தமிழக முதல்வரால், விரைவு பட்டா மாறுதல் திட்டம் 01.10.2011 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன்படி பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி அதற்கான உத்தரவுகளை 15 தினங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 2011 முதல் செப்டம்பர் 2013 வரை பட்டா மாறுதல் கோரி 1,55,132 மனுக்கள் வரப்பெற்று அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 1,53,979 மனுக்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. மீதம் 1153 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது.
இதற்கிடையே, தமிழக முதல்வரின் உத்தரவின்படி, பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு விரைவு பட்டா முகாம் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் தாலுகா தலைமையிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மனுக்கள் பெற உத்திரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அந்தந்த வட்டங்களில் உள்ள அனைத்து கிராமத்தினரும், இதுவரை பட்டாமாறுதல் மனு கொடுக்கத்தவறியவர்கள், புதிதாக மனுக்கொடுப்பவர்கள், ஏற்கனவே மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அதில் கேட்கப்பட்ட விபரங்களையும் இணைத்து அந்தந்த முகாம்களில் கொடுக்கலாம் என்றும், மேற்படி முகாம்களின்போது அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், பிர்கா சர்வேயர்கள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள் மற்றும் சிறப்பு பணியாளர்களும் கலந்துகொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
திருச்செந்தூர் ஒன்றிய அளவிலான விரைவு பட்டா மாறுதல் திட்ட சிறப்பு முகாம், இம்மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், திருச்செந்தூர், காயல்பட்டினம் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராளமானோர் பட்டா மாறுதலுக்காவும், புதிய பட்டா பெறுவதற்காகவும் விண்ணப்பித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரி முத்து, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தமிழ்ராஜன், வட்டாட்சியர் நல்லசிவன், வருவாய் ஆய்வாளர் வசந்தி, காயல்பட்டினம் வருவாய் ஆய்வாளர் வைரமுத்து உள்ளிட்ட அதிகாரிகளும், அலுவலர்களும் கலந்துகொண்டு, விண்ணப்பங்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்கினர்.
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |