காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டமொன்றிலுள்ள தென்னை மரத்தில், விஷம் நிறைந்த கடந்தை வண்டுகள் பெரிய அளவில் கூடு கட்டியிருந்தது. பல நாட்களாக அக்கூட்டைப் பார்த்தவாறு அப்பகுதியைக் கடந்து செல்லும் சிறுவர் கூட்டம், அதை தேன் கூடு என்றெண்ணி அவ்வப்போது கல்லெறிவது வாடிக்கையாக இருந்தது.
கூடு கலைக்கப்பட்டால், விஷ வண்டுகள் அனைவரையும் தீண்டி விடும் என்று அஞ்சிய அப்பகுதி மக்கள், அப்பகுதியை உள்ளடக்கிய 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாதிடம் முறையிட்டனர். அதனையடுத்து, அவர் கேட்டுக்கொண்டதன் பேரில், திருச்செந்தூர் தீயணைப்புத் துறை நிலைய மேலாளர் என்.நட்டார் ஆனந்தி தலைமையில், சண்முகம், பி.இசக்கி, சகாய ராஜ், முருகேசன், சின்னத்துரை, சுந்தரவேல், ராஜ்குமார் உள்ளிட்ட தீயணைப்புத் துறை வீரர்கள், இன்று மாலை 06.30 மணியளவில் தீயணைப்பு வாகனத்தில் காட்டுத் தைக்கா தெருவை வந்தடைந்தனர்.
கூட்டிற்கருகில் யாரும் நிற்காதவாறும், கூட்டை நோக்கி யாரும் வெளிச்சத்தைப் பாய்ச்சாதவாறும் பார்த்துக் கொண்ட அவர்கள், தலைக்கவசத்தை அணிந்துகொண்டு களத்திலிறங்கினர். உயரமான கழியொன்றில் பெரிய அளவில் துணியைப் பொதிந்து கட்டி, அதில் பெட்ரோல் ஊற்றி தீப்பந்தமாக்கினர்.
பரந்து விரிந்த நிலையில் தீ எரிந்ததும், தீப்பந்தத்தை ஒரே விடுத்தமாக கடந்தை கூட்டின் மீது அவர்கள் காண்பிக்கவே, கூடு மொத்தமாக எரிந்ததையடுத்து அனைத்து கடந்தை வண்டுகளும் எரிந்து கரிந்து கீழே விழுந்தன. இதனால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவல்:
ஆசிரியர் மு.அப்துல் ரசாக்
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |