தூத்துக்குடியில் நடைபெற்ற - பள்ளிகளுக்கிடையிலான மாவட்ட அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி சூப்பர் சீனியர் அணி (19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவு) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விபரம் வருமாறு:-
திருச்செந்தூர் அனிதா குமரன் மேனிலைப்பள்ளி சார்பில், சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில், இம்மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற - பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான கால்பந்து இறுதிப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தது.
மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி, தூத்துக்குடி ஹோலி க்ராஸ் மேனிலைப்பள்ளியின் சார்பில், வ.வு.சி. கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டது.
இம்மாதம் 29ஆம் தேதி வியாழக்கிழமை (நேற்று) காலையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் அணியினருக்கான அரையிறுதிப் போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், தூத்துக்குடி புனித லசால் மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இதில், 4-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
அன்று மாலையில், நடைபெற்ற இறுதிப் போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், நாசரேத் மர்காஷிஸ் மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இரு அணிகளும் ஆட்டம் நிறைவடையும் வரை கோல் எதுவும் அடிக்காததால், போட்டி சமனில் முடிவுற்றது.
பின்னர் சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. இதில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த வெற்றியின் மூலம், மண்டல அளவிலான (Divisional Level) கால்பந்துப் போட்டியில் விளையாட எல்.கே.மேனிலைப்பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது.
(படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!)
இன்று (ஆகஸ்ட் 30) காலையில், 14 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவிற்கும், 17 வயதுக்குட்பட்டோருக்கான சீனியர் பிரிவிற்கும் அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது.
ஜூனியர் பிரிவு போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், தூத்துக்குடி புனித தாமஸ் மேனிலைப்பள்ளி அணியும் மோதுகின்றன.
சீனியர் பிரிவில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேனிலைப்பள்ளி அணியும் மோதுகின்றன.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ |