உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த 3 ஆம் தேதி நடை பெற்றது. அதில் இக்ராஃவுக்கான சொந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், நமது இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 03ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, காயல்பட்டினம் கீழ நெய்னா தெருவில், இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்திற்கு எதிரேயுள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில், இக்ராஃ துணைத்தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் அவர்கள் தலைமையில், இக்ராஃ மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட கண்டி ஸிராஜ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவருமான ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் கூட்ட ஒழுங்கு விதிமுறைகளை விளக்கிப் பேசினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
இக்ராஃவின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதன் தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது விளக்கிப் பேசினார். அதனைத்தொடர்ந்து இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது விளக்கிப் பேசினார். உரைச்சுருக்கம் வருமாறு:-
>> “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” நிகழ்ச்சி நன்முறையில் நடத்தப்பட்டது.
>> அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் நிகழ்ச்சி குறித்து பாராட்டினார்.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலிருந்து சமூக நலத்துறை செயலர் பி .எம். பஷீர் அஹமது ஐ.ஏ.எஸ் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
>> நடப்பு கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை கோரியுள்ள மாணவ-மாணவியரின் விண்ணப்பங்கள் குறித்த முதற்கட்ட விசாரணையை, இக்ராஃ மக்கள் தொடர்பு அலுவலரும் - துணைச் செயலாளருமான என்.எஸ்.இ.மஹ்மூது, இக்ராஃ உறுப்பினர் எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் ஆகியோர் - விண்ணப்பதாரர்களின் இல்லங்கள் தேடி நேரடியாகச் சென்று விசாரித்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
கல்வி உதவித்தொகை விண்ணப்பதாரர்கள் நேர்காணல்:
>> கல்வி உதவித்தொகை விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல், 29.09.2013 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
மொத்தமுள்ள 62 விண்ணப்பதாரர்களுள்,
3 மாணவியர் படிக்கவில்லை.
3 மாணவியர் ப்ளஸ் 2 தேர்வில் 60 சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனர்.
3 பேர் நேர்காணலுக்கு வரவில்லை.
ஆக, இந்த 9 மாணவ-மாணவியர் தவிர்த்து 53 பேர், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் மற்றும் இக்ராஃ நிர்வாகிகளால் நேர்காணல் செய்யப்பட்டனர்.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகைமைகள் குறித்தும், இது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கே வழங்கப்படுகிறது என்றும் விண்ணப்பதாரர்களுக்கு விளக்கப்பட்டதையடுத்து, ''தம்மைவிட மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்'' என்று சிலர் தெரிவித்தனர். நிறைவில் 22 மாணவர்கள், 26 மாணவியர் என மொத்தம் 48 மாணவ-மாணவியரது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
கல்வி உதவித்தொகைக்கு இதுவரை பெறப்பட்டுள்ள அனுசரணை:
கல்வி உதவித்தொகைக்காக இதுவரை பெறப்பட்டுள்ள புதிய அனுசரணைகளின் எண்ணிக்கை 11.
ஜித்தா காயல் நற்பணி மன்றம் - 3
கத்தர் காயல் நல மன்றம் - 2
சிங்கை காயல் நல மன்றம் மூலமாக - 2
கல்வி ஆர்வலர்கள் – 4
இவை தவிர இன்னும் தேவைப்படும் அனுசரணைகள் 37.
ஆண்டுதோறும் கல்லூரி திறந்த சில நாட்களுக்குள் (ஜூன், ஜூலை மாத இறுதிக்குள்) மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு விடும் என்றும், நடப்பாண்டு - இக்ராஃ அலுவலக இடமாற்றம், கல்வி நிகழ்ச்சிகள், மற்றும் அரசு, மற்றும் தனியார் அமைப்புகளின் கல்வி நிதி உதவித்தொகைகள் பெறுவதற்கான வழிகாட்டுப் பணிகள் காரணமாக அது தாமதப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃ மூலம் வழிகாட்டப்பட்ட, பல்வேறு தனியார் கல்வி அமைப்புகளின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டதன் மூலம் ஏராளமான மாணவ-மாணவியருக்கு கணிசமான உதவித்தொகைகள் கிடைக்கப் பெற்றுள்ள விபரம் தெரிவிக்கப்பட்டது.
ஜகாத் நிதி சேகரிப்பு:
நடப்பாண்டு ஜகாத் நிதியாக ரூபாய் 2 லட்சத்து 23 ஆயிரத்து ஐம்பது தொகை பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு, நிதியளித்தோர் பட்டியல் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றோர் சிலரும் தம் பங்கு ஜகாத் தொகைகளாக 16 ஆயிரத்து 950 தொகை வழங்குவதாக அறிவித்ததையடுத்து, மொத்த ஜகாத் தொகை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்டியது.
இதுவரை கிடைக்கப் பெற்ற இந்த ஜக்காத் நிதி முழுவதையும் நடப்பாண்டு (2013-14) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்றும் , இனி பெறப்படும் ஜக்காத் நிதியை அடுத்த ஆண்டு (2014-15) கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ஜகாத் நிதியில் கல்வி உதவித்தொகை - நேர்காணல் குழு:
ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவியரை நேர்காணல் செய்ய,
(1) ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல்,
(2) ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
(3) ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்,
(4) ஆசிரியர் எம்.ஏ.புகாரீ,
(5) ஹாஜி சாளை எஸ்.ஐ .ஜியாவுத்தீன்
ஆகியோரடங்கிய ஐவர் குழு நியமிக்கப்பட்டது. இக்ராஃவின் நிர்வாகிகள் துணையுடன் இக்குழு, ஒரு வாரத்திற்குள் (10ஆம் தேதி) நேர்காணல் பணிகளை நிறைவு செய்யும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நடப்பு நவம்பர் 10ஆம் தேதிக்குப்பின் விரைவாக உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஜகாத் நிதியின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும் விண்ணப்பதாரர்கள்:
காயல்பட்டினத்தைச் சேர்ந்த - பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம் - பிலால்களது மக்களுக்கும், திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாஃ பிழ் மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், B.Ed. - ஆசிரியர் பயிற்சிப் படிப்பு பயிலும் மாணவியருக்கும் நேர்காணலில் முன்னுரிமையளிக்கவும், மொத்தம் பெறப்பட்டுள்ள 48 விண்ணப்பங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு குறைந்த தொகை வழங்குவதைத் தவிர்த்து, அவற்றுள் முதல் தகுதியுள்ள 25 விண்ணப்பங்களை மட்டும் ஏற்று, கனிசமான தொகையை வழங்கிடவும், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் வழமை போல கல்வி உதவித்தொகை வழங்குவதென்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பெங்களூரு மாணவர் தங்கும் விடுதிக்கு விண்ணப்ப விசாரணை ஒத்துழைப்பு:
பெங்களூரு நகரில் வேலைவாய்ப்பு தேடிச் செல்லும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக, பெங்களூரு காயல் நல மன்றத்தின் சார்பில் அண்மையில் திறக்கப்பட்டுள்ள ஆடிட்டர் புஹாரி தங்கும் விடுதியில் தங்குவதற்கு, விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யுமாறு அம்மன்றத்தின் சார்பில் இக்ராஃவிடம் வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, இக்ராஃ அப்பணிகளை நன்முறையில் செய்து வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பொறியியல் கல்லூரியில் இலவச இடம்:
இக்ராஃ துணைத்தலைவரும் - தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைருமான ஹாஜி டாக்டர் இத்ரீஸ் அவர்கள் ஊரிலிருக்கையில், திருச்சி எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஜனாப் மலுக் முஹம்மது அவர்கள் வருகை தந்ததையொட்டி, அவர்களை இக்ராஃவிற்கு அழைத்து வந்து, அதன் கல்விச் சேவைகள் குறித்து விளக்கமளித்தார்.
அதன் பயனாக, இக்ராஃ பரிந்துரைக்கும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த சிறப்புத் தகுதி (மெரிட்) மதிப்பெண் பெற்ற 3 மாணவர்களுக்கு கட்டணங்களெதுவுமின்றி, முற்றிலும் இலவசமாக கல்லூரியில் சேர்க்கை வழங்கி பயிற்றுவிக்கப்படும் என அவர் அப்போது அறிவித்த செய்தி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் அதற்கு மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்தனர்.
இவ்வாறு, இக்ராஃ செயலாளரது உரையின் உள்ளடக்கம் அமைந்திருந்தது.
இக்ராஃ மொத்த உறுப்பினர் விபரம்:
இக்ராஃ உறுப்பினர்கள் குறித்த விபரங்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃவின் மொத்த உறுப்பினர்கள் - 399
ஆயுட்கால உறுப்பினர்கள் - 92
(அவர்களுள், ஆயுட்கால உறுப்பினருக்கான ரூபாய் 15,000 தொகையை இதுவரை 38 பேர் செலுத்தியுள்ளனர்.)
ஆயுட்கால உறுப்பினர்கள் எண்ணிக்கை விபரம்:-
தாய்லாந்து காயல் நல மன்றம் (THAKWA) சார்பாக - 30
சிங்கப்பூர் காயல் நல மன்றம் (KWAS) சார்பாக - 15
ஜித்தா காயல் நற்பணி மன்றம் (KWAJED) சார்பாக - 11
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் (KUFHK) சார்பாக 10
ரியாத் காயல் நற்பணி மன்றம் (RKWA) சார்பாக - 9
ஓமன் காயல் நல மன்றம் (KWAO) சார்பாக – 2
தனியார் - 15
மொத்தம் – 92.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இக்ராஃவின் துணைத்தலைவரும் – சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவருமான ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் தானும் ஆயுட்கால உறுப்பினராக விருப்பம் தெரிவிக்க அதை செயற்குழு ஏற்றுக்கொண்டது. அவரையும் சேர்த்து, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பாக ஆயுட்கால உறுப்பினரானோர் எண்ணிக்கை 16 ஆகவும், இக்ராஃவின் மொத்த ஆயுட்கால உறுப்பினர்கள் எண்ணிக்கை 93 ஆகவும் உயர்ந்தது.
நடப்பு கூட்டத்தில், இக்ராஃவின் புதிய (சாதாரண) உறுப்பினர்களாவதற்கு விண்ணப்பித்த 10 பேரின் விண்ணப்பங்கள் செயற்குழுவால் ஏற்கப்பட்டது.
‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013’ வரவு - செலவு கணக்கறிக்கை:
நடப்பாண்டு நடத்தப்பட்ட “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” நிகழ்ச்சிக்கான வரவு-செலவு கணக்கறிக்கையை, இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒப்புதலளித்தது.
இக்கணக்கின்படி, 45 ஆயிரத்து 150 ரூபாய் தட்டுப்பாடு (Deficit) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின்போதே ரூபாய் 16 ஆயிரம் தொகை - கலந்துகொண்டோரால் நன்கொடையாக வழங்கப்பட்டது. எஞ்சிய தட்டுப்பாட்டு தொகையான (Deficit) 29 ஆயிரத்து 150 ரூபாய்க்கு, உலக காயல் நல மன்றங்களிடம் கோரிக்கை வைக்கவும், அது கிடைக்காத பட்சத்தில் இக்ராஃவின் பொது நிதியிலிருந்து தட்டுப்பாட்டை ஈடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இக்ராஃ அலுவலகத்திற்கு சொந்த இடம்:
அடுத்து இக்ராஃ அலுவலகத்திற்கு சொந்த இடம் வாங்குவது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து கூட்டத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
நகரின் பல்வேறு பகுதிகளிலும், பல வகையான இடங்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும், அனைவரும் மனமுவந்து வந்து செல்லும் வகையிலான - தகுதியான இடத்தைக் கண்டறிவதில் நீண்ட காலமாக சிக்கல் இருந்து வந்ததாகவும், நிறைவில், ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் உள்ள - ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.ஹபீபுல்லாஹ் அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் 5000 சதுர அடி நிலத்தை வாங்கலாம் என 26.08.2013 அன்று நடைபெற்ற - இடம் தேர்வுக் குழுவின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் யோசனை பெறப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
5000 சதுர அடி மொத்த நிலத்தில், 2000 சதுர அடி நிலத்தை கல்விச் சேவைக்காக அன்பளிப்பாகத் தரவும், எஞ்சிய 3000 சதுர அடி நிலத்தை குறைந்த விலையில் தருவதாகவும் - 26.08.2013 அன்று இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நில உரிமையாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.ஹபீபுல்லாஹ் அவர்கள் இசைவு தெரிவித்துள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, அதற்காக அவருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இடம் தேர்வுக்குழு நடத்திய கூட்டம்:
26.08.2013 அன்று இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில், இக்ராஃவின் துணைத்தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்றத் தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், இக்ராஃ முன்னாள் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மது ஹஸன், இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது, மக்கள் தொடர்பாளரும் - துணைச் செயலாளருமான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ் மற்றும் நில உரிமையாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.ஹபீபுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அவ்விடம் குறித்து நீண்ட கலந்தாலோசனை நடைபெற்றது. நிறைவில், அவ்விடம் குறித்து அரசுத் துறை மூலம் தகுந்த ஆலோசனைகள் பெற்று இறுதி முடிவு செய்திட,
(1) ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்,
(2) ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால்,
(3) ஹாஜி எம்.எம்.ஷாஹுல் ஹமீது,
(4) எஸ்.அப்துல் வாஹித்,
(5) ஜெ.செய்யித் ஹஸன்
ஆகியோரடங்கிய ஐவர் குழுவிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
கலந்துகொண்டோர் கருத்துப் பரிமாற்றம்:
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துக்களைத் தெரிவிக்க நேரமளிக்கப்பட்டது.
