காயல்பட்டினத்திற்கு ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து நாள்தோறும் சுமார் 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படுவதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருந்தும், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் என்பது வாரத்திற்கு ஒருநாளோ, இரண்டு நாட்களோ, அதிகபட்சம் மூன்று நாட்களோ - பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வினியோகிக்கப்படும் நிலைதான் உள்ளது.
சீரான குடிநீர் வினியோகமின்மை ஒருபுறமெனில், எப்போதாவது வினியோகிக்கப்படும் குறைந்தளவு குடிநீரும் - ஆங்காங்கே குடிநீர் வினியோகக் குழாய்களில் ஏற்படும் உடைப்புகள் காரணமாக பெருமளவில் வீணாக்கப்படுகிறது.
இந்த உடைப்புகள் குறித்து, அந்தந்த பகுதி மக்கள் அவ்வப்போது நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டாலும், என்றாவது ஒருநாள் அதியமாக அவை சரிசெய்யப்படுகிறது. பழுது நீக்கம் தாமதப்படுவதற்கு, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் உள்ளிட்டோரால் அதற்குப் பல காரணங்களும் கூறப்படுகிறது.
காயல்பட்டினம் 09ஆவது வார்டுக்குட்பட்ட அப்பாபள்ளித் தெரு - மரைக்கார் பள்ளித் தெரு இடைச்சாலையில், ரெட் ஸ்டார் சங்க மைதானத்தின் சுற்றுச்சுவரையொட்டிய குடிநீர் வினியோகத் திறப்புக் குழாய் தொட்டியில் ஒழுக்கு ஏற்பட்டு, வீணாகித் தேங்கும் தண்ணீருடன் குப்பைகளும் கலந்து, சாக்கடை போல் காட்சியளிக்கிறது.
இதுகுறித்து காயல்பட்டணம்.காம் பலமுறை செய்திகளும் வெளியிட்டுள்ளது. பார்க்க செய்தி எண் 12152, செய்தி எண் 10659..
அதுபோல, 11ஆவது வார்டுக்குட்பட்ட கே.டி.எம். தெருவில், தாயிம்பள்ளிக்கு எதிரேயுள்ள மின்விளக்கு உயர்கோபுரத்தின் அருகில் உடைப்பு ஏற்பட்டு, பெருமளவில் தண்ணீர் வீணாகி வருகிறது.
18ஆவது வார்டுக்குட்பட்ட - நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே மேற்கு நோக்கி செல்லும் சாலையிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாகியும், இன்றளவும் அது சரிசெய்யப்படாத நிலையிலேயே உள்ளது.
இதன் காரணமாக, ஏராளமாக வீணாகும் தண்ணீர் ஓடிச்சென்ற சாலைப்பகுதியில் அரிப்பெடுத்து, சாலை இரு துண்டுகளாகக் காட்சியளிக்கிறது.
வேடிக்கை என்னவெனில், கண் முன்னே குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த பெண் குடிநீருக்காக குடத்தைச் சுமந்துகொண்டு எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்.
குடிநீர் வினியோகக் குழாய் உடைப்புகளை சரிசெய்வதற்கு ரூபாய் 5 லட்சம் செலவில் ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் வழங்கி, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
கள உதவி (கே.டி.எம். தெரு):
S.M.K.மெய்தீன் |