மருத்துவப் பரிசோதனை, விளையாட்டுப் போட்டிகளுடன் நடத்தப்பட்ட - அபூதபீ காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகளில், காயலர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தித்துறை பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பொதுக்குழு & காயலர் சங்கமம்:
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபீயில் காயலர்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் அபூதபீ காயல் நல மன்றத்தின் 3ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சி, இம்மாதம் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
மருத்துவ பரிசோதனை:
நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காயலர்கள் அன்று காலை 10.00 மணி முதல் நிகழ்விடம் வந்தவண்ணம் இருந்தனர். அனைவரும் பெயர் பதிவு செய்யப்பட்டு, வரவேற்புக் குளிர்பானம் வழங்கப்பட்டனர்.
துவக்கமாக அனைவருக்கும் இரத்த அழுத்த மருத்துவ பரிசோதனை - மன்றத்தின் மருத்துவர்களால் கட்டணமின்றி செய்யப்பட்டது. தொழுகை நேரம் அண்மித்ததையடுத்து, அனைவரும் அருகிலுள்ள பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றிவிட்டு வந்தனர்.
பொதுக்குழுக் கூட்டம்:
பின்னர், பசுமை நிறைந்த புல்வெளியில் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதர அமைப்பான துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ, அபூதபீ காயல் நல மன்ற கவுரவ தலைவர் ஹாஜி ஐ.இம்தியாஸ் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ கிராஅத் ஓத, மக்கள் தொடர்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - மன்றத்தின் செயல் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ கூட்ட அறிமுகவுரையாற்றினார். மன்றச் செயலாளர் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை - மன்றம் செய்த, செய்யவிருக்கிற பணிகள் குறித்து உரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு சங்கை:
அபூதபீ - இந்தியன் பள்ளியின் தலைமையாசிரியர் ஷேக் அலாவுத்தீன், தொலைதொடர்புத்துறை இயக்குநர் ஷேக் முஜீபுர்ரஹ்மான் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு - மன்றச் சேவைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். முன்னதாக, அவர்களை அறிமுகப்படுத்தி - மன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத் உரையாற்றினார். பின்னர், அவ்விருவருக்கும் மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசுகளை - மன்றத்தின் கவுரவ தலைவர் ஹாஜி ஐ.இம்தியாஸ் அஹ்மத், துணைத்தலைவர் மக்பூல் அஹ்மத் ஆகியோர் வழங்கினர்.
அமைப்பின் ஆண்டறிக்கை:
கூட்டத்தின்போது, கடந்த ஓராண்டில் மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட நகர்நலப் பணிகள் பற்றிய சிறுகுறிப்புகளடங்கிய ஆண்டறிக்கைப் பிரசுரம் அனைவருக்கும் அச்சுப் பிரதிகளாக வினியோகிக்கப்பட்டது. ஆண்டறிக்கை வருமாறு:-
கூட்ட நிறைவு:
மன்றத்தின் செயற்குழு உறுப்பினரும் - இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான கே.வி.ஹபீப் முஹம்மத் நன்றி கூறினார். மன்றப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உள்ளூர் ஊடகங்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் துஆவுடன் பொதுக்குழுக் கூட்ட நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. மன்றப் பொருளாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மதிய உணவு விருந்துபசரிப்பு:
பின்னர், அனைவருக்கும் சுவை, மணம் கமழ - காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படியான நெய்ச்சோறு - களறிக்கறி விருந்துபசரிப்பு நடைபெற்றது.
மருத்துவ கேள்வி-பதில் நிகழ்ச்சி:
தொடர்ந்து, அறிவுக்கு விருந்தளிக்கும் வகையில் - மருத்துவ கேள்வி-பதில் நிகழ்ச்சி, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களான டாக்டர் விளக்கு செய்யித் அஹ்மத், டாக்டர் ஹமீத் யாஸர் ஆகியோர் வழிநடத்தலில் நடைபெற்றது.
பல குழுக்களாக உறுப்பினர்கள் பங்கேற்ற இப்போட்டியின் மூலம் அரிய பல தகவல்கள் புதிதாகக் கிடைக்கப்பெற்றன.
பல்சுவைப் போட்டிகள் & பரிசளிப்பு:
பின்னர், மகளிர் மற்றும் மழலையருக்கான விளையாட்டுப் போட்டிகள் பல நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டது.
துபை கா.ந.மன்றத்தினரும் பங்கேற்பு:
அனைத்து நிகழ்ச்சிகளிலும், சகோதர அமைப்பான துபை காயல் நல மன்றத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அங்கத்தினர் தம் குடும்பத்தினருடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
பசுமை நிறைந்த நினைவுகளுடன் - மாலை 06.00 மணியளவில் அனைவரும் மன நிறைவுடன் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மன்ற நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில், செயற்குழு உறுப்பினர்கள் சிறப்புற செய்திருந்தனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்ற செய்தித்துறைப் பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகளின்போது பதிவு செய்யப்பட்ட நிழற்படங்கள் அனைத்தையும், கீழ்க்காணும் இணைப்புகளைச் சொடுக்கி தொகுப்பாகக் காணலாம்.
பாகம் 1
பாகம் 2
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
செய்தியாக்கம்:
மவ்லவீ ஹாஃபிழ் S.M.B.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ
(பொருளாளர்)
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் |