இந்திய நாட்டின் 67ஆவது சுதந்திர நாள் இம்மாதம் 15ஆம் தேதி வியாழக்கிழமையன்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, அன்று காலை 08.30 மணியளவில், சஊதி அரபிய்யாவிலுள்ள - உலக முஸ்லிம்களின் புனிதமிக்க நகர்களான மக்கா, மதீனா ஆகியவற்றின் நுழைவாயிலான ஜித்தாவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் இந்திய துணைத் தூதர் ஃபாயிஸ் அஹ்மத் கித்வாய் இவ்விழாவில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து, இந்திய குடியரசுத் தலைவர் ப்ரணாப் முகர்ஜி ஹிந்தி மொழியல் ஆற்றிய உரையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து உரையாற்றினார்.
அவ்வுரையின் ஆங்கில - ஹிந்தி மொழிகளிலான நகல்கள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, ஜித்தாவிலுள்ள இந்திய சர்வதேச பள்ளியில் பயிலும் மணாவ-மாணவியர், இந்திய நாட்டுப் பற்றுப் பாடல்களை, தமதினிய குரல்களால் பாடி, அனைவரின் கரவொலியுடன் கூடிய பாராட்டைப் பெற்றனர்.
இவ்விழாவில், இந்திய நாட்டின் - காயலர்கள் உள்ளிட்ட தமிழர்கள் மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் சுதந்திர நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
விழாவின் நிறைவில் அனைவருக்கும் இனிப்பு பலகாரங்கள், தேனீர் மற்றும் குளிர்பானம் பரிமாறப்பட்டது.
செய்தி & படங்கள்:
Y.M.ஸாலிஹ் (மக்கா)
மூலமாக
ஜட்னி S.A.K.செய்யித் மீரான் (ஜித்தா) |