திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் ரூ.2.07 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2001–06–ம் ஆண்டில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அப்போது தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, அவரது மனைவி ஜெயகாந்தி, சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன், மகன்கள் அனந்தபத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மேலும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சொத்துக்களை முடக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் சுமார் ரூ.2 கோடியே 7 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை தற்காலிகமாக முடக்கம் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உள்ளிட்ட 7 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 11 நடந்தது. அதை விசாரித்த நீதிபதி கே.வெங்கடசாமி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தகவல்:
www.tutyonline.com |