ரமழான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தில் 6 நாட்கள் நோன்பு நோற்பது, அந்த வருடம் முழுவதும் நோன்பு நோற்ற பலனுக்கு நிகரானது என நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளதைக் கருத்திற்கொண்டு, ஆண்டுதோறும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளையடுத்த 6 நாட்களில் முஸ்லிம்களில் பெரும்பாலோர் நோன்பு நோற்பது வழமை. வேறு சிலர், அம்மாதத்தில் தமக்கு வசதிப்பட்ட ஏதேனும் 6 நாட்களில் நோன்பு நோற்பர்.
ஷவ்வால் முதல் நாளையடுத்த 6 நாட்களில் நோன்பு நோற்பவர்களுக்காக காயல்பட்டினம் நகரின் சில பள்ளிவாசல்களில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி, இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) ஆகிய பள்ளிகளில் பெரிய அளவிலும், அஹ்மத் நெய்னார் பள்ளி, குருவித்துறைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளிலும் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் ஷவ்வால் மாதத்தில் 02ஆம் நாள் முதல் 07ஆம் நாள் வரை (ஆகஸ்ட் 10 முதல் 15ஆம் தேதி வரை) 6 நோன்பு நோற்றவர்களுக்காக இப்பள்ளிவாசல்களில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வழமை போல பேரீத்தம்பழம், தண்ணீர், நோன்புக் கஞ்சி, குளிர்பானம், வடை வகைகள் பரிமாறப்பட்டன.
நிறைவு நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, மகுதூம் ஜும்ஆ பள்ளியில் சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ஹாஃபிழ் காரீ ஏ.டி.முஹம்மத் அப்துல் காதிர் துஆ இறைஞ்சினார்.
|