காயல்பட்டினம் நெய்னார் தெரு, ஆஸாத் தெரு, அப்பாபள்ளித் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொதுநிதியைக் கொண்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இச்சாலைப் பணிகளில் முறைகேடுகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும், உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்யுமாறும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நெய்னார் தெருவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, இதுவரை அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளில், 2 லட்சத்து 12 ஆயிரத்து 321 ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது என சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வறிக்கை அனுப்பியிருந்தார்.
இம்முறைகேட்டிற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.
இது ஒருபுறமிருக்க, நெய்னார் தெரு தவிர இதர அனைத்துப் பகுதிகளிலும் புதிய சாலை அமைக்கும் பணி நிறைவுற்றுள்ளது. நெய்னார் தெருவில் இடைநின்று போன சாலைப்பணிகள் தொடரப்படாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால், அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் அடிக்கடி இடறி விழுவது வாடிக்கையாகிவிட்டது. அவசரத் தேவைக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் அப்பகுதிக்கு வர தயக்கம் காண்பிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 22 வியாழக்கிழமை) மாலை 04.00 மணியளவில், நெய்னார் தெரு சாலைப்பணிகளை, நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளர் கனகராஜ் ஆய்வு செய்தார். அவருடன், காயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் சிவகுமார், பணி மேற்பார்வையாளர் செல்வமணி, திட்ட உதவிப் பொறியாளர் செந்தில் குமார், நெய்னார் தெரு சாலை ஒப்பந்தக்காரர் தலவாணிமுத்து ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
நெய்னார் தெருவில் புதிதாக அமைக்கப்படும் சாலையை முழுமையாக அளந்து, அதன் அளவுகளைப் பதிவு செய்துகொண்ட நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளர், சாலையில் பரவலாக சில இடங்களில் தோண்டி ஆய்வு செய்தார்.
பின்னர் காயல்பட்டணம்.காம் செய்தியாளரிடம் பேசிய அவர், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்தின் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.
கள உதவி:
பிரபு சுல்தான் ஜமாலுத்தீன் |