இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் காயல்பட்டினம் வருவதையொட்டி, இம்மாதம் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில், செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக, இம்மாதம் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காயல்பட்டினம் வருகை தருகிறார். இதனையொட்டி, அன்று மாலையில் காயல்பட்டினத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
பேராசிரியரை வரவேற்றல், நிகழ்ச்சி நிரலை வடிவமைத்தல் ஆகிய அம்சங்களைக் கூட்டப் பொருளாகக் கொண்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டம், இம்மாதம் 21ஆம் தேதி புதன்கிழமை இரவு 08.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அதன் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்றது.
கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி வாவு எஸ்.சித்தீக், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கட்சியின் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், மாணவரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினத்தில் சுமார் இரண்டு மாத காலம் நடைபெற்ற தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாமின்போது, வழிகாட்டுப் பணிகளைச் செய்தமைக்காக, நகர முஸ்லிம் மாணவர் பேரவையைப் பாராட்டி, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் குறித்து கூட்டத்தில் அனைவருக்கும் விளக்கப்பட்டது.
தமதில்லத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்து, ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் ஆகியோர் அழைப்பிதழை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினர்.
கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - காயல்பட்டினம் வருகை தரும் பேராசிரியருக்கு வரவேற்பு:
எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலம் காயல்பட்டினம் வருகை தரும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை, கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் வரை திரளாகச் சென்று வரவேற்று, கொடி அணிவகுப்புடன் ஊருக்கு அழைத்து வருவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு:
நடப்பு கூட்டத்தில் பெறப்பட்ட அழைப்பின் அடிப்படையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், வாவு குடும்பத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில், பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென, கட்சி அங்கத்தினர் அனைவரையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 - செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி:
தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் வருகையையொட்டி, ஆகஸ்ட் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் நகர முஸ்லிம் லீக் அங்கத்தினர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |