பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு இணையதளம் மூலம் மருத்துவ உதவிகளை சேகரித்து வழங்கி வரும் “மைக்ரோகாயல்" அமைப்பின் சார்பில் அதன் உறுப்பினர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் / வெளிநாடு வாழ் காயலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் இம்மாதம் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதுகுறித்த செய்திக்குறிப்பு வருமாறு:-
கலந்தாலோசனைக் கூட்டம்:
அல்லாஹ்வின் பேரருளாலும் நம் காயல் நல்லுள்ளங்களின் பேராதரவாலும் கடந்த ஒன்றரை வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் இயங்கி வரும் ‘மைக்ரோகாயல்’ அமைப்பை, மருத்துவத்திற்கு மட்டுமின்றி கல்வி போன்ற ஏனைய துறைகளில் போதிய பொருளாதார உதவி கிடைக்காமல் அல்லல்படும் (காயல்பட்டினத்தைச் சேர்ந்த) மக்களும் பயனுறும் வகையில் அவர்களுக்கும் 'இணையதளம் மூலம் உதவி திரட்டி' தன் சேவைகளை விரிவாக்கம் செய்து அறக்கட்டளையாக - ட்ரஸ்டாகப் பதிவு செய்திட அதன் அங்கத்தினரால் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வந்தது.
அந்த நோக்கத்திற்காகவும், கடந்த ரமழான் மாதத்தில் “மைக்ரோகாயல்" சார்பில் வெளியிடப்பட்ட வேண்டுகோளையடுத்து திரட்டபட்ட ஜகாத் - ஸதக்கா நிதியின் ஒரு பகுதியைக் கொண்டு 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' செயல்திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காகவும், இம்மாதம் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணியளவில், ‘மைக்ரோகாயல்’ ஹாங்காங் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.நூஹ் இல்லத்தில், கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள்:
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (தாய்லாந்து) அவர்கள் முன்னிலை வகித்தார். ‘மைக்ரோகாயல்’ ஒருங்கிணைப்பாளர் சாளை முஹம்மத் முஹ்யித்தீன் கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ இறைமறை வசனங்களையோதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
ஒருங்கிணைப்பாளர் உரை:
‘மைக்ரோகாயல்’ அமைப்பு துவங்கப்பட்டது முதல், கடந்த ஒன்றரை வருடங்களில் செய்யப்பட்ட சேவைகளையும், புதிதாகத் துவக்கப்பட்டுள்ள ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புடன் இணைந்து செயல்படவுள்ள தகவலையும் சாளை முஹம்மத் முஹ்யித்தீன் விளக்கிப் பேசினார்.
புதிய நிர்வாகிகள்:
பின்னர், ‘மைக்ரோகாயல்’ அமைப்பை, ‘மைக்ரோகாயல் அறக்கட்டளை - MICROKAYAL TRUST’ என்ற பெயரில் இயக்க முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக அறக்கட்டளைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகஅங்கத்தினரின் பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டது. அறக்கட்டளையில் அங்கம் வகிப்போர் பெயர் மற்றும் பொறுப்பு குறித்த விபரப் பட்டியல் வருமாறு:-
தலைவர்:
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்
கவுரவ ஆலோசகர்:
ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (தாய்லாந்து)
செயலாளர்:
சாளை முஹம்மத் முஹ்யித்தீன்
துணைச் செயலாளர்:
எஸ்.அப்துல் வாஹித்
பொருளாளர்:
கே.எம்.டி.சுலைமான்
துணைப் பொருளாளர்:
பி.ஏ.ஷேக்
அறங்காவலர்கள்:
01. ஜெ.செய்யித் ஹஸன்
02. எஸ்.ஏ.நூஹ் (ஹாங்காங்)
03. முஹம்மத் அலீ (துபை)
04. சாளை பஷீர் ஆரிஃப் (சென்னை)
05. எம்.எம்.முஜாஹித் அலீ
06. சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ் (சென்னை)
07. ஷாம் ஜவ்ஸகீ (அமெரிக்கா)
08. எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் (தம்மாம்)
09. மஸ்ஊத் (மலபார்)
10. ஜெ.அபுல் காஸிம் (சிங்கப்பூர்)
11. பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் (அபூதபீ)
12. எம்.எஸ்.ஸாலிஹ் (சென்னை)
பின்னர், ஜகாத் - ஸதக்கா மூலம் திரட்டபட்ட நிதியின் ஒரு பகுதியைக் கொண்டு, நமதூர் காயல்பட்டினத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து நீண்ட கருத்துக்கள் பரிமாற்றம் நடைபெற்றது. இத்திட்டத்தை மெருகூட்டி, வலிமைப்படுத்தும் வகையில் இக்கருத்துப் பரிமாற்றம் அமைந்திருந்தது.
