காயல்பட்டினம் கடற்கரையில் உள்ள முட்புதர்களை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்துமாறு, நகராட்சி ஆணையருக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் நேரில் உத்தரவிட்டுள்ளார். விபரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டம், மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தலைமையில், இன்று காலையில் நடைபெற்றது. கூட்டத்தின்போது, மாவட்டத்தின் பல்வேறு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவை தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, காயல்பட்டினம் கடற்கரையில் இம்மாதம் 23ஆம் தேதி இரவில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வொன்றைச் சுட்டிக்காட்டி, கடற்கரையின் வடக்கு - தெற்கு புறங்களில் பரவி வளர்ந்திருக்கும் முட்புதர்களை அகற்றி அப்புறப்படுத்தினால் சமூக விரோதச் செயல்கள் தவிர்க்கப்படும் என்றும், இதற்காக பல மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அலுவலர்களால் அது நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டுவிட்டதாகவும் செய்தியாளர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கூறினார்.
இதைக் கேட்ட மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமாரை அழைத்து, கடற்கரையின் மேற்படி முட்புதர்களை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்திவிட்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். |