ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ‘ஓர் இறை’, ‘ஓர் மறை’, ‘ஓர் பிறை’ என்ற தலைப்பின் கீழ், ஒருநாள் கருத்தரங்க நிகழ்ச்சி, இம்மாதம் 24ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கருத்தரங்கம்:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால் கடந்த ஷவ்வால் 18, (24-08-2013) சனிக்கிழமை அன்று துளிர் கேளரங்கத்தில் ஓர் இறை, ஓர் மறை, ஒர் பிறை என்ற மையக்கருத்தில் பிறை கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
காலை சிறப்பு அமர்வு:
காலை நிகழ்ச்சிகளில் முதலாவதாக பிறை சார்ந்த இறைமறையின் வேத வசனங்களை மொழிபெயர்ப்போடு ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸூர் ரஹ்மான் ஓதி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ‘ஹிஜ்ரி கமிட்டி ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் ஹிஜ்ரீ கமிட்டியின் நிலைபாடுகளை சகோதரர் ஏ.எஸ்.அஹ்மத் ஸாஹிப் சுருக்கமாக விளக்கினார்.
மவ்லவீ அப்துர்ரஷீத் உரை:
அதன் பின்னர் சுமார் 10:30 மணியிலிருந்து 11:45 மணி வரை ‘பிறை குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஹதீஸ்களும், மறக்கடிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களும்’ என்ற தலைப்பில் மவ்லவீ அப்துர்ரஷீத் உரையாற்றினார்.
தற்போதுள்ள முஸ்லிம்கள் பின்பற்றிவரும் பிறை நிலைபாடுகளையும், நாம் ஆராய்வதாக இருந்தால் அதுபற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை அறிந்திடவேண்டும் என்றும், முக்கியமாக ரமழான் மற்றும் பெருநாள் தினங்களைத் தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா என்பதையும் முதலில் தெளிவாக விளங்கிட வேண்டும் என்றும், இவற்றைத் தெரிந்து கொண்டாலே எது சத்தியம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கி விடும் என்றும் கூறினார்.
மேலும்,
'அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு பிடியுங்கள். அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை விடுங்கள். எனவே அவைகள் உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாக கணக்கிட்டு கொள்ளுங்கள்.'
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரழி) நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் # 7306
''அல்லாஹ் நிச்சயமாக பிறைகளை தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவைகளை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவைகளை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவைகள் உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி)) நூல்: ஸஹீஹ் இப்னு ஹீசைமா # 1789
போன்ற ஹதீஸ்களையும் அதில் உள்ளடங்கியுள்ள அல்அஹில்லா, மவாகீத், மவாகீத்து லின்னாஸ், லி ருஃயத்திஹி, ஃபஇன்கும்ம அலைக்கும், ஃபக்துரு, ஃபஉத்தூ போன்ற சொற்களையும் விளக்கிப் பேசினார்.
விஞ்ஞானி அலீ மனிக்ஃபான் உரை:
தேனீர் இடைவேளைக்குப் பின்னர், நண்பகல் 11:50 மணியளவில் பிறை விளக்கக் காட்சிகளோடு பிறைகளை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பது பற்றி, விஞ்ஞானி அலிமனிக்ஃபான் உரை நிகழத்தினார்.
ஒரு மாதத்தின் முதல் நாளை நாம் சரியாகக் கணக்கிட வேண்டுமென்றால் முந்திய மாதத்தின் பிறையின் படித்தரங்களில் உள்ள தேய்பிறைகளையாவது கண்டிப்பாகப் பார்த்து, கணக்கிட்டு வந்திருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்திய அலிமனிக்ஃபான், தேய்பிறைகளைக் கணக்கிடாமல் விட்டுவிட்டால், நாம் பார்க்கின்ற பிறை எந்த நாளைக் காட்டுகிறது என்பதை தோராயமாக அறிந்து கொள்ளும் வழிமுறையையாவது தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
அவரது உரையின் சுருக்கம்:
அதாவது மாதம் என்பது 29 நாட்கள் அல்லது 30 நாட்களைக் கொண்டது. ஒரு மாதம் எத்தனை நாட்கள் கொண்டது என்பதை முன்கூட்டியே நாம் தோராயமாக அறிய வேண்டுமானால், மாலை சூரியன் முழுமையாக மேற்கு நோக்கி மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90 டிகிரியில்) நிலைபெற்றிருந்தால் அந்த பிறை 07 (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 08ஆவது நாளைக் (மாதம் 30 ஆக இருந்தால்) காட்டுகிறது.
மாலை சூரியன் முழுமையாக மேற்கில் மறையும்போது, பிறை முழு நிலவு அளவில் கிழக்கு திசையில் உதித்துக் கொண்டிருந்தால், அந்த பிறை பவுர்ணமி நாளை தெரிவிக்கிறது. ஒரு மாதத்தில் பவுர்ணமி பெரும்பாலும் 14ஆம் நாளில் (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 15ஆம் நாளில் வரும் (மாதம் 30 ஆக இருந்தால்). அந்நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனத்தையும் கிழக்கில் சந்திரன் உதிப்பதையும் காணலாம்.
அதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில், நாம் நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருந்தால், அந்தப் பிறை 21 (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 22 (மாதம் 30 ஆக இருந்தால்) தேதியை காட்டும் பிறையாகும். இதுதான் பொது விதி.
இதல்லாமல் சில வருடங்களில் சில மாதத்தில் (Rare occurrence) பிறை 06 இல் முதல் பாதியும் 13இல் பவுர்ணமியும், பிறை 23இல் அரை வட்டும் வரும். இதையும் கணக்கீட்டின் படி முற்கூட்டியே அறிய முடியும்.
மேலும் சந்திரனின் தேய்ந்து வரும் மன்ஸில்களில் நாம் உற்று நோக்கிக்கொண்டு வந்தால், எந்தக் கிழமையில் சந்திரனின் ஒளி பிறையின் வடிவத்தை அடைகின்றதோ, அதே கிழமைதான் எதிர்வரும் சந்திர மாதத்தின் முதல் தினமாக இருக்கும். பிறந்த பிறையை மட்டும் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டம் என்று கூறுவோர், சந்திரனில் ஏற்படும் பிறைகளின் படித்தரமான மனாஜில்களை منازل புறக்கண்ணால் அறிந்துகொள்ளும் இதுபோன்ற முறையை என்றைக்காவது மக்களுக்கு சொல்லி இருக்கிறார்களா?
இவ்வாறு, விஞ்ஞானி அலி மனிக்ஃபான் பேசினார்.
மவ்லவீ முஹம்மத் கடாஃபீ உரை:
அதன்பின்னர் லுஹர் தொழுகை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது.
லுஹர் தொழுகைக்கான இடைவேளைக்குப் பிறகு மதியம் 01:15 மணியளவில் குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டல் படி ஒரு நாளின் துவக்கம் எப்போது என்பது பற்றி மவ்லவீ முஹம்மத் கடாஃபி MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்.
ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் மஃரிபு அல்ல என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளைக் கூறிய அவர், மாற்றுக் கருத்துடையோரின் பலஹீனமான ஆதாரங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
பிற்பகல் 02.00 மணி முதல் 03.00 மணி வரை மதிய உணவிற்கான இடைவெளி விடப்பட்டது. பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட சுமார் 120க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
கேள்வி - பதில் நிகழ்ச்சி:
உணவு இடைவேளைக்குப் பின்னர் 03.00 மணி முதல் 04.00 மணி வரையும், பயிற்சிப்பட்டரையில் கலந்து கொண்டோரின் கேள்விகளுக்கு மவ்லவீ அப்துர்ரஷீத் ஸலஃபீ விளக்கமளித்தார். ஹிஜ்ரீ கமிட்டி மஷூராவின் முடிவின் படி, அனைத்து கேள்விகளும் எழுத்துப் பூர்வமாகவே பெறப்பட்டன. அஸர் தொழுகையும் ஜமாஅத்தாக (கூட்டாக) அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது. பின்னரும் 05:30 மணி வரை எஞ்சிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.
மாலை - பொது அமர்வு:
மாலை 05:30 மணியளவில் பொதுமக்களுக்கான கருத்தரங்க நிகழ்வுகள் துவங்கின.
துவக்கமாக, ‘குர்ஆன் சுன்னா கூறும் நாட்காட்டியை அறிவோம்’ என்ற தலைப்பில் அழைப்பாளர் அப்துல் ஹமீத் உரை நிகழ்த்தினார்.
பல்வேறு குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி பேசிய அவர், ஹிஜ்ரீ நாட்காட்டியே குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த நாட்காட்டியாகும் என்பதை மஃரிப் வேளை வரை தெளிவாக விளக்கிப் பேசினார்.
செங்கிஸ்கான் உரை:
அதனைத் தொடர்ந்து மஃரிபு தொழுகை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது.
தொழுகை முடித்து தேனீர் இடைவேளைக்குப் பின்னர் இரவு 07:15 மணியளவில், ‘தவறுகள் நிறைந்த கிரிகோரியன் நாட்காட்டியை இஸ்லாம் அங்கீகரிக்கிறதா?’ என்ற தலைப்பில் அழைப்பாளர் செங்கிஸ்கான் உரை நிகழ்த்தினார்.
கிரிகோரியன் நாட்காட்டியில் ஏற்பட்ட இடைச்செருகல்கள், குளறுபடிகள், மாற்றங்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், ஆங்கில நாட்காட்டியிலுள்ள ஒவ்வொரு மாதங்களின் பின்னனியைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.
நம் கைகளில் தவழும் இரத்தினக்கல்லான ஹிஜ்ரி நாட்காட்டியின் அருமை தெரியாத சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் மாறிவிட்டதாகக் கூறி வேதனை தெரிவித்த அவர், இந்த ஹிஜ்ரி நாட்காட்டியை, தங்களது சொந்தப் பணத்தை செலவளித்து வணிக நோக்கமில்லாமல் ஹிஜ்ரி கமிட்டி வெளியிடுகிறது என்றார்.
இந்த ஹிஜ்ரி கமிட்டி என்பது ஒரு இயக்கமோ, அமைப்போ அல்ல; மாறாக அல்லாஹ்வின் இந்த நாட்காட்டி மக்களிடையே நிலைபெற்று விட்டால் இந்த ஹிஜ்ரி கமிட்டியையே கலைத்து விடுவோம் என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
மவ்லவீ முஹம்மத் கடாஃபீ உரை:
அதனைத் தொடாந்து இரவு 08:30 மணிக்கு, ‘பிறையும் புறக்கண்ணும்’ என்ற தலைப்பில் மவ்லவீ முஹம்மத் கடாஃபி MISC உரையாற்றினார்.
ஹிஜ்ரி கமிட்டியினர் பிறைகளை புறக்கண்களால் பார்க்கவே தேவையில்லை என்று சொல்லப்படுவது அவதூறு என்றும், பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்கம் என்று நம்பியுள்ள பொதுமக்களும் இவர்களின் தவறான பிரச்சாரங்களை நம்பி, நாம் சொல்லும் சத்தியத்தை உள்வாங்கிடத் தவறிவிடுகின்றனர் என்றும், பிறைகளை புறக்கண்ணால் முறைப்படி பார்த்து வருபவர்கள் யார்? என்பது பற்றியும் விளக்கிப் பேசினார்.
பிறைகளை கணக்கிடுங்கள் என்று நாம் சொல்வதை ஏதோ ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கணிப்பொறியைத் தட்டிச் சொல்வதாக சிலர் நினைத்துக் கொண்டுள்ளனர் என்றும், தமிழக வரலாற்றில் பல வருடங்களாக பிறைகளின் படித்தரங்களை புறக்கண்களால் பார்த்தும், கணக்கீட்டின் மூலமும் கவனமாக அவதானிப்பவர்கள் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவருமில்லை என்பதை அறியத்தருவதாகவும் அவர் கூறினார். பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்களால் பார்ப்பது மார்க்க சட்டமில்லை என்பதை பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து விளக்கிப் பேசிய அவர், நேரமின்மை காரணமாக சுருக்கமாக தனதுரையை முடித்துக்கொண்டார்.
மீண்டும் கேள்வி - பதில் நிகழ்ச்சி:
பார்வையாளர்கள் எழுத்துப் பூர்வமாக வழங்கிய பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதைக் கருத்திற்கொண்டு, மவ்லவீ ஜூபைர் ஃபிர்தவ்ஸி முஹம்மதி அவர்களின் உரைக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தையும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
சுமார் 01:30 மணி நேரம் விளக்கப்பட்ட இக்கேள்வி-பதில் நிகழ்ச்சி இரவு 10.00 மணி வரை தொடர்ந்தது. கேள்விகளுக்கு அழைப்பாளர் சிராஜ், மவ்லவீ அப்துர்ரஷீத் ஆகியோர் தெளிவாக விளக்கமளித்தனர்.
நன்றியுரையைத் தொடர்ந்து, கஃப்பாராவுடன் கருத்தரங்க நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன - அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்ச்சி ஏற்பாடுகள்:
பின்னர் இஷா தொழுகையையும் ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சிகளை ஏ.எஸ்.அஹ்மத் ஸாஹிப் நெறிப்படுத்தினார். கருத்தரங்கத்திற்கு வருகை தர வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெண்களுக்கு தனி இடவசதியும் செய்யப்பட்டிருந்தது.
கருத்தரங்கம் நடைபெற்ற அன்று காலை 09:30 மணி முதல் மதியம் 01:30 மணி வரை ஆர்வமுள்ள 100 நபர்களுக்கு மட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும், பின்னர் மாலை 04:30 மணிமுதல் இரவு 09:30 மணி வரை பொதுமக்களுக்கான கருத்தரங்கம் என்றும் முறைபடுத்தப் பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு நமதூர் காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகளையும் சார்ந்த ஆண்கள், பெண்கள் உட்பட, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த ஆர்வமுள்ள சுமார் 300க்கும் அதிகமானோர் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர் - அல்ஹம்துலில்லாஹ்.
அசைபடப் பதிவு:
இப்பிறை கருத்தரங்கத்தின் அசைபட (வீடியோ) பதிவுகள் www.mooncalendar.in என்ற இணைய முகவரியில் இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
இவ்வாறு, ஹிஜ்ரீ கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.அப்துல் வாஹித்
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
M.N.அஹ்மத் ஸாஹிப் |