காயல்பட்டினம் நகரில் பெருகி வரும் புற்றுநோய் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் ஏ.தர்வேஷ் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கை:-
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பாக அண்மையில் துவக்கப்பட்ட ஷிஃபா ஹெல்த் அண்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் முதலாவது செயற்குழுக் கூட்டம், இறையருளால் கடந்த 17-11-2013 ஞாயிறு அன்று மாலை 07:30 மணிக்கு இக்ராஃ கூட்ட அரங்கில் ஷிஃபா அமைப்பின் தலைவர் டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக ஷிஃபாவின் செயற்குழு உறுப்பினர் அல்ஹாபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் அவர்கள் இறைமறை ஓத கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்களை தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள் வரவேற்றுப் பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஷிஃபாவின் நிர்வாகி கண்டி எம்.என்.சிராஜுத்தீன் நிஜார், ஷிஃபாவில் இதுவரை பெறப்பட்ட மொத்த மனுக்கள், அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட மனுக்கள், நிறைவு செய்யப்பட்ட மனுக்கள், மருத்துவரின் குறிப்புக்காக உள்ள மனுக்கள், வெளியிடுவதற்கும் - விசாரணைக்காகவும் காத்திருக்கும் மனுக்கள் என ஷிஃபாவின் மருத்துவ விண்ணப்பம் சம்பந்தமான விபரங்களை விளக்கிக் கூறினார். அத்துடன் உதவி கோரும் விண்ணப்பங்கள் ஷிஃபா மூலம் பெறப்படும் முறை, அதுகுறித்து மேற்கொள்ளப்படும் விசாரணை, அதன் தொடர்ச்சியாக ஷிஃபா மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜாஃபர் ஸாதிக் அவர்களிடம் மனுவை சமர்ப்பித்து அது குறித்த அவர்களின் ஆலோசனை பெற்று வெளியிடப்படும் விதங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
மருத்துவ நிதி உதவியாக இதுவரை காயல் நல மன்றங்கள் வழங்கியுள்ள உதவித்தொகை விபரங்களையும், ஷிஃபாவின் வரவு-செலவு கணக்குகளையும் அவர் கூட்டத்தில் தாக்கல் செய்தார்.
அடுத்து ஷிஃபாவின் செயலாளர் ஏ.தர்வேஷ் முஹம்மது பேசினார். அமைப்பை அரசுப்பதிவு செய்யும் முறைகள், அமைப்பின் சட்டதிட்டங்கள் (BYE LAW), மற்றும் ஷிஃபா ஆற்ற வேண்டிய மாபெரும் பணிகளில் முக்கியமானவைகளை வரிசைப்படுத்தி எடுத்துக் கூறினார். குறிப்பாக நகரின் சுகாதாரம், சுற்றுப்புறச் சூழல், நோய் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனை, மாவட்ட சுகாதார மையம் ஆகியவற்றுடன் இணைந்து ஆற்ற வேண்டிய பணிகள், அரசு வழங்கும் மருத்துவ உதவிகள் - நலத்திட்டங்கள் குறித்து அரசுத்துறை மூலம் தகவல்களைப் பெற்று அதனை மக்களுக்கு எத்தி வைத்து அதனை மக்கள் பயன்படுத்திட மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், நகரில் பெருகி வரும் புற்றுநோய் குறித்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விபரமாக விளக்கினார்.
தமிழ்நாடு மருத்துவக் கழக முன்னாள் தலைவர் டாக்டர் அஷ்ரஃப் அவர்களை கடந்த 23-08-2013 அன்று தாமும், ஷிஃபா மருத்துவக் குழு ஆலோசகர்களான டாக்டர் ஜியாது (ஜித்தா), டாக்டர் செய்யது அஹ்மத் (அபுதாபி), ஹாஜி எம்.ஏ.செய்யது இபுராஹிம் (மக்கா), ஹாஜி ஜே.செய்யது ஹசன், கண்டி எம்.என்.சிராஜுத்தீன் உட்பட குழுவாக சென்று சந்தித்ததாகவும், அப்போது ஷிஃபா அமைப்பின் நோக்கங்கள், தேவைப்படும் உதவிகள் குறித்து அவர்களிடம் விளக்கியதாகவும்,அரசின் நலத்திட்டங்களை பெறுவதிலும்,நகர மக்களுக்கு செய்ய நாடியுள்ள மருத்துவ சேவைகளுக்கு அவர்களது உதவி மற்றும் ஒத்துழைப்பை கோரியதாகவும்,அதற்கு டாக்டர் அஷ்ரஃப் அவர்கள், கண்டிப்பாக தம்மால் இயன்ற ஒத்துழைப்பை தருவதாக கூறியதாகவும்,அத்துடன் தற்போது நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில மருத்துவ முகாம்கள், சிகிச்சைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அறிவுரை வழங்கியதாகவும், அது கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்' என்றும் ஷிஃபா செயலாளர் ஏ.தர்வேஷ் முஹம்மது தனதுரையில் தெரிவித்தார்.
அடுத்து பேசிய ஷிஃபா தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்கள், அடுத்த மூன்று நாட்களில் தாம் திருச்சி சென்று டாக்டர் அஷ்ரஃப் அவர்களை சந்திப்பதாகவும், அப்போது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மருத்துவ முகாம்கள், சிகிச்சைகள் குறித்து பேசி அதுகுறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
அடுத்து தற்போது ஷிஃபாவுக்கான மருத்துவ விண்ணப்ப படிவங்களை சரிபார்த்து அது குறித்த ஆலோசனைகளை வழங்கி வரும் டாக்டர் ஜாஃபர் ஸாதிக் அவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அடுத்து அனைத்து காயல் நல மன்றங்களும் அவசரகால மருத்துவக் குழு ஒன்றை உருவாக்குமாறும், உதவி கோரி வரும் மருத்துவ விண்ணப்பங்களை அக்குழு உடனே பரிசீலித்து தங்கள் அமைப்பின் பங்களிப்பை மிக விரைவில் அளிக்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்ட கருத்து ஏற்கப்பட்டு, அதனடிப்படையில் மன்றங்களுக்கு தகவல் அனுப்பிட முடிவு செய்யப்பட்டது.
அடுத்து ஷிஃபாவின் மருத்துவ மனுக்களைப் பரிசீலித்து, அதற்கான தொகை குறித்து ஒப்புதல் அளித்திட கீழ்க்கண்ட 5 நபர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் குறைந்தபட்சம் மூன்று நபரின் ஒப்புதல் பெற்று விண்ணப்பத்தை அனுப்பிட முடிவு செய்யப்பட்டது:-
1. ஏ. தர்வேஷ் முஹம்மது
2. ஜே. செய்யது ஹஸன்
3. கூபா என்.டி.ஷெய்கு மொகுதூம்
4. ஹாஜி எம்.ஐ.மெஹர் அலி
5. அல்ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ்.
அடுத்ததாக 2014 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கான பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, அடுத்த வருடம் காயல் நல மன்றங்கள் மேற்கொள்ளவிருக்கும் மருத்துவ முகாம்கள் மற்றும் அதற்கான காலம் குறித்து கேட்டறிந்து, அதன் பின் மருத்துவ முகாம்களுக்கான கால அட்டவணை தயார் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அடுத்து ஷிஃபாவுக்கு ஊரிலும், வெளியூர்களிலும் மருத்துவ உதவிக்கான பொது நிதி மற்றும் ஜக்காத் நிதி சேகரிப்பது சம்பந்தமான கலந்தாலோசனை நீண்ட நேரம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து காயல் நல மன்றங்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துகள், ஆலோசனைகள் கூற நேரம் ஒதுக்கப்பட்டது.
இறுதியாக ஷிஃபா பொருளாளர் கூபா என்.டி.ஷெய்கு மொகுதூம் அவர்கள் நன்றி நவில, ரியாத் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் அல்ஹாபிழ் பி.எஸ்.ஜே.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் துஆ, ஸலவாத், கஃப்பாராவுடன் கூட்டம் இரவு 09.45 மணியளவில் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்தில் ஷிஃபா செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஆலோசகரும் - முன்னாள் தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மது ஹஸன், தம்மாம் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், கத்தார் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் எம்.என்.முஹம்மது யூனுஸ், கத்தார் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.'
இவ்வாறு ஷிஃபா செயலாளர் ஏ.தர்வேஷ் முஹம்மது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
கண்டி எம்.என்.சிராஜுதீன் நிஜார்
நிர்வாகி,
ஷிஃபா ஹெல்த் அண்ட் வெல்ஃபர் அசோசியேஷன்,
காயல்பட்டினம். |