தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், வரும் டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று, மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணி, திருச்சி நகரில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்திருப்பதாவது:-
மாநில பொதுக்குழு தீர்மானப்படி மஹல்லா ஜமாஅத் மாநாடு டிசம்பர் 28ஆம் தேதி திருச்சியில் நடத்துவது எனவும் மேலும் இளம்பிறை மாநில மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த மஹல்லா ஜமாஅத் மாநாட்டில் தமிழகத்தில் முன்மாதிரியாக செயல்பட்டு வரும் 15 ஜமாஅத்துகளுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இதில் 3 வகையான விருதுகள் தேர்வு செய்யப்படும்.
முதலில் மாநகராட்சியில் செயல்படும் 5 ஜமாஅத்துகளுக்கும் மற்ற 5 நகராட்சி, பேரூராட்சிகளில் சிறப்பாக செயல்படும் ஜமாஅத்துகளுக்கும், கிராமப்புறங்களில் சிறப்பாக செயல்படும் 5 ஜமாஅத்துகள் ஆக 15 ஜமாஅத்துகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருதும், பாராட்டு சான்றிதழ்களும் இந்த மாநாட்டில் வழங்கப்படும்.
மாநாடு நடத்துவது குறித்து மாநில பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததில் நெஞ்சத்தாமரை போன்ற திருச்சியில் நடத்தினால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தோம்.
மாநில பொதுச் செயலாளரை தொடர்பு கொண்டு பேசியதில் இளம்பிறை மாநில மாநாடு என்பதை மதநல்லிணக்க இளம்பிறை எழுச்சிப் பேரணி மாநாடாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறினார். ஆகவே, மதநல்லிணக்க இளம்பிறை எழுச்சிப் பேரணி நடத்துவது என முடிவு செய்தோம்.
2013 டிசம்பர் 28Mம்தேதி சனிக்கிழமை மாலை திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் மாநாடு நடைபெறும்.
முதலில் முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, தொழிலாளர் அணி ஆகிய 3 அணிகளைச் சேர்ந்தவர்கள் சீருடையணிந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மாநாட்டுத் திடலை வந்தடைய வேண்டும். பின்னர் மஹல்லா ஜமாஅத் மாநாடு நடைபெறும். இதில் தமிழகத்தில் உள்ள 11,000 ஜமாஅத்துகளில் உள்ள அனைவரும் கலந்துகொள்வார்கள்.
மாநாட்டில் தமிழகத்தில் முன்மாதிரியாக செயல்படும் 15 ஜமாஅத்துகளுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். பின்னர் மதநல்லிணக்க இளம்பிறை எழுச்சி பேரணி நடைபெறும். இதில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் கூட்டணி கட்சித் தலைவர்களையும் அழைக்க இருக்கிறோம்.
இந்த மாநாடு மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். இந்த மஹல்லா ஜமாஅத் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.
மஹல்லா ஜமாஅத் நிர்வாகம் தவிர, மற்ற போட்டி ஜமாஅத் எல்லாம் விரைவில் காணாமல் போய்விடும். முன் மாதிரியாக செயல்படுகின்ற ஜமாஅத் நிர்வாகம் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.
1989இல் மதுரையிலும், 2011இல் சென்னை தாம்பரத்திலும் மிகச்சிறப்பாக மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் அரசு டவுன் காஜி இல்லாமல் இருந்தது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் முயற்சியால் அரசு டவுன் காஜி பதவியை பெற்று கொடுத்து இருக்கிறோம்.
தி.மு.க. ஆட்சியில் கூட நமது முயற்சியால் காலியாக உள்ள இடங்களில் அரசு டவுன் காஜி பதவியை பெற்று கொடுத்து இருக்கிறோம். மஹல்லா ஜமாஅத் மாநாடு இப்போது அவசியம் தேவைப்படுகிறது.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்துக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஜமாஅத்தில் இருந்து 10 பேர் வீதம் வந்தால்கூட 11 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்தில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வருவார்கள். இவர்கள் வந்தாலே இந்த மாநாடு மிகச் சிறப்பாக இருக்கும். அனை வரும் இந்த மாநாட்டிற்கு வருவார்கள்.
தமிழகத்தில் பைத்துல்மால் ஆரம்பித்து, வியாபாரமாக மாற்றி வருகிறார்கள். ஆனால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழகத்தில் 3552 பள்ளி வாசல்களை கட்டி கொடுத்து இருக்கிறது. இது யாருக்காவது தெரியுமா?
அதே போல நம்முடைய நிர்வாகிகள் பள்ளிவாசலுக்கு பலவிதமான உதவிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக கப்ருஸ்தானுக்கு சுற்றுச்சுவர் கட்டி கொடுப்பது, சில பள்ளிகளுக்கு இமாம்களுக்கு சம்பளம் கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். இது யாருக்கும் வெளியில் தெரியாது. இதுபோன்ற விஷயங்கள் அல்லாஹ்வுக்கு பொருத்தமான விஷயமாகும். மறுமையில் நமக்கு வெற்றி கிடைக்கும்.
இந்த மஹல்லா ஜமாஅத் மாநாடு மற்றும் சமய மத நல்லிணக்க இளம்பிறை எழுச்சி பேரணி மாநாட்டுக்கு அமைப்பாளராக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் ஹாஜி வி.எம்.பாரூக் தலைமையில் மாநில நிர்வாகிகள், மாநகர் மாவட்ட புறநகர் மாவட்ட நிர்வாகிகள் அங்கம் வகிப்பர். இந்த மாநாடு வரவேற்பு குழுவுக்கு முன்பணமாக ரூ.1000 என தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.
விரைவில் திருச்சி மாநகர் புறநகர் மாவட்டங்களின் பொதுக் குழுவை கூட்டி மாநாட்டுப் பணியை மேற்கொள்வார்கள்.
திருச்சியில் நடைபெற்ற பி.ஜே.பி. மாநாட்டில் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் பிச்சைமுத்து இந்திய ஜனநாயக கட்சியை நடத்தி வருகிறார். இவர் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்துள்ளார்.இவர் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகளைத்தான் அதிக அளவில் கலந்துகொள்ள வைத்துள்ளார் என்பதுதான் உண்மை.
திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள நம் நிர்வாகிகளை அழைத்து கூட்டங்களை நடத்த வேண்டும். வார்டு நிர்வாகிகள் இல்லாத இடங்களில் ஒருவர் மட்டும் வார்டு பொறுப்பாளராக அவசியம் இருக்க வேண்டும். அதேபோல புறநகர் மாவட்டங்களில் நிர்வாகம் இல்லாத இடங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் லீக் ஒரு அமானிதமான சொத்து. 1947 டிசம்பர் 28இல் திருச்சியில் தேவர் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் முஸ்லிம் லீக் ஸ்தாபனம் இருக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில்தான் இந்த டிசம்பர் 28ம் தேதி திருச்சில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு மற்றும் மத நல்லிணக்க எழுச்சிப் பேரணி மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா மற்றும் தமிழகத்தில் எப்படி செல்வாக்கு இருக்கிறதோ அதே போல மற்ற மாநிலங்களிலும் வெகு விரைவில் செல்வாக்கு வரும் என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது.
இந்த மாநாடு நல்லவிதமாக நடந்தேற வல்ல நாயனிடம் துஆ செய்வோம். இந்த மாநாடு மூலம் நமது ஸ்தாபனத்திற்கு மேலும் வலு கிடைக்கும். அனைவரும் சிப்பாய்கள்போல நம் பணியை செய்ய வேண்டும்.
இவ்வாறு, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
நன்றி:
www.muslimleaguetn.com |