காயல்பட்டினத்தைச் சேர்ந்த – பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களுக்கு - மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு உதவுவதற்காக உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த கலந்தாலோசனைகளின் அடிப்படையில், ‘ஷிஃபா’ கூட்டமைப்பு முறைப்படி துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கனவு நனவானது!
துவங்கியது காயல் நல மன்றங்களின்
மருத்துவக் கூட்டமைப்பு ''ஷிஃபா'' !!
காயல் நகர மக்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக கல்வி, மருத்துவம், சிறுதொழில் போன்றவற்றுக்கு பல வகைகளில் உதவி செய்து வருகிறது உலகின் பல்வேறு நாடுகளிலும் செயலாற்றிக் கொண்டிருக்கும் காயல் நல மன்றங்கள்.
இம்மன்றங்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டமைப்பு. இதில் கல்விக்கென்று இக்ராஃ கல்விச் சங்கம் துவக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றி வருவதைப் போல், மருத்துவத்திற்கும் ஒரு கூட்டமைப்பு தேவை என்பதை பல்வேறு காயல் நல மன்றங்களும் கடந்த சில ஆண்டுகளாக பேசியும், வலியுறுத்தியும் வந்தன.
இதற்கான முயற்சிகள், கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வந்தன. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் (SHIFA HEALTH AND WELFARE ASSOCIATION) என்ற பெயரில் மருத்துவக் கூட்டமைப்பு துவக்குவதென காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட - 10.08.2013 அன்று நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஷிஃபா துவக்க விழா!
அதன்படி இந்த மருத்துவக் கூட்டமைப்பின் துவக்க விழா கடந்த 11.08.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் தெருவிலுள்ள ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். டாக்டர் ஜாஃபர் ஸாதிக், டாக்டர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் இறைமறை வசனங்களையோதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயலாளர் கூஸ் எஸ்.ஏ.டி.முஹம்மத் அபூபக்கர் – சிறப்பழைப்பாளர்கள், கூட்டத்திற்கு அழைக்கப்பட்டோர், மருத்துவர்கள் மற்றும் அனைத்துலக காயல் நல மன்றங்களின் அங்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மைக்ரோகாயல் அமைப்பின் நிர்வாகி ஜெ.செய்யித் ஹஸன், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் குறித்து அறிமுகவுரையாற்றினார். மருத்துவ உதவி கோரும் – பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களுக்கு, ஒருங்கிணைந்த முறையில் உதவிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியம், அதன் பயன்கள் குறித்து விளக்கிப் பேசிய அவர், அந்நோக்கத்திற்கான அனைத்துலக காயல் நல மன்றங்களின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளதாகக் கூறினார்.
ஷிஃபா நிர்வாகிகள்:
பின்னர், இம்மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற பல்வேறு காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பிற்கு ஏகமனதாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயற்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை, கத்தர் காயல் நல மன்ற செயலாளர் கே.எஸ்.டி.செய்யித் அஸ்லம் வாசித்தார். புதிய செயற்குழு விபரம் வருமாறு:-
தலைவர்:
டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ் (தலைவர்)
துணைத் தலைவர்கள்:
எம்.எம்.மொகுதூம் முஹம்மத்
ஜெ.செய்யித் ஹஸன்
செயலாளர்:
ஏ.தர்வேஷ் முஹம்மது
துணைச் செயலாளர்கள்:
எம்.எம்.செய்யித் இப்றாஹீம்
எம்.எஸ்.எம்.மீராஸாஹிப்
பொருளாளர்:
என்.டி.ஷெய்க் மொகுதூம்
செயற்குழு உறுப்பினர்கள்:
01. எம்.எஸ்.முஹம்மது ஸாலிஹ்
02. எஸ்.அப்துல் வாஹித்
03. பி.எஸ்.ஜெ.செய்யித் முஹ்யித்தீன்
04. எஸ்.ஐ.செய்யித் இப்றாஹீம்
05. என்.டி.ஸதக்கத்துல்லாஹ்
06. எம்.ஏ.மெஹர் அலீ
07. எம்.எம்.செய்யித் அபூதாஹிர்
08. எம்.ஐ.மெஹர் அலீ
09 எஸ்.ஐ.புகாரீ
10. ஏ.எச்.முஹம்மது நூஹ்
11. எம்.ஆர்.ரஷீத் ஜமான்
12. எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத்
13. எம்.எஸ்.செய்யித் முஹம்மத்
14. எஸ்.எம்.மஸ்ஊத்
15. எம்.ஏ.சி.முஹம்மது முஹ்யித்தீன்
16. எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர்
17. வி.எம்.டி.அப்துல்லாஹ்
18. எம்.என்.சுலைமான்
19. எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம்
20. சாளை எஸ்.ஸலீம்
21. டாக்டர் வி.எம்.எம்.எஸ்.செய்யித் அஹ்மத்
22. எம்.செய்யித் அஹ்மத்
23. எஸ்.எம்.ஹஸன் மவ்லானா
