காயல்பட்டினத்தில் சுமார் 2.5 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டபோது பிடிபட்டதாக அண்மையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 27ஆம் தேதி செவ்வாய்க் கிழமை, 28ஆம் தேதி புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும், காயல்பட்டினம் தாயிம்பள்ளி அருகேயுள்ள ஏ.கே.எல். 3 என்ற நியாயவிலைக் கடையில் (கடை எண் CD 006) பறக்கும் படை தாசில்தார் வீராச்சாமி, வட்ட வழங்கல் அலுவலர் செந்திவேல் ஆகியோரால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அக்கடைக்குட்பட்ட சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றிலுள்ள பதிவுகளின் படி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. இறுதியில், 357 குடும்ப அட்டைகளுக்கு - பொருட்கள் வழங்கப்படாமலேயே வழங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
அப்பொருட்களுக்குரிய விலை மதிப்பான ரூபாய் 1 லட்சத்து 22 ஆயிரம் தொகையை, கடை அலுவலர் கோசல்ராமன் என்ற கோஸ்லேயிடமிருந்து அபராதமாகப் பெற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அலுவலர் கோசல்ராமன் தலைமறைவாகிவிட்டதாகவும், முன் ஜாமீனுக்கு முயற்சித்து வருவதாகவும் அறியப்படுகிறது.
இந்த ஆய்வின்போது, அப்பகுதியை உள்ளடக்கிய 10ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், 11ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் ஆகியோரும், பொதுநல அமைப்பினர் சிலரும் உடனிருந்தனர்.
தகவல்:
M.T.முஹம்மத் அலீ
கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04ஆம் தேதியன்று, இதே கடையில் எடை மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் சலசலப்பு ஏற்பட்டதையும், அதனையடுத்து தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் தலையிட்டு, பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வந்ததையும் காயல்பட்டணம்.காம் செய்திகளாக வெளியிட்டிருந்தது.
அன்று இக்கடையில் அலுவலராகப் பணியிலிருந்த கோசல்ராமன் என்ற கோஸ்லேதான் இன்று வரை பணியிலிருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |