தூத்துக்குடியில் நடைபெற்ற - பள்ளிகளுக்கிடையிலான மாவட்ட அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்ட சீனியர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விபரம் வருமாறு:-
மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி, தூத்துக்குடி ஹோலி க்ராஸ் மேனிலைப்பள்ளியின் சார்பில், வ.வு.சி. கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டது.
இம்மாதம் 29ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் நடைபெற்ற சூப்பர் சீனியர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 30) காலையில், 14 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவிற்கும், 17 வயதுக்குட்பட்டோருக்கான சீனியர் பிரிவிற்கும் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.
14 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவு போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், தூத்துக்குடி புனித தாமஸ் மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இப்போட்டி சமனில் முடிவுற்றதால் சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. அதில், 2-3 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி தோல்வியுற்றது.
17 வயதுக்குட்பட்டோருக்கான சீனியர் பிரிவில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இன்று மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, தூத்துக்குடி புனித லசால் மேனிலைப்பள்ளி அணியுடன் மோதியது. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த வெற்றியின் மூலம், எல்.கே.மேனிலைப்பள்ளியின் சீனியர் அணி மண்டல அளவிலான (Divisional Level) போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
மொத்தத்தில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் அணிகள் மண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. |