காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில், நேற்று (நவம்பர் 11) மாலை 04.45 மணியளவில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே சென்றுகொண்டிருந்த – ஓடக்கரையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவருக்குச் சொந்தமான கர்ப்பிணி பசு மாட்டின் மீது தனியார் பேருந்து மோதியது.
இவ்விபத்தில், பசு மாட்டின் வயிற்று, இடுப்பு மற்றும் தாடைப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. பேருந்து மோதிய வேகத்தில், மாட்டின் பிளந்த வாய் மூட இயலாமல் திறந்த நிலையிலேயே உள்ளது.
பேருந்தின் முன்புற இடது பகுதியும் சேதமுற்றது.
விபத்தை தொடர்ந்து திருசெந்தூரில் இருந்து, மீண்டும் தூத்துக்குடி நோக்கி வந்த பேருந்து - சம்பவ இடத்தில நிறுத்தப்பட்டது. ஆறுமுகநேரி மற்றும் திருச்செந்தூர் காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர்.
மாடு உரிமையாளருக்கு - மாட்டினை சாலையை கடக்காமல் பாதுகாத்திட காவல்துறையினரால் அறிவுரை கூறப்பட்டது. காயப்பட்ட மாட்டிற்கு முதல் உதவி செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் - சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து உரிமையாளர் நிறுவனத்தினர், மாடு உரிமையாளருக்கு நஷ்ட ஈடு தருவதாக சம்மதம் தெரிவிக்கவே, கூட்டம் களைந்து சென்றது.
புகைப்படங்கள் மற்றும் தகவல்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம். |