டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன், இன்று நள்ளிரவு 01.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 63.
சேஷாசலம் என்ற இயற்பெயருடைய இவர் 1949 ஆகஸ்ட் 21 அன்று, சென்னை - பெரம்பூரிலுள்ள வீராசாமி - சாரதாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
சென்னை பெரம்பூரிலுள்ள பள்ளியொன்றில் கல்வி பயின்ற இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து, அதே கல்லூரியிலேயே 1971ஆம் ஆண்டு பேராசிரியரானார்.
பின்னர், லண்டனிலுள்ள ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்று, மனோதத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
மறைந்த தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அவர், மூட நம்பிக்கைகள், மடமைத்தனங்களுக்கெதிராக தனது பேச்சாலும், எழுத்தாலும் தீவிரமாகப் போராடினார். தந்தை பெரியார் முன்னிலையிலேயே உரையாற்றி, அவரது உவப்பைப் பெற்றதையடுத்து, “பெரியார்தாசன்” ஆனார். பின்னர், உலகின் பல நாடுகளுக்கும் சென்று, அங்கு நடைபெற்ற கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உலகப் புகழ் பெற்றார்.
இந்து சமயத்திலிருந்து வெளியேறி, பவுத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், பின்னர் பவுத்த சமய பரப்புரையாளராக மாறினார்.
உண்மையான வாழ்க்கை நெறியைத் தேடியலைந்த அவர், நிறைவாக, 2010ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இஸ்லாம் மார்க்கத்தைத் தன் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, 2010 மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று, சஊதி அரபிய்யா சென்று, புனித மக்காவிலுள்ள கஃபத்துல்லாஹ்வில், உம்றா செய்தார்.
2010 ஏப்ரல் 30ஆம் தேதியன்று, சஊதி அரபிய்யா தலைநகர் ரியாதில் நடைபெற்ற - காயலர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தன் மனைவியும் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி, தன் பெயரை ஆமினா என மாற்றிக்கொண்டுள்ளதாகவும், தன் மக்கள் புனித குர்ஆனைப் படித்து வருவதாகவும், அவர்களும் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ அனைவரும் பிரார்த்திக்குமாறும், அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
தன்னை முஸ்லிமாக உலகுக்கு அடையாளங்காட்டிய பின்னர், இஸ்லாம் மார்க்கத்தின் தீவிர பரப்புரையாளராக - தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் உட்பட உலகின் பல பாகங்களுக்கும் சென்று உரைகள் பல ஆற்றி வந்ததோடு, மனோதத்துவம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் நடத்தி, திருமறை குர்ஆன் - நபிமொழிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வுகளையும் வழங்கி வந்தார்.
நுரையீரலில் ஏற்பட்ட நோய் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று நள்ளிரவு 01.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
அவரது ஜனாஸா - நல்லடக்கம் குறித்து இதுவரை அறிவிப்பு எதுவும் கிடைக்கப்பெறவில்லை. |