இந்திய நாட்டின் 67ஆவது சுதந்திர நாள் இம்மாதம் 15ஆம் தேதி வியாழக்கிழமையன்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வளாகத்தில், அன்று காலையில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. துளிர் பள்ளி செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
துளிர் பள்ளி குழந்தைகளுடன் இணைந்து சிறப்பாசிரியர்கள் இறைவாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
காயல்பட்டினம் நஸூஹிய்யா மத்ரஸாவின் நிறுவனர் ஹாஜி ஏ.டபிள்யு.கிழுறு முஹம்மத் ஹல்லாஜ் இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றினார்.
துளிர் திட்டப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் இசட்.சித்தி ரம்ஸான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பாசிரியர் ரேவதி தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.
இவ்விழாவில், சென்னை தி.நகர் எல்.கே.எஸ்.கோல்டு ஹவுஸ் அதிபர் ஹாஜி எஸ்.செய்யித் அஹ்மத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். குழந்தை வளர்ப்பு, ஒழுக்கம், சுத்தம் உள்ளிட்டவை குறித்து துளிர் பள்ளி குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினார்.
பின்னர், துளிர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நன்றியுரை, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளி குழந்தைகள், பெற்றோர், நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பூந்தி, பனிக்கூழ், குளிர்பானம், உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
சுதந்திர நாள் விழா ஏற்பாடுகளை, துளிர் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் அறிவுறுத்தலின் படி, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியையர் செய்திருந்தனர். |