ஒரே நாளில் 100 புரவலர்களைச் சேர்த்ததற்காகவும், ரூபாய் 14 லட்சம் நன்கொடை பெற்று புதிய நூலக கட்டிடம் கட்ட உதவி புரிந்தமைக்காகவும், காயல்பட்டினம் அரசு பொது நூலக நூலகர் அ.முஜீப், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் பாராட்டப்பட்டுள்ளார். விபரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில், தேசிய நூலக வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவிகுமார் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சோ.மதுமதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கீ.சு.சமீரன் முன்னிலையில் நடைபெற்றது.
நூலக வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பெல் மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த ரா.மதுசூதனன், கி.போரிஸ் அட்ரியன், து.ராஜகோபால், அனிதா குமரன் மெட்ரிக் பள்ளி மாணவன் ஜெ.ஜெனிஸ் சைமன்ராஜ், சி.எம்.மேல்நிலைப்பள்ளி மாணவன் க.ஹரிபிரசாத், குறுக்குச்சாலை அரசு பள்ளியைச் சார்ந்த மாணவி மு.செல்வராணி, சக்தி வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி து.காயத்ரி போன்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நற்சான்றிதழ் வழங்கினார்.
அண்மையில் தமிழக அரசின் நன்னூலகர் விருது பெற்ற - காயல்பட்டினம் கிளை நூலகர் அ.முஜீப் - ஒரே நாளில் 100 புரவலர்களை சேர்த்தமைக்கும், ரூபாய் 14 லட்சம் நன்கொடை பெற்று, புதிய நூலகம் கட்டிட உதவி புரிந்தமைக்கும் - மாவட்ட ஆட்சியர் அவருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
டி.சரத்பாலா, மீனாட்சி சுந்தரம், ஜேம்ஸ் அமிர்தராஜ் ஆகியோருக்கு நூலகர் புரவலர் பட்டம் வழங்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவிகுமார் உரையாற்றியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 124 நூலகங்களில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், 2504 புரவலர்களையுதட கொண்டு சிறப்புடன் அவை இயங்கி வருகின்றன.
மாவட்ட மைய நூலகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான பயிற்சி நூல்கள் உள்ளன. பள்ளி. கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர், கல்வியுடன் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய நாட்டில் வாழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை இளைஞர்கள் தெரிந்து கொண்டு முன்னேற வேண்டும்.
கனடா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளின் வளர்ச்சியில் நம் தமிழர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த காலங்களில் கல்வி கிடைப்பது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தது. ஆனால் தற்போது நீங்கள் விரும்பிய படிப்புகளை வழங்க அரசு முன்வந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி - பள்ளிகளைத் துவக்கியுள்ளது.
பள்ளி படிப்பு போக மற்ற நேரங்களில் மாணவ-மாணவியர் நூலகம் மூலமாக பயனள்ள அறிவை வளர்த்துக்கொண்டு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் பேசினார்.
முன்னதாக, மாவட்ட நூலக அலுவலர் க.மந்திரம் வரவேற்புரையாற்றினார். வாசகர் இலக்கிய வட்ட கவுரவ ஆலோசகர் மருத்துவர். சுப.விஜயரெங்கன், முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, டி.சரத்பாலா, து.சுகேஷ் சாமுவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். லெ.மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார். |