மலேஷியாவில் காயல் நல மன்றம் துவக்குவதற்கான முதற்கூட்டம் இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறுமென அதன் முன்னேற்பாட்டாளர்களான
குடாக் எஸ்.எம்.எச்.முஹம்மத் புகாரீ (கைபேசி எண்: 0060183505510),
பாளையம் எச்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (கைபேசி எண்: 0060182766349),
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ (கைபேசி எண்: 00601111172701)
ஆகியோரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அன்பார்ந்த மலேஷியா வாழ் காயலர்கள் அனைவருக்கும் எங்கள் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
நாம் வசித்து வரும் இந்த மலேஷியா நாட்டில் காயல் நல மன்றம் ஒன்றைப் புதிதாகத் துவக்குவதற்கு இறையருளால் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தாங்கள் யாவரும் நன்கறிவீர்கள். அதன் துவக்கமாக, மலேஷியாவில் வசிப்பதாக எங்களால் அறியப்பட்ட அனைவரது விபரக் குறிப்புகளும் சேகரிக்கப்பட்டது. எனினும், ஒரு காயலர் கூட இதில் விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில், மலேஷியா வாழ் காயலர்கள் அனைவரது விபரங்களையும் கேட்டு, நமது உள்ளூர் ஊடகங்கள் வாயிலாக அண்மையில் செய்தி வெளியிடப்பட்டதைத் தாங்கள் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக, இறையருளால் அனைவரது விபரக் குறிப்புகளும் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைப்பை முறைப்படி துவக்குவதற்கான முதல் கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் பின்வரும் விபரப்படி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது:-
கூட்ட நாள்:
30.11.2013 – சனிக்கிழமