காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி, கடந்த மே மாதம் 31ஆம் தேதியன்று பணி நிறைவு பெற்றுள்ள எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபாவின் கல்விச் சேவையைப் பாராட்டியும், கடந்த ரமழான் மாதத்தில் நகர் முழுக்க அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் - இரவு சிறப்புத் தொழுகையை வழிநடத்திய - பள்ளியின் ஹாஃபிழ் மாணவர்களைப் பாராட்டியும், பள்ளி நிர்வாகத்தின் சார்பில், இம்மாதம் 23ஆம் தேதி (நேற்று) வெள்ளிக்கிழமையன்று, பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர் ஹாஃபிழ் கே.எம்.ஏ.ஷேக் முஹம்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவ்ககி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியரின் பணிக்கால அனுபவங்களை நினைவுகூர்ந்து அவர் உரையாற்றினார்.
பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், பள்ளியின் முன்னாள் மாணவர் ஹாஜி எம்.ஏ.செய்யித் இப்றாஹீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், பள்ளியின் பணி நிறைவுபெற்ற தலைமையாசிரியரைப் பாராட்டி, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி தலைவர் கேடயம் வழங்க, பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா பெற்றுக்கொண்டார்.
அடுத்து, பள்ளியின் இந்நாள் - முன்னாள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் கங்காதரன் ஐ.ஏ.எஸ். ஆகியோருக்கு விழா மேடையில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பின்னர், கடந்த ரமழான் மாதத்தில், காயல்பட்டினம் நகரின் அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் எனும் சிறப்பு இரவுத் தொழுகையை வழிநடத்தியமைக்காக, திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள - பள்ளியின் 32 ஹாஃபிழுல் குர்ஆன் மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிகளை, பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ நெறிப்படுத்தினார். நன்றியுரை, நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இவ்விழாவில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நன்றி:
எல்.கே.மேனிலைப்பள்ளி இணையதளம்
[செய்தியின் படங்கள் அகற்றப்பட்டன @ 16:45 / 24.08.2013] |