பள்ளிகளுக்கிடையிலான - தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்பிக் ட்ராஃபி க்ரிக்கெட் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. விபரம் வருமாறு:-
பள்ளிகளுக்கிடையிலான - தூத்துக்குடி மாவட்ட அளவிலான 8ஆம் ஆண்டு ஸ்பிக் ட்ராஃபி 2013 க்ரிக்கெட் போட்டிகள், இம்மாதம் 07ஆம் தேதி 23ஆம் தேதி நிறைவுற்றது. இச்சுற்றுப் போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும் பங்கேற்றது.
அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட குளத்தூர் அணியுடன் மோதி, 19 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்று, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
இறுதிப்போட்டி, இம்மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை (நேற்று) மதியம் 02.30 மணியளவில் நடைபெற்றது. இதில், பழையகாயல் புனித அந்தோணியார் மேனிலைப்பள்ளி அணியை எதிர்த்து எல்.கே.மேனிலைப்பள்ளி அணி விளையாடியது. டாஸில் வென்ற எல்.கே. பள்ளி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களின் நிறைவில் அவ்வணி 9 வீரர்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அந்த அணியின் அஸார் அதிகபட்சமாக 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பழையகாயல் அணி 15 ஓவர்களில் 2 வீரர்களை மட்டும் இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. அந்த அணிக்காக அஸாருத்தீன் 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்ததன் மூலம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி இரண்டாமிடத்தைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஸ்பிக் நிறுவன துணைப் பொது மேலாளர் என்.ஆர்.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மற்றும் இரண்டாமிடம் பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும், பணப்பரிசுகளையும் வழங்கினார்.
இச்சுற்றுப்போட்டியில் நான்காமிடம் பெற்ற தருவைக்குளம் அரசு மேனிலைப்பள்ளி அணிக்கு ரூபாய் 1000 பணப்பரிசும், மூன்றாமிடம் பிடித்த குளத்தூர் அரசு மேனிலைப்பள்ளி அணிக்கு ரூபாய் 2000 பணப்பரிசும், இரண்டாமிடம் பெற்ற காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணிக்கு ரூபாய் 5000 பணப்பரிசும், முதலிடம் பெற்ற பழையகாயல் புனித அந்தோணியார் மேனிலைப்பள்ளி அணிக்கு ரூபாய் 10 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
அனைத்து அணிகளுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன. முதல் இரண்டிடங்களைப் பெற்ற அணிகளுக்கு சுழற்கேடயமும் வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக எல்.கே.பள்ளியின் பி.ஏ.முஹம்மத் அஸாருத்தீன் என்ற வீரரும், சிறந்த மட்டை வீரராக பழையகாயல் அணியின் அஸாருத்தீன் என்ற வீரரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர் |