INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM (IVLP) - அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகத்தின் (US DEPARTMENT OF STATE) ஒரு திட்டமாகும். INTERNATIONAL VISITOR PROGRAM (IVP) என்று 2004 ஆம் ஆண்டு வரை அழைக்கப்பட்ட இத்திட்டம், 1940 களில், அமெரிக்க அரசாங்கத்தால் துவக்கப்பட்டது. இதுவரை - உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 200,000 பேர், இத்திட்டம் மூலம் அமெரிக்கா சென்றுள்ளனர். இதில் முன்னாள் / இந்நாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், ராணுவ தலைவர்கள் உட்பட பல்வேறு துறையை சார்ந்தவர்கள் உண்டு.
அமெரிக்க நாட்டின் கலாச்சாரம், பல்வேறு சமுதாய மக்களின் வாழ்வுமுறை, உள்ளாட்சி / தொண்டு அமைப்புகள் செயல்பாடுகள் போன்றவற்றை நேரடியாக காண வாய்ப்பாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் தற்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5000 பேர் - உலகெங்கிலும் இருந்து, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்று வருகின்றனர். சராசரியாக 3 வாரங்கள் நீடிக்கும் இப்பயணங்கள், சில தலைப்புகள் அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது.
இப்பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் ஏதும் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் - வளர்ந்து வரும்/வளர்ந்த தலைவர்கள்/பொது நல ஆர்வலர்கள்/அரசு துறையை சார்ந்தவர்கள் / சமூக ஆர்வலர்கள் என தாங்கள் அடையாளம் காணுவோரை தொடர்புக்கொண்டு இவ்வழைப்பினை வழங்குவர்.
DIVERSITY IN THE US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பின் கீழ், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக்குடன் மேலும் நான்கு பேர் - தமிழகத்தில் இருந்து அக்டோபர் மாதத்தில் இப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருடன் இப்பயணம் மேற்கொள்ளவுள்ள நால்வரும் வெவ்வேறு துறையை சார்ந்த - சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கான விசா/பயண ஏற்பாடுகள் அனைத்தும் அமெரிக்க அரசாங்கம் சார்பில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் Washington DC இல் துவங்கும் இவர்களின் பயணம் - மேலும் மூன்று அமெரிக்க நகரங்களில் தொடரும். இப்பயணத்தின்போது - அமெரிக்காவில் சமூகப்பணியில் ஈடுப்பட்டுள்ள பலரை சந்திக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளை இவர்கள் காணவும் அமெரிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. |