக்கள் பலர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
அவர்கள், நகர்மன்றத் தலைவரிடம் கேள்வி கேட்க அனுமதி கோரினர். தலைவர் அதற்கு அனுமதியளிக்கவே, அவர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அதற்கு நகர்மன்றத் தலைவர் விளக்கமளித்தார்.
நகர்மன்றத்தின் நடப்பு நிலை குறித்து நகர்மன்றத் தலைவர் விளக்கம்:
பின்னர், நகர்மன்றத்தின் நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு அவர் விளக்கமளித்தார். அதன் சுருக்கம் வருமாறு:-
முக்கிய கூட்டப் பொருட்கள்...
நடப்பு கூட்டத்தில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்தல், குடிநீர் வால்வு தொட்டிகளுக்கு உதிரி பாகங்கள் கொள்முதல் செய்தல், தெரு விளக்கு பராமரிப்பு, நகராட்சி பேருந்து நிலைய கழிப்பறை ஏலம், புறநகர் மக்களின் பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக புதிய சாலைகள் அமைத்தல், நகரின் பல பகுதிகளில் சேதமுற்ற நிலையிலுள்ள சாலைகளை செப்பணிடல், மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்படாமலேயே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய முக்கிய செயல்திட்டங்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது.
வார்டு உறுப்பிர்களின் கோரிக்கைகள்...
நடப்பு கூட்டப் பொருட்களில் பல, அவரவர் வார்டு மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், பல உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. வந்தவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
பெரிய நெசவுத் தெரு சாலை...
பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை அமைக்கப்படாததால், பல பேருந்துகள் வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் நிலையுள்ளது. இதனால், அப்பேருந்துகளில் பயணம் செய்யும் நகர பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர்.
பெரிய நெசவுத் தெரு புதிய சாலையின்றி குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் படும் அவதிகளை, அவ்வழியே செல்லும் பேருந்துகளில் பயணித்தோர் நன்கறிவர்.
கூட்டத்தைப் புறக்கணிக்கலாமா...?
நகர்மன்றத் தலைவராக என் மீது உறுப்பினர்களுக்கு குறைகள் இருக்கலாம்... அதற்காக என்னைப் பதவி நீக்கம் செய்ய அவர்கள் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் மனு அளித்துள்ளனர். அம்மனு பரிசீலிக்கப்பட்டு, அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டால் - அப்போது என்னிடம் விளக்கம் கேட்கப்படும்... நான் அதற்கு விளக்கமளிப்பேன்... அது தனி நடைமுறை. அதற்காக, மக்கள் நலத்திட்டங்களை முடக்க வேண்டியதன் அவசியமென்ன?
சட்டம் என்ன சொல்கிறது...?
பெரும்பான்மை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒப்புதலளிக்காமல் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற இயலாது என்பதே சட்டம். சில அவசர காரியங்களுக்கு, நகர்மன்றத் தலைவராக என்னிடம் முன் அனுமதி பெறப்படும். அவ்வாறு முன்னனுமதிக்கு நான் கையெழுத்திட்ட அம்சங்கள் குறித்து அடுத்து வரும் கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் கருத்திற்கொள்ளாமல், பெரும்பான்மை உறுப்பினர்கள் தொடர்ந்து வெளிநடப்பு செய்வதால், நகராட்சி பொறியாளர்கள் எந்தவொரு செயல்திட்டத்திலும் இறங்கத் தயக்கம் காண்பிக்கின்றனர்.
நகராட்சி அலுவலர்கள் மீது முறைகேடு புகார்...
நம் நகராட்சியின் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய கூட்டப் பொருள் உள்ளது.
ஒரு நிர்வாகத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிக முக்கியமான தேவை, அந்நிர்வாகத்தில் பணிபுரிவோர் முறைகேடுகளின்றி செயல்படுவதாகும். ஆனால், நம் நகராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் நசீர் கான், முஹம்மத் அலீ ஆகியோர் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியிருப்பதால், அவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய ஒப்புதல் வழங்கலாம் என நகர்மன்றத் தலைவர் குறிப்பில் நான் தெரிவித்துள்ளேன். உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதால், மிக முக்கியமான இந்த கூட்டப் பொருள் குறித்தும் விவாதிக்கப்படாது.
உறுப்பினர்கள் வெளிநடப்பால் மக்களுக்கே பாதிப்பு...
ஒன்றை மட்டும் நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்... நகர்மன்றக் கூட்டங்களிலிருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதால், நகர்மன்றத் தலைவராக எனக்கு எந்த நஷ்டமும் இல்லை... அதே நேரத்தில், நகராட்சி நிர்வாக செயல்பாடுகள் முடக்கப்படுவதால் பொதுமக்கள் படும் அவதிகளை, மனசாட்சியுள்ள யாரும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அந்த வகையில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன்...
விளக்கம் கேளுங்கள்!
ஒரு நகர்மன்றத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது போல, பொதுமக்களாகிய நீங்கள் 18 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளீர்கள்... உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே அவர்களை நீங்கள் அனுப்பியுள்ளீர்கள்.
என் மீது குறையிருப்பின் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் விளக்கம் கேட்கலாம். அதுபோல, உங்கள் உறுப்பினர்கள் மீதுள்ள குறைகள் குறித்து நீங்கள்தான் அவர்களிடம் கேட்க வேண்டும்... அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.
இறைவன் தந்த அமானிதம்!
இந்தப் பதவிகள் எல்லாம் இறைவன் எங்களுக்கு அளித்துள்ள அமானிதம். இதுகுறித்து, மறுமையில் நாங்கள் விசாரிக்கப்படுவோம் என்ற அச்சம் எங்கள் யாவருக்கும் இருக்க வேண்டும்...
இவ்வாறாக, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பொதுமக்களுக்கு விளக்கமளித்தார். அவரது விளக்கத்தை அசைபடப் பதிவில் முழுமையாகக் காண இங்கே சொடுக்குக!
கூட்டத்தில் விரும்பத்தகாத எதுவும் நடைபெறாதிருக்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |