காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில், ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு கோப்பைக்கான – பள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான கால்பந்துப் போட்டிகள் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டின் இறுதிப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி ‘ஏ’ அணி வெற்றிபெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. விபரம் வருமாறு:-
ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு கோப்பைக்கான – பள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான கால்பந்துப் போட்டிகள் இம்மாதம் 15ஆம் தேதி துவங்கி, 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இச்சுற்றுப்போட்டியில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன.
20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 04.30 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி 'ஏ' அணியும், பிரகாசபுரம் ஜேம்ஸ் நினைவு மேனிலைப்பள்ளி அணியும் மோதின.
ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வீரர் அஃப்ரஸ் முதல் கோலை அடித்து, தனதணியின் கணக்கைத் துவக்கினார். 03ஆவது நிமிடத்தில், வாஸிஃப் இரண்டாவது கோலை அடித்தார். எதிரணியினர் சுதாரிப்பதற்குள், ஆட்டத்தின் 09ஆவது நிமிடத்தில், முஹம்மத் ஒரு கோலை அடித்து, தனதணியின் கணக்கை 3-0 என்றாக்கினார். பின்னர், முதற்பாதி ஆட்டம் நிறைவுறும் வரை ஈரணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இப்போட்டியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட ஜேம்ஸ் நினைவு மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் தங்கராஜுக்கு, ஆட்டத்தின் இடைவேளையின்போது, ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. பின்னர், ஆட்டம் முடிவடையும் வரை எந்த அணியும் கோல் அடிக்காததால், 4-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி ‘ஏ’ அணி வெற்றிபெற்றது.
இறுதிப்போட்டியைக் காண, நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு ஆர்வலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
மஃரிப் தொழுகை இடைவேளைக்குப் பின், இரவு 07.00 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், திருச்செந்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் எம்.ஞானசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கான கோப்பைகளையும், வீரர்களுக்கான சிறப்புப் பரிசுகளையும் வழங்கினார்.
அனைத்துப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், துணைத்தலைவர்களான ஹாஜி எஸ்.அக்பர்ஷா, ஹாஜி எஸ்.எம்.உஸைர், தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், உடற்கல்வி ஆசிரியர்களான எஸ்.வேலாயுதம், எல்.ஜமால் முஹம்மத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
அல்தாஃப் எண்டர்பிரைசஸ் - காயல்பட்டினம்.
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட மாநில அளவிலான கால்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |