இன்று (ஆகஸ்ட் 27) காலையில் நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில், கற்புடையார் பள்ளி வட்ட தொகுப்பு வீடு வழக்கை தொடரவும், ஒருவழிப்பாதையான பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம், இன்று நண்பகல் 12.00 மணியளவில், நகர்மன்றக் கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது.
கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில்,
02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா,
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன்,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டப் பொருட்கள்:
இக்கூட்டத்தின் பொருட்களை நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் வாசித்தார்.
துவக்கமாக, காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் அரசால் கட்டப்பட்டு வரும் 169 தொகுப்பு வீடுகள் தொடர்பான கூட்டப் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டப் பொருள் வருமாறு:-
169 தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்திற்கெதிராக, 2011ஆம் ஆண்டில் - அப்போதைய நகர்மன்றத் தலைவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை, தொடர்ந்து நடத்திட தற்போதைய நகர்மன்றத் தலைவருக்கு அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட 14 உறுப்பினர்களில், 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி தவிர அனைவரும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அடுத்து, காயல்பட்டினம் ஒருவழிப்பாதையான பெரிய நெசவுத் தெருவில், தாயிம்பள்ளியிலிருந்து - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - எல்.கே.லெப்பை தம்பி சாலை, புதிய பேரூந்து நிலையம் வரை புதிய சாலை அமைப்பதற்கான மதிப்பீடு ரூபாய் 35 லட்சம் தொகைக்கு நகர்மன்ற அனுமதி வேண்டி மேசைப்பொருள் கொண்டு வரப்பட்டது. மேசைப்பொருள் வருமாறு:-
இத்தீர்மானத்திற்கு, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இது குறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!
நகர்மன்றத் தலைவர் அமெரிக்கா பயணம்:
கூட்டத்தின் நிறைவில் நகர்மன்றத் தலைவர் பேசினார். அமெரிக்க அரசின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டிலிருந்து 5 பேர் அமெரிக்க அரசின் செலவில் அந்நாட்டிற்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பயணிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து உறுப்பினர்களும் கரவொலியெழுப்பி அவருக்கு வாழ்த்து கூறினர்.
இது குறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அண்ணா விருது பெற்ற காவல்துறை ஆய்வாளருக்கு பாராட்டு:
கூட்டத்தின் நிறைவில், காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக, அண்மையில் தமிழக முதல்வரிடம் அண்ணா விருது பெற்றுள்ள ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் டி.பார்த்திபனுக்கு கூட்டத்தில் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபனைப் பாராட்டிப் பேசினார்.
நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் அவருக்கு சால்வை அணிவித்தார்.
அனைவரும் கரவொலி எழுப்பி, தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இது குறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!
தொடர்ந்து பேசிய அவர், இன்று போல என்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, நகர்மன்றத் தலைவருக்கும், துணைத்தலைவருக்கும் முழு ஒத்துழைப்பளித்து, இந்நகரை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இது குறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!
கூட்டத் துளிகள்...
>> கூட்டம் துவங்குகையில், கூட்டப் பொருள் வாசிக்கப்படுவதற்கு முன்பாக, நகராட்சியில் ரூபாய் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை, நகராட்சி அலுவலர்களால் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பியும், நகராட்சி ஆணையரிடம் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சியின் தற்காலிகப் பணியாளர்களான இருவர் மீது மட்டும் நகர்மன்றத் தலைவர் நடவடிக்கை கோரியிருப்பது குறித்து உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், நகராட்சி தற்காலிகப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நகர்மன்றம்தான் தீர்மானிக்க வேண்டுமென்பதாலேயே தான் அவ்வாறு செய்ததாகக் கூறினார். நகராட்சியின் நிரந்தர அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உயரதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், தானும் அவர்களிடம் தகவலளித்துள்ளதாகவும் கூறிய அவர், அவர்களது நடவடிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.
>> ஏற்கனவே நடைபெற்ற நகர்மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதுவரை செயல்வடிவம் பெறாதமை குறித்து நகராட்சி பொறியாளர் சிவகுமார், பணி மேற்பார்வையாளர் செல்வமணி ஆகியோரிடமும் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அவர்களும், ‘வழமை போல’ பல காரணங்களைக் கூறினர்.
>> சொந்தக் காரணங்களுக்காக நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கடிதம் அளித்திருந்த 01ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொருளாளர் செய்யித் முஹம்மத் அலீ உட்பட பலர் இக்கூட்டத்தில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
கூட்டரங்கை விட்டும் அனைவரும் வெளியேறிய பின்னர், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் மற்றும் உறுப்பினர்கள் சிலர் முன்னிலையில், 04ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா - அண்ணா பதக்கம் பெற்ற காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபனுக்கு சால்வை அளித்தார். கே.வி.ஏ.டி. அறக்கட்டளை தலைவர் ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர் உடனிருந்தார்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 5:40pm/2.9.2013] |