தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 15 எம்.எல்.ஏ. தொகுதிகளிலும், 2 எம்.பி. தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களைப் பெற வேண்டும்; அதுவரை எங்களின் லட்சியப் பயணம் வீறு கொண்டு எழும் என காயல்பட்டினத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
இம்மாதம் 25ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க காயல்பட்டினம் வந்திருந்த அவர், சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
>> தேசிய ஒருமைப்பாடு
>> சமய நல்லிணக்கம்
>> சிறுபான்மையினரின் தனித்தன்மைகளைக் காத்தல்
என்ற மூன்று லட்சியங்களை முன்வைத்து செயல்படுகிறது.
பள்ளிவாசல், கபரஸ்தான், ஷரீஅத் அடிப்படையில் திருமணம், வக்ஃபு, தாடி, தொப்பி இவைகளெல்லாம் எங்களுடைய கலாச்சார தனித்தன்மைகளை அடையாளப்படுத்திக் காட்டுகின்றன.
பள்ளிவாசலை மையமாகக் கொண்டு மஹல்லா ஜமாஅத் அமைப்புகள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொருத்த வரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத்துகள் உள்ளன. ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்தும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்டிருக்கின்றன.
3 நாட்கள் பெருநாளைக்கு முடிவு கட்டுங்கள்!
இந்த மஹல்லா ஜமாஅத்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்பது எங்களுடைய கொள்கை. தமிழ்நாட்டில் இன்று முஸ்லிம்களிடையே 58 இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால், அதில் நாங்கள் மட்டும்தான் மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டில் கவலைப்படுகிறோம். அக்கறை காட்டுகிறோம்.
சில இயக்கங்கள் பள்ளிவாசலைப் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து, போட்டி பள்ளியை ஏற்படுத்துகிறார்கள். தங்கள் இயக்கத்தின் பெயரால் தனி ஜமாஅத்தை உருவாக்குகிறார்கள். திருமணப் பதிவேட்டைக் கூட தங்கள் இயக்கத்தின் பெயரால் அமைத்துக் கொள்கிறார்கள். இதன் விளைவு நோன்புப் பெருநாளும், ஹஜ்ஜுப் பெருநாளும் மூன்று நாட்களும், நான்கு நாட்களும் நடைபெறுகின்றன.
இந்துக்கள் தீபாவளியையும், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸையும் ஒரே நாளில்தான் கொண்டாடுகிறார்கள். அவர்கள் இதில் குழப்பம் செய்வதில்லை. முஸ்லிம்கள் ஒரே நாளில் கொண்டாடாமல் இப்படி அடுத்தடுத்த நாளில் கொண்டாடுவது சமுதாயத்தை மற்றவர்களுக்கு மத்தியில் கேலிப் பொருளாகக் காட்டுகிறது. ஊடகங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மஹல்லா ஜமாஅத்துகள் அனைத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை அங்கீகரித்து அதன் வழிகாட்டுதலை ஏற்கின்றன. ஆனால், அவர்கள் ரோட்டிலே வந்து போராடுவதில்லை. சில இயக்கங்கள் தங்களை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காகவே வீதிகளில் இறங்குகின்றனர்.
அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள்!
ஐம்பது பேர், நூறு பேர், ஏன் ஆயிரம் பேர் கூடிவிட்டால் இது அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் பெரிய கூட்டமாகத் தெரிகிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான் அப்படித் தெரியும். ஆனால், உள்ளே வந்து பார்த்தால்தான் உண்மை புரியும்.
ஆர்ப்பாட்டம் செய்வதை வைத்து முஸ்லிம் சமுதாயத்தை எடை போடக்கூடாது. அவர்களை மஹல்லா ஜமாஅத்துகள் அங்கீகரிக்கிறதா என்று பாருங்கள். இதுதான் அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள்.
பள்ளிவாசல் என்பது இறைவனின் சொத்து. மஹல்லா ஜமாஅத் பள்ளிவாசல்கள் இறைவனுக்காக வக்ஃபு செய்யப்பட்டிருக்கும். ஆனால், போட்டி பள்ளியை ஏற்படுத்துகிறவர்கள் அந்த இயக்கத்தின் பெயராலேயே அவற்றைப் பதிவு செய்கிறார்கள்.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படிதான் முஸ்லிம்கள் திருமணம் செய்து கொள்ள முடியும். இன்று காதல் திருமணங்கள் சமூகப் பிரச்சினையாக மாறி, மோதல் உருவாகி வருகிறது. திருமணம் என்பதற்கு சில முறைகள் உண்டு. பெற்றோரின் சம்மதம் இல்லாமல் உறவினர்களுக்கு தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்வது என்பது ஏற்க முடியாது.
இஸ்லாமிய திருமணங்களில் பெண்ணின் சார்பாக அவரது தந்தை அல்லது தாத்தா, தாய்மாமன் அல்லது சகோதரர்கள் வக்கீலாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். அப் பெண் ணுக்கு கணவன் இல்லாத நிலை ஏற்பட்டால் இவர்கள்தான் பாதுகாவலர்கள். இப்பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டு என்பது 1500 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கித்தந்த ஒன்று. ஆனால், இன்றைக்கு ஒரு இந்துப் பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பு சொல்கிறது. இதை நாங்கள் ஆண்டாண்டு காலமாக நடைமுறைப்படுத்துகிறோம்.
இந்த உண்மைகளையெல்லாம் விளக்கிச் சொல்வதற்காகத்தான் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க கருத்தரங்குகளை ஒவ்வோர் ஊரிலும் நடத்தி வருகிறோம். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும் இக்கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளன. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
தமிழக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்!
திருமண கட்டாய பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதில் சில மாற்றங்கள் தேவை என வலியுறுத்தி கடந்த ஆட்சியின்போது அதற்கென உத்தரவைப் பெற்றோம். இதன்படி, படிவம் 1ஏ முஸ்லிம்களுக்கென உருவாக்கப்பட்டது. இந்த படிவத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணங்களை சார்பதிவாளர் அலுவலகங்களில் அப்படியே பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் இப்போது நடைமுறை என்னவென்றால் சார்பதிவாளர் அலுவலகங்களில் கணவன் வர வேண்டும்; மனைவி வர வேண்டும்; சாட்சிகள் வர வேண்டும் என சொல்லுவது ஏன் என்று புரியவில்லை. இதை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். தமிழக முதல்வர் இதில் தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் பணியில் இருப்போர் திருமணம் முடிந்தும் பதிவு செய்ய முடியாமல் தங்கள் வாழ்க்கை துணையை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, தமிழக அரசு இதில் தகுந்த உத்தரவை பிறப்பிப்பது அவசியம்.
இ.யூ.முஸ்லிம் லீக் யாருக்கும் விரோதி அல்ல!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய அளவில் செயல்படும் அரசியல் கட்சி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறோம். கேரளாவில் கூட்டணி அமைச்சரவையில் எங்களுடைய அமைச்சர்கள் உள்ளனர். மத்தியிலும், கேரளாவிலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளோம். தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் பாரம்பரிய உறவு உள்ளது. ஜனநாயக - சமய சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு எந்த கட்சியுடனும் விரோதம் கிடையாது. பாரதீய ஜனதா கட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்லுகின்றதோ அதன்படி செயல்பட்டால் பிரச்சினை இல்லை. மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என நமது நாடு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விரும்புகின்ற மதத்தைப் பின்பற்றவும், மதக் கலாச்சார தனித்தன்மைகளைக் காப்பாற்றவும் அரசியல் சாசனம் உறுதி வழங்கியுள்ளது.
ஆனால், பாரதீய ஜனதா கட்சி இந்து ராஷ்டிரம் என சொல்கிறது. தனியார் சட்டங்களுக்கு பதிலாக பொது சிவில் சட்டத்தை முன்னிலைப்படுத்துகிறது. பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளருக்காக சொல்லப்படக்கூடிய நரேந்திரமோடி தன்னை இந்து தேசியவாதி என்கிறார். அவர் தன்னை தேசியவாதி என்று சொல்லவில்லை. இந்து தேசியவாதம் என்றால் முஸ்லிம்கள் தேசியவாதிகள் இல்லையா?
குஜராத்தில் அவரது ஆட்சியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எண்ணற்ற கிராமங்களில் இன்று முஸ்லிம்களே இல்லை. 600க்கும் மேற்பட்ட பள்ளிவாசல், மதரஸா. தர்காகள் தரைமட்டமாக்கப்பட்டன.
நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து இனி இப்படி நடக்காது என உறுதி கூறுவதற்கு பதிலாக, காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்லும்போது நாய்க்குட்டி சிக்கியது போன்ற உணர்வு எனக்கும் இருந்தது என கேலி பேசுகிறார் என்றால் அவரை எப்படி ஏற்பது? அப்படிப்பட்ட உணர்வு உள்ளவர்களோடு தி.மு.க. கூட்டணி வைக்காது.
ராமகோபாலன் அவதூறுக்கு கண்டனம்!
இந்து முன்னணித் தலைவர் இராமகோபாலன் காயல்பட்டின முஸ்லிம்கள் இரவு 11 மணிக்கு மேல் ப்ரவ்சிங் சென்டரில் அமர்ந்து கொண்டு வெளிநாட்டு தீவிரவாதிகளோடு தகவல் பரிமாற்றம் செய்கிறார்கள் என்ற அபாண்டத்தை சுமத்தியிருக்கிறார். அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இங்குள்ள இரவு 11 மணிக்கு மேல்தான் அங்கு உரையாடுவது வசதியாக இருக்கும். இந்த நேர இடைவெளியைப் புரிந்து கொள்ளாமல் நச்சுக் கருத்துக்களைப் பரப்பி மோதலை உருவாக்கத் தூண்டுவது கண்டிக்கத்தக்கது.
15 எம்.எல்.ஏ.க்கள்; 2 எம்.பி.க்கள்:
தமிழ்நாட்டைப் பொருத்த வரை, 234 சட்டமன்ற தொகுதிகளும், 39 நாடாளுமன்றத் தொகுதிகளும் உள்ளன. 7 கோடியே 30 லட்சம் மக்கள் உள்ளனர். அதில் ஐந்தரை கோடி பேர் வாக்காளர்கள். முஸ்லிம்கள் 55 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். நாங்கள் விரும்புகிற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் 25 முஸ்லிம்கள் சட்டமன்றத்தில் இடம் பெற வேண்டும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் குறிக்கோள் 15 சட்டமன்ற தொகுதிகளிலும், 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாங்கள் உறுப்பினர்களாக வர வேண்டும். அது வரையிலும் எங்கள் அரசியல் பயணத்தில் நாங்கள் முனைப்புடன் செயலாற்றுவோம்.
இவ்வாறு, காயல்பட்டினத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர கவுரவ ஆலோசகர் ஹாஜி வாவு சித்தீக், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன், மாவட்ட நிர்வாகி ஏ.கே.மஹ்மூது சுலைமான், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயிதேமில்லத் பேரவை காயல்பட்டினம் நகர கிளை அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், மாணவரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர நிர்வாகிகளான எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.எச்.அப்துல் வாஹித், எம்.இசட்.சித்தீக், பெத்தப்பா சுல்தான், ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், ஹாஜி எஸ்.டி.கமால், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், அரபி ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பின் அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!
கள உதவி:
A.R.ஷேக் முஹம்மத் |