நடப்பாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்காக, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில், இம்மாதம் 28ஆம் தேதி புதன்கிழமையன்று ஹஜ் கிரியைகள் குறித்த விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்லாண்டு காலமாக ஹஜ் வழிகாட்டியாகச் சென்று அனுபவம் பெற்ற - அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீஃப் மவ்லவீ கலந்துகொண்டு, ஹஜ் - ஜியாரத் கிரியைகள் குறித்து விளக்கிப் பேசியதோடு, நிறைவில் துஆ - பிரார்த்தனை செய்தார்.
அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளோருடன் நகர பொதுமக்கள் கட்டித் தழுவி - கைலாகு செய்து வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
இந்நிகழ்ச்சியில், நடப்பாண்டு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள ஆண்கள் - பெண்கள் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். பெண்களுக்காக, ஆஸாத் தெருவிலுள்ள ஜரூக்குல் ஃபாஸீ பெண்கள் தைக்கா (நெய்னாப்பா தைக்கா)வில் இடவசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில், அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
கடந்தாண்டு நடைபெற்ற ஹஜ் வழிகாட்டு நிகழ்ச்சி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |