வரும் டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்படவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணிக்கு, காயல்பட்டினத்திலிருந்து 10 பேருந்துகளில் செல்வதென, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளையின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அதன் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் கலந்தாலோசனைக் கூட்டம் இம்மாதம் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - அதன் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எம்.எஸ்.ஹாலித் அன்ஸாரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கட்சியின் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
கட்சியின் மாணவரணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், கட்சியின் சார்பில் டிசம்பர் 28ஆம் நாளன்று நடத்தப்படவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணி குறித்த தகவல்களை விளக்கிப் பேசியதோடு, காயல்பட்டினத்திலிருந்து இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் விவரித்தார்.
கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - காயல்பட்டினத்திலிருந்து 10 பேருந்துகளில் செல்லல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமையின் சார்பில், டிசம்பர் 28ஆம் தேதியன்று திருச்சி நகரில் நடத்தப்படவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணியில் பங்கேற்க, காயல்பட்டினத்திலிருந்து 10 பேருந்துகளில் திரளாகச் சென்று பங்கேற்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - வரவேற்புக் குழு:
காயல்பட்டினத்தைச் சேர்ந்த - குறைந்தபட்சம் 100 பேரை, ரூபாய் 1000 செலுத்தி - மாநாட்டு வரவேற்புக் குழுவில் இடம்பெறச் செய்ய ஆவன செய்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - விளம்பரங்கள்:
மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகளை ஆயத்தம் செய்து, நகரெங்கும் ஒட்டி பரப்புரை செய்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் நகர கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |