காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 30 பயனாளிகளுக்கு ரூபாய் 1 லட்சத்து 56 ஆயிரம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான சிறப்பு நிகழ்ச்சி, இன்று (ஆகஸ்ட் 21) இரவு 07.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் கத்தீபு கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் பொருளாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் அலீ முஹம்மத் மீரா ஸாஹிப் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் நகர்நலச் சேவைகள் குறித்து, அதன் செயற்குழு உறுப்பினர் செய்யித் அஹ்மத் விளக்கிப் பேசினார்.
அமைப்பின் நலத்திட்ட வினியோகங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அதன் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு துவங்கியது. பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையிலுள்ள - காயல்பட்டினத்தைச் சேர்ந்த 30 பயனாளிகளுக்கு, க்ரைண்டர், தையல் இயந்திரம், ஓவர்லாக் தையல் இயந்திரம், மைக்ரோவேவ் ஒவன், இட்லி சட்டி, முச்சக்கர வாகனம், முச்சக்கர வாகனத்திற்கான மோட்டார் இயந்திரம், ஆட்டோ ரிக்ஷாவிற்கான உதிரி பாகங்கள் ஆகிய பொருட்கள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.
அவற்றை, அமைப்பின் சார்பில் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், யு.நூஹ் ஆகியோர் வழங்க, பயனாளிகள் சார்பில் நிகழ்ச்சி தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் கத்தீபு கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிறைவாக, அமைப்பின் செயலாளர் பாக்கர் ஸாஹிப் நன்றியுரை நிகழ்த்தினார். உதவிகள் கோரி மன்றத்திற்கு மனு அளிக்கும் விண்ணப்பதாரர்களை உடனுக்குடன் விசாரணை செய்து, பரிந்துரை அறிக்கையை முறைப்படி அளித்து வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) ஆகிய அமைப்புகளுக்கும், மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை உள்ளிட்ட நிர்வாகிகள், சமூக ஆர்வலரும் - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான கிதுரு ஃபாத்திமா, மன்றத்தின் இதுபோன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் முதுகெலும்பாக உள்ள நிதியாதாரத்தைத் தந்துதவிக்கொண்டிருக்கும் பேரவை அங்கத்தினர் அனைவருக்கும் அவர் அமைப்பின் சார்பில் நன்றி கூறினார்.
துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், விடுமுறையில் ஊர் வந்துள்ள - அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள், உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டியுபசரிப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை தலைமையில் அதன் அங்கத்தினர் செய்திருந்தனர்.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், கடந்தாண்டு (2012) செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியன்று நடைபெற்ற - பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |