காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் - ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி, இம்மாதம் 15 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. 20ஆம் தேதியன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், பிரகாசபுரம் ஜேம்ஸ் நினைவு மேனிலைப்பள்ளியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப்பள்ளி ‘ஏ’ அணி, 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றது.
இப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தும் சாதனைகள் எதுவாயினும், அவர்களுக்கு அந்தந்த இடங்களில் வழங்கப்படும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை - பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் - பள்ளியின் மாணவர் ஒன்றுகூடலின்போது அனைத்து மாணவர்கள் முன்னிலையில் வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், இச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணியைப் பாராட்டி, அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், இம்மாதம் 22ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 09.15 மணியளவில் நடைபெற்ற மாணவர் ஒன்றுகூடலின்போது (அசெம்ப்ளி) சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி முன்னிலை வகித்தார். பள்ளியின் அரபி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
பின்னர் உரையாற்றிய பள்ளியின் தலைமையாசிரியர், நடைபெற்று முடிந்த - எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பைக்கான - பள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளமைக்காக தம் பள்ளி அணியை மனதாரப் பாராட்டுவதாகக் கூறினார்.
இதுகுறித்து, பள்ளி தலைவர் டாக்டர் அஷ்ரஃபுக்கு தகவல் தெரிவித்தபோது, மகிழ்ச்சி தெரிவித்த அவர், “படிப்பிலும் நம் பள்ளி மாநில அளவில் சாதனை புரிய வேண்டும்” என்று தனது ஆவலை வெளிப்படுத்தியதாகக் கூறினார்.
இந்த வெற்றிக்காக உழைத்த அணியின் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களான வேலாயுதம், ஜமால், அணி ஒருங்கிணைப்புப் பணிகளை சிறமேற்று செய்திட்ட பள்ளியின் முன்னாள் மாணவர் எம்.சதக், பயிற்சியளித்த பள்ளியின் முன்னாள் மாணவர் பஷீர் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அவர் நன்றி கூறினார்.
பின்னர், எல்.கே.லெப்பைத்தம்பி - எஸ்.ஏ.சுலைமான் நினைவு கால்பந்துப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
பின்னர், அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
(மேலுள்ள குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!)
கடந்தாண்டு நடத்தப்பட்ட மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் வெற்றிபெற்றமைக்காக, எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், பள்ளி அணிக்கு நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |