காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில், 70 மாணவர்களுடன், மக்தப் சுபுஹானிய்யா கோலாகலமாகத் துவக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் முவ்வொலி நாதாக்கள் ட்ரஸ்ட் சார்பில், “மக்தப் சுபுஹானிய்யா” என்ற பெயரில், மாணவர்களுக்கான இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்விப் பிரிவு இம்மாதம் 28ஆம் தேதி புதன்கிழமை (நேற்று) காலை துவங்கியது.
அன்று காலை 09.30 மணிக்கு துவக்கி விழா நிகழ்ச்சி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் முத்தவல்லி ஹாஜி எஸ்.ஏ.கே.மஹ்மூத் நெய்னா விழாவிற்குத் தலைமை தாங்கினார். நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். பள்ளியின் இமாம் ஹாஃபிழ் வி.எஸ்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று, ‘லுத்பில் இலாஹி...’ இறைவேண்டற்பா பாடினர்.
ஹாஜி எம்.ஏ.கிழுறு முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, மக்தப் சுபுஹானிய்யா குறித்து அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், வாழ்த்துரை நிகழ்ச்சி துவங்கியது. காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மவ்லவீ எஸ்.எம்.எச்.முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானீ பாக்கவீ, திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ தாஜுத்தீன் அஹ்ஸனீ, அதன் பேராசிரியர் மவ்லவீ நிஜாமுத்தீன் அஹ்ஸனீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மவ்லவீ ஊண்டி எம்.எம்.செய்யித் முஹம்மத் பாக்கவீ துஆ பிரார்த்தனை செய்ய, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
துவக்க விழா நிகழ்ச்சிகளில், திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக்கல்லூரியின் மாணவர்கள் சிறப்பழைப்பாளர்களாகவும், காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பார்வையாளர்களாகவும் கலந்துகொண்டனர்.
மக்தப் சுபுஹானிய்யா பாடப்பிரிவில், இரவணசமுத்திரத்தைச் சேர்ந்த மவ்லவீ தஸ்தகீர் ஜமாலீ முதல்வராகவும், பள்ளியின் இமாம்களான ஹாஃபிழ் வி.எஸ்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், மவ்லவீ எம்.இசட்.முஹம்மத் அப்துல் காதிர் மஸ்லஹீ, மவ்லவீ அலீ அக்பர் நூரீ ஆகியோர் ஆசிரியர்களாகவும் பணியாற்றவுள்ளனர்.
துவக்க விழா நிகழ்ச்சி துவங்குமுன், மக்தப் மாணவர்கள் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். (படங்களை விரிவுபடுத்திக் காண அவற்றின் மீது சொடுக்குக!)
பின்னர், இப்பாடப்பிரிவில் புதிதாக இணைந்துள்ள 70 மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள் அனைவருக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. ஃபாத்திஹா துஆ ஓதப்பட்டதைத் தொடர்ந்து, தஃப்ஸ் முழங்க - அரபி பாடல்கள் பாடப்பட்டு, அனைவரும் நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆறாம்பள்ளித் தெரு, பிரதான வீதி, கி.மு.கச்சேரி தெரு, அம்பல மரைக்கார் தெரு வழியாக மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை வளாகத்திற்குள் சென்று துஆ பிரார்த்தனை செய்தனர். பின்னர், மஹான்களின் அடக்கஸ்தலங்களில் ஜியாரத் செய்தவர்களாக, சதுக்கைத் தெரு வழியே கடந்து, பள்ளி வளாகத்தைச் சென்றடைந்தனர்.
நகர்வலத்தின் அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!
இந்நிறுவனத்தின் சொந்த பாடத்திட்டத்தின்படி, தஃப்ஸீர், அக்லாக், ஃபிக்ஹு, தஜ்வீத் உட்பட பல பாடப்பிரிவுகளைக் கொண்டு, 7 ஆண்டு பாட கால அளவின் கீழ் இந்த மக்தப் இயங்கவுள்ளது. துவக்க ஆண்டிற்கான பாடத்திட்டம் ஆயத்தமாக உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான பாடத்திட்டங்கள் அச்சு மற்றும் ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (படத்தை விரிவுபடுத்திக் காண அதன் மீது சொடுக்குக!)
அன்றாடம் காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும், பள்ளிக்கூட வார விடுமுறைக் காலங்களில் காலை 09.30 மணி முதல் லுஹர் நேரம் வரையிலும் மாணவர்களது பாட நேரங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்தப் பிரிவில் சேர மாதாந்திர கல்விக் கட்டணம் கிடையாது என்றும், சீருடை, புத்தகங்கள், பள்ளிப் பை அனைத்தும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளுக்குட்பட்டு மாணவர்களுக்கு சைக்கிளும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் மக்தப் சுபுஹானிய்யா பாடப்பிரிவை நிர்வகிக்கும் முவ்வொலி நாதாக்கள் ட்ரஸ்ட் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. |