காயல்பட்டினத்தில் திருமண நிகழ்ச்சிகளின்போது, திருமண வீட்டார் இல்லங்களின் முன்பகுதியிலுள்ள சாலையில் பந்தல் அமைக்கப்படும் வழமை இருந்து வருகிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளபோதிலும், உட்தெருக்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருக்குமென்பதால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனினும், என்றாவது அப்பகுதியில் தீ விபத்தோ, உயிருக்கு ஆபத்தோ ஏற்படுமாயின் அந்நேரத்தில் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.
அதுபோல, திருமண விருந்து நிகழ்ச்சிகளின்போது பந்தல்கள் அடைக்கப்பட்டு விருந்துபசரிப்பு நடைபெறும். சில பந்தல்களில் இரு சக்கர வாகனம் மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்திற்காக என 2 முதல் 3 அடி அகலத்தில் சிறிய பாதை விடப்பட்டிருக்கும். இதர பந்தல்களில் அதுவும் இருப்பதில்லை. இருந்தபோதிலும், திருமண விருந்து நிகழ்ச்சியும் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்குள் முடிவடைவதால், அதன் பாதிப்பும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்கும்.
நகர வழமைப் படி, திருமண நிகழ்ச்சியையடுத்து வரும் மாலையில், மணப்பெண்ணை அலங்கரித்து பந்தலில் அமர்த்துவர். உறவினர், மணப்பெண்ணின் தோழியர் என ஏராளமானோர் மணப்பெண்ணைப் பார்த்துவிட்டுச் செல்வர்.
இவ்வாறு மணப்பெண்ணை அலங்கரித்து வைப்பதற்காக, மணப்பெண் வீட்டையொட்டிய வெட்டைப் பகுதி (வீடுகளல்லாத காலிமனை) பயன்படுத்தப்படும். ஆனால், இன்று நகரில் பெரும்பாலும் வெட்டைப் பகுதிகளில் இல்லை என்ற நிலை உள்ளது.
அதுபோல, விசேஷ நிகழ்ச்சிகளின்போது பந்தல் அமைப்பதற்காகவென, நகரில் புதிதாக வீடுகள் கட்டப்படும்போதே, அவற்றின் மொட்டை மாடிகளில் எல்லா பக்கங்களிலும் வளையங்கள் பதிக்கப்பட்டிருக்கும். திருமணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களின்போது, அந்த வளையங்களில் பந்தல் கால்களைச் சொருகி, பந்தல் அமைத்து, அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணை அதில் அமர்த்தி வைப்பர்.
இன்றளவும் இந்த அமைப்பு, நகரின் பல வீடுகளிலும் இருந்து வருகிறது,
எனினும், அவற்றைப் பயன்படுத்தும் மனப்பதிவு மக்களிடம் பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம். திருமண வீடுகளில் ஆங்காங்கே தொங்கும் பட்டுச் சேலைகள், ஆபரணங்களை சிலர் திருடிச் சென்றுவிடுவதால், தங்களுக்கு மட்டும் ஏற்படும் அந்தச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக, தெரு பந்தலை அடைத்து மணப்பெண்ணை அலங்கரித்து வைக்கும் பழக்கம் சில ஆண்டுகளாக அதிகளவில் உள்ளது.
மாலை சுமார் 04.00 மணியளவில் அடைக்கப்படும் பந்தல்கள், இரவு 10.00 மணி வரையிலும் கூட அடைக்கப்பட்டே இருக்கும். பொதுநலன் முற்றிலும் மறக்கப்பட்ட திருமண வீடுகளில், “அதான் இரவாயிடுச்சே... பந்தல்காரனை எங்கு போய்த் தேடுவது...? நாளை காலையில் பந்தலைத் திறந்துகொள்ளலாம்...” என அலட்சியத்துடன் அப்படியே விட்டுவிடும் நிலையுமுள்ளது.
இம்மாதம் 24ஆம் தேதியன்று ஒரு திருமண வீட்டில், மாலையில் நடைபெறும் அழைப்பு (ரிசப்ஷன்) நிகழ்ச்சிக்காக காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலின் இரு முனைகளிலும் கயிறு கட்டி அடைக்கப்பட்டிருந்தது. அன்று சனிக்கிழமை விடுமுறை நாளென்பதால், கடற்கரைக்கு அதிகளவில் வந்த பொதுமக்கள் அவதியுற்றனர்.
நேற்று (ஆகஸ்ட் 25ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை) காலையில் திருமண விருந்திற்காகவும், மாலையில் மணப்பெண்ணை அமர்த்துவதற்காகவும் நகரின் பல தெருக்களில் பந்தல்கள் அடைக்கப்பட்டிருந்தது.
நேற்று மாலையில் மட்டும், காயல்பட்டினம் குறுக்கத் தெரு, ஆறாம்பள்ளித் தெரு, (கீழ) சித்தன் தெரு - தீவுத்தெரு சந்திப்பு, சித்தன் தெரு - ஆஸாத் தெரு குறுக்குச் சாலை உள்ளிட்ட பல இடங்களில், ஒரு தனி மனிதர் கடந்து செல்வதற்குக் கூட வழி விடப்படாமல், திருமணப் பந்தல்கள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது.
இவற்றின் காரணமாக, அவசர வேலையாகச் சென்ற பலர் பெரும் அவதிக்குள்ளாயினர். வாகனப் போக்குவரத்து பெரிதும் தடைபட்டது. ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள், பல தெருக்களைச் சுற்றி - தேவையுடையோரை வந்தடைய தயக்கம் காட்டினர்.
மொத்தத்தில், இந்த பந்தல் அடைப்புகள் பொதுமக்களுக்கு மிகவும் சிரமமளித்தன. |