24. வி.எஸ்.எஸ்.ஜாஹிர் ஹுஸைன்
பின்னர், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் துவக்கத்தை வரவேற்று சிறப்பு அழைப்பாளர்களும், பல்வேறு காயல் மன்றங்களின் நிர்வாகிகளும் தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். அதுகுறித்த சுருக்க விபரம் வருமாறு:-
கூட்டத் தலைவர் உரை:
கூட்டத் தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றுகையில்,
இந்த அமைப்பின் முக்கியத்துவம், நகர்நலன் குறித்த செயல்பாடுகளுக்கு மதிப்புமிக்க நமது நேரத்தை செலவழிக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை குறித்துப் பேசிய அவர், அமைப்பிற்கு செயல்திறன் மிக்க நல்லதொரு செயலாளர் அமையப் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
தற்போது நிதியுதவி எளிதாக பெற்று விடலாம்.ஆனால் செயலாற்றக் கூடியவர்கள் கிடைப்பது கடினம்.தற்போது நமதூரில் இக்ராஃ கல்விச் சங்கம் மிகவும் சிறப்பாகவும், நிர்வாகத் திறம்படவும் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். இக்ராஃவிற்கென நிலையான நிர்வாகச் செயல்முறைகள் உள்ளது போல் ஷிஃபாவுக்கும் அமைக்கப்பட வேண்டும். இந்த ஷிஃபா அமைப்பும் திறம்பட செயலாற்றும் என்பதை இதன் செயலாளராக தர்வேஷ் அவர்களை நியமித்ததிலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவரது தன்னலமற்ற பணிகளை நாம் அறிவோம். இளைய தலைமுறையினரின் உத்வேகமிக்க செயல்பாடுகளால் இறையருட்கொண்டு ஷிஃபா வெற்றிகரமாக தன் இலக்கை அடைந்தேறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், பயனாளிகள் தமது மருத்துவத் தேவைகளுக்காக இயன்றளவுக்கு உள்ளூர் மருத்துவமனையை நாட வேண்டும் என்று கூறினார்..
மருத்துவர்களின் உரை:
டாக்டர் ஜாஃபர் ஸாதிக் பேசுகையில், இந்நிகழ்வில் கலந்துகொள்வது தனக்கு மிகுந்த மகிழ்வளிப்பதாகவும், ஒருங்கிணைந்த மருத்துவ உதவி வழங்கும் திட்டம் மிகுந்த வரவேற்பிற்குரியது என்றும் கூறினார்.
அடுத்து, டாக்டர் பி.எம்.டி.முஹ்யித்தீன் அப்துல் காதிர் உரையாற்றினார்.
பொதுவாக மக்களுக்கு வரும் நோய்களுக்கான முன்பரிசோதனைகளுக்கு நிலையான சிறப்பேற்பாடுகளை அமைத்தல், அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பயனாளிகள் அவ்வப்போது பெறல், சாதாரண நிலை மருத்துவ சிகிச்சைகளுக்கேனும் உள்ளூர் மருத்துவமனையை நாடுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், பல்வேறு ஆய்வகங்கள் மற்றும் மருந்தகங்களுடன் நெருங்கிய தொடர்பை அமைப்பின் சார்பில் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், விலை அதிகமான பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள இயலும் என்று கூறினார். கண் மருத்துவம் குறித்த மருத்துவ ஆலோசனையை வழங்கிட தான் எப்போதும் ஆயத்தமாக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அடுத்து பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி பேசினார். ஒருங்கிணைந்த மருத்துவ உதவிக்காக ஷிஃபா துவக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், கடந்தாண்டு உம்றாவை நிறைவேற்றுவதற்காக சஊதி அரபிய்யா சென்றிருந்தபோது, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தால் நடத்தப்பட்ட கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட்டதை தான் நேரில் அவதானித்ததாகவும், தற்போது இந்த துவக்கக் கூட்டத்திலும் கலந்துகொள்வது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
அடுத்து பேசிய ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா), ஷிஃபா அமைப்பின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அமைப்பின் சார்பில் தூண்டுதல் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அடுத்து, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக் பேசினார். ஷிஃபா அமைப்பைத் துவக்குவதற்கான இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதும், அமைப்பிற்கு தான் சார்ந்துள்ள தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அவர்களுக்கு துவக்கமாக தலைமைப் பொறுப்பளிக்கப்பட்டிருப்பதும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
அடுத்து, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் பேசினார். ஒருங்கிணைந்த மருத்துவ உதவி செயல்திட்டத்திற்காக துவக்கப்படும் இந்த ஷிஃபா குறித்து நிறைய கூட்டங்களை நடத்தி, தமது பொன்னான நேரத்தைச் செலவழித்து கலந்தாலோசித்து இன்று கரை கண்டுள்ள அனைத்து அமைப்புகளையும் தான் மனதாரப் பாராட்டுவதாகக் கூறினார்.
அடுத்து, ஜித்தா காயல் நற்பணி மன்ற செயலாளர் ஹாஜி எம்.ஏ.செய்யித் இப்றாஹீம் பேசினார். ஷிஃபா குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட கலந்தாலோசைனைகள் குறித்த முழு வரலாற்றை சுருக்கமாக விளக்கிப் பேசிய அவர், இவ்வகைக்காக தமது பொன்னான நேரங்களைத் தந்துதவி, நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ள அனைவருக்கும் நன்றி கூறினார்.
அடுத்து பேசிய ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், ஷிஃபா வெற்றிகரமாக துவக்கப்பட்டுள்ளமைக்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, இவ்வகைக்காக தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் வழங்க ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) ஆயத்தமாக உள்ளதாகக் கூறினார்.
அடுத்து, துளிர் பள்ளியின் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் பேசினார். மருத்துவ உதவிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்வதற்கான இந்த செயல்திட்டம் மிகுந்த வரவேற்பிற்குரியது என்று கூறிய அவர், இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் முழு ஒத்துழைப்பளிப்பதன் மூலம், ஷிஃபாவை வெற்றிகரமாக நடத்திச் செல்ல இயலும் என்று கூறியதோடு, தற்போது பெருகி வரும் சர்க்கரை வியாதி போன்ற பொதுவான வியாதிகள் மற்றும் நோய்களுக்கு தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள சிறப்பேற்பாடு செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
அடுத்து, KCGC அமைப்பின் சார்பில் டாக்டர் கானி ஷேக் பேசினார்.
ஹெபடைட்டிஸ் B போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான செயல்திட்டங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும் என்றும், ஒருவருக்கு நோய் வந்த பின் உதவுவதைக் காட்டிலும் அது வராமல் தடுப்பதற்கான செயல்திட்டம் வகுத்து செயல்படுத்துவதே ஷிஃபாவின் முக்கிய செயல்பாடாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்து, துபை காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஜி எம்.யு.முஹம்மது அலி பேசினார். ஷிஃபா அமைப்பு துவக்கப்பட்டுள்ளதால், இனி மருத்துவ உதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, தகுந்த நேரத்தில் உதவிகளைச் சேர்க்க முழு வாய்ப்பு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்து, மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் உரையாற்றினார். உயிர்க்கொல்லி நோய்கள் உள்ளிட்ட பயங்கர நோய்களிலிருந்து இறையருளால் பொதுமக்களை முற்றிலும் விடுபடச் செய்திட, உடல்நலன் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
அடுத்து பேசிய ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ், ஷிஃபா அமைப்பு உருவாவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தளித்தமைக்காக எல்லா மன்றங்களுக்கும் நன்றி கூறினார்.
அடுத்து, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் டாக்டர் வி.எம்.எம்.எஸ்.செய்யித் அஹ்மத் பேசினார். பல்வேறு நோய்களிலிருந்து பொதுமக்களைக் காப்பதற்கான தடுப்பு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய அவர், பல்துறை மருத்துவர்களையும் விண்ணப்பங்கள் விசாரணைக் குழுவில் உள்ளடக்கினால், விண்ணப்பங்களின் நிலை குறித்து சரியான தகவலைப் பெற்று, அதனடிப்படையில் உதவித்தொகைகளைத் தீர்மானிக்க இலகுவாக இருக்கும் என்று கூறினார்.
அடுத்து, மைக்ரோகாயல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை எம்.ஏ.சி.முஹம்மது முஹ்யித்தீன் உரையாற்றினார். புதிதாகத் துவக்கப்பட்டுள்ள ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புடன் கைகோர்த்து செயல்பட மைக்ரோகாயல் ஆயத்தமாக உள்ளதாகக் கூறியதோடு, ஷிஃபாவிற்கான நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள எம்.என்.ஸிராஜுத்தீன் நிஸார் என்பவரை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
அடுத்து பேசிய ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் நிர்வாக அலுவலர் எம்.என்.ஸிராஜுத்தீன் நிஸார், இப்பொறுப்பில் பணியாற்றிட தனக்கு வாய்ப்பளித்தமைக்காக அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறிய அவர் தாம் இந்த பொறுப்பை திறம்பட செயல்படுத்தவிருப்பதாகவும், அதற்கு அனைவரும் துஆ கேட்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
நிறைவாக, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.செய்யித் இப்றாஹீம் நன்றி கூற, ஜெய்ப்பூர் காயல் நல மன்ற செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மது துஆவுடன் பகல் 12.30 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், அனைத்துலக காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கத்தினர், சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
குழுப்படத்தை விரிவுபடுத்திக் காண படத்தின் மீது சொடுக்குக!
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எம்.என்.ஸிராஜுத்தீன் நிஸார்
நிர்வாக அலுவலர்,
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்
காயல்பட்டினம். |