காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு பகுதியிலுள்ள கோமான் கீழத் தெரு, நடுத்தெரு, மேலத்தெரு ஆகிய தெருக்களை உள்ளடக்கிய கோமான் ஜமாஅத் சார்பில், அப்பகுதிகளில் பல மாதங்களாக எரியாமலிருக்கும் தெரு விளக்குகளை விரைந்து எரியச் செய்யுமாறும், அவ்வாறு செய்யவில்லையெனில், விளக்கேற்றும் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை கலந்த கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கோமான் ஜமாஅத் தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமையில் - அதன் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய 20க்கும் மேற்பட்டோரடங்கிய குழு, இது தொடர்பாக கோரிக்கை மனுவையளிக்க, இம்மாதம் 07ஆம் தேதி வியாழக்கிழமையன்று (நேற்று) காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்றது.
அப்போது நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இல்லாததால், அலுவலக மேலாளர் பிச்சை முகைதீனிடம் அக்குழு மனுவை அளித்தது.
01ஆவது வார்டில் கடந்த 6 மாத காலமாக தெரு விளக்குகள் பல எரியாமலிருப்பதாகவும், ஏற்கனவே அதுகுறித்து மனு அளித்தும் இதுவரை அக்குறை சரி செய்யப்படவில்லை என்றும், இம்மாதம் 18ஆம் தேதியன்று அப்பகுதியில் பெரிய கந்தூரி நடைபெறவுள்ளதால் பெரும் மக்கள் திரள் வரும் என்பதைக் கருத்திற்கொண்டு, எரியாத தெரு விளக்குகள் அனைத்தையும் இம்மாதம் 14ஆம் தேதிக்குள் எரியச் செய்யுமாறும், செய்யத் தவறினால் அடுத்த நாளான 15ஆம் தேதியன்று - தெரு விளக்கு எரியாத அனைத்து மின் கம்பங்களிலும் ஹரிக்கேன் விளக்கேற்றி ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என்றும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதியில் எரியாத தெரு விளக்குகள் மாற்றப்பட்டு, புதிய தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் - அவற்றிலும் சில விளக்குகள் எரியவில்லை என்றும் - காயல்பட்டணம்.காம் வினவியபோது, கோமான் ஜமாஅத் நிர்வாகியொருவர் தெரிவித்தார். |