இக்ராஃ மூலம் ஆண்டுதோறும் ஜகாத் நிதி வசூலிக்கப்படும் விபரம் நகரில் பரவலாகத் தெரியாது எனவும், பொதுப்பிரசுரம் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் அறியத் தரலாம் என்றும், எஸ்.அப்துல் வாஹித் கூறினார்.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படி, இக்ராஃவின் நோக்கம், செயல்திட்டங்கள், சேவைகள், வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கி பலவண்ணப் பிரசுரத்தை விரைவில் அச்சிட்டு நன்கொடையாளர்களுக்கு வினியோகிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை நேர்காணல்:
இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவியருக்கான நேர்காணலை நடத்திட,
(1) ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல்,
(2) ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
(3) ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்,
(4) ஆசிரியர் எம்.ஏ.புகாரீ,
(5) ஹாஜி சாளை எஸ்.ஐ .ஜியாவுத்தீன்
ஆகியோரடங்கிய ஐவர் குழுவை இக்கூட்டம் நியமிப்பதுடன், ஒரு வார காலத்திற்குள் நேர்காணல் முடிக்கப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, 10.11.2013 தேதிக்குப்பின் விரைவில் கல்வி உதவித்தொகை வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” வரவு செலவு கணக்கறிக்கை ஏற்பு:
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து, நடப்பாண்டு நடத்தப்பட்ட “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” நிகழ்ச்சி தொடர்பாக, இக்ராஃ பொருளாளரால் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு கணக்கறிக்கைக்கு கூட்டம் ஒப்புதலளிக்கிறது.
தீர்மானம் 3 - இக்ராஃ அலுவலக இடம் தேர்வு:
இக்ராஃ அலுவலகத்திற்கு, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை பகுதியிலுள்ள - ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.ஹபீபுல்லாஹ் அவர்களுக்குச் சொந்தமான ப்ளாட் எண் B25, B26, C20 ஆகிய மூன்றையும் வாங்கிட இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், அவ்விடம் குறித்து அரசுத் துறை மூலம் தகுந்த ஆலோசனைகள் பெற்று இறுதி முடிவு செய்திட,
(1) ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்,
(2) ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால்,
(3) ஹாஜி எம்.எம்.ஷாஹுல் ஹமீது,
(4) எஸ்.அப்துல் வாஹித்,
(5) ஜெ.செய்யித் ஹஸன்
ஆகியோரடங்கிய ஐவர் குழுவிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - இக்ராஃ அலுவலக இடம் அன்பளிப்புக்கு நன்றி:
இக்ராஃ அலுவலகத்திற்கு, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை பகுதியிலுள்ள நிலத்தில், 5000 சதுர அடி மொத்த நிலத்தில், 2000 சதுர அடி நிலத்தை கல்விச் சேவைக்காக அன்பளிப்பாகத் தரவும், எஞ்சிய 3000 சதுர அடி நிலத்தை குறைந்த விலையில் தரவும் இசைவு தெரிவித்த நில உரிமையாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.ஹபீபுல்லாஹ் அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 5 - புதிய உறுப்பினர்களது விண்ணப்பங்கள் ஏற்பு:
இக்ராஃ கல்விச் சங்கத்தில் புதிதாகத் தம்மை உறுப்பினராக்கிட விண்ணப்பித்துள்ள 10 பேரது விண்ணப்பங்களை இக்கூட்டம் ஏற்றுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் இறுதியாக இக்ராஃ துணைச்செயலர் எஸ்.கே. ஸாலிஹ் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க, துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் பிற்பகல் 01.30 மணியளவில் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுக் கூட்டம் குறித்து, அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
என்.எஸ்.இ .மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்,
இக்ரா ஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம். |