மாற்றுமுறை மருத்துவ நூல்கள் அன்பளிப்பு:
பின்னர், மாற்றுமுறை மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்களை காயல்பட்டினத்தில் நடத்திட வேண்டியதன் அவசியம் குறித்து சாளை பஷீர் ஆரிஃப் விளக்கிப் பேசியதுடன், தான் படித்து சேகரித்து வைத்திருந்த ‘மாற்றுமுறை மருத்துவம்’ தொடர்பான புத்தகங்களை மைக்ரோகாயல் அறக்கட்டளைக்கு அவர் அன்பளிப்பாக வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – ‘மைக்ரோகாயல்’ அமைப்பை அறக்கட்டளையாகப் பதிவு செய்தல்:
‘மைக்ரோகாயல்’ அமைப்பை, 'மைக்ரோகாயல் அறக்கட்டளை - MICROKAYAL TRUST’ என பெயர் மாற்றம் செய்து, வரும் செப்டம்பர் மாத்திற்குள் அரசுப் பதிவு செய்வதெனவும், இதற்கான பொறுப்பை
எம்.எஸ்.எம்.மீராஸாஹிப்
எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்
ஆகியோரிடம் வழங்கியும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - ஜகாத், ஸதக்கா நிதி வழங்கியோருக்கு நன்றி:
இணையதளங்கள், துண்டுப் பிரசுரங்கள், மின்னஞ்சல்கள் மூலம் ‘மைக்ரோகாயல்’ விடுத்த ரமழான் வேண்டுகோளை ஏற்று, ஜகாத் - ஸதக்கா நிதிகளை தாராளமாக வழங்கியுதவிய அனைத்து காயலர்களுக்கும் - அதிலும் குறிப்பாக தங்கள் மன்ற உறுப்பினர்கள் மூலம் பெறப்பற்ற ஜக்காத் நிதியை, ‘மைக்ரோகாயல்’ அமைப்பிற்கு வழங்கிய காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் - KCGC, பெங்களூரு காயல் நல மன்றம் (KWAB) ஆகிய அமைப்புகளுக்கும் ‘மைக்ரோகாயல்’ தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது. ஜஸாக்குமுல்லாஹு கைரா...
தீர்மானம் 3 – 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' செயல்திட்டம்:
மைக்ரோ காயலின் நீண்ட நாள் கனவாகிய 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துமத் வகையில், வெள்ளோட்டமாக (Pilot) ஜகாத் பெறத் தகுதியான (குறிப்பாக அநாதைகள், விதவைகள், ஊனமுற்றவர்கள், வறிய முஅத்தின்கள், புதிதாக இஸ்லாமைத் தழுவிய வறியவர்கள், அடிப்படை வருமானமில்லாதோர் - No breadwinners என) ஐம்பது குடும்பங்களுக்கு (ஒரு குடும்பத்திற்கு இரண்டு பேர் வீதம் மொத்தம் நூறு பேருக்கு) வரும் செப்டம்பர் மாதத்திலும், பின்னர் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அடுத்த வருட ஆரம்பத்திலும் 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' அடையாள அட்டையை வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இத்திட்டம், நமதூர் கே.எம்.டி. மருத்துவமனையை நம் மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டுமென்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகத்தினரிடமும் கலந்தாலோசித்து, அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று, இந்த அட்டையை அறிமுகப்படுத்த
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத்,
சாளை முஹம்மத் முஹ்யித்தீன்,
ஜெ.செய்யித் ஹஸன்
ஆகியோரடங்கிய நால்வர் குழுவை நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
அதுபோல, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை காயல்பட்டினத்தில் பகுதி வாரியாகக் கண்டறிய
எஸ்.அப்துல் வாஹித்,
பி.ஏ.ஷேக்,
எம்.ஏ.இப்ராஹிம் (48),
கே.எம்.டி.சுலைமான்,
ஜெ.செய்யித் ஹஸன்
ஆகியோரடங்கிய ஐவர் குழுவை நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இத்திட்டத்தின் மூலம், ஒராண்டிற்கு அதிகபட்சமாக ருபாய் 10,000 வரையிலான அடிப்படை மருந்து மற்றும் மருத்துவ வசதிகளை பயனாளிகள், நமதூர் கே.எம்.டி. மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளலாம்.
தீர்மானம் 4 – மாற்றுமுறை மருத்துவ விழிப்புணர்வு முகாம்:
வரும் ஹஜ் பெருநாள் விடுமுறையில், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கான மாற்றுமுறை மருத்துவ விழிப்புணர்வு முகாமை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இதற்காக,
சாளை பஷீர் ஆரிஃப்,
எஸ்.அப்துல் வாஹித்,
மொகுதூம்
ஆகியோரடங்கிய மூவர் குழுவை நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - புதிதாகத் துவக்கப்பட்டுள்ள ‘ஷிஃபா’ அமைப்புக்கு வாழ்த்து:
பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களுக்கு - மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு 'ஒருங்கிணைந்த மருத்துவ சேவை' என்ற நீண்ட நாள் கனவின் விடியல் வெள்ளியாக, இம்மாதம் 11ஆம் தேதியன்று சுகப்பிரசவம் கண்டுள்ள 'ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்' மிகச் சிறப்பாக செயல்பட இக்கூட்டம் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.
எங்களின் ஒருங்கிணைப்பாளரும் செயலாளருமாகிய சாளை எம்.ஏ.சி.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்கள், ஷிஃபா துவக்க விழாவில் குறிப்பிட்டதைப் போன்று, 'ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்' அமைப்புடன் 'மைக்ரோகாயல் அறக்கட்டளை' என்றும் கைகோர்த்து செயல்பட ஆயத்தமாக உள்ளது என்பதனை இக்கூட்டம் அதிகாரப்பூர்வமாக, அகமகிழ்வோடு அறிவிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
‘மைக்ரோகாயல் அறக்கட்டளை’ அறங்காவலர் ஜெ.செய்யித் ஹஸன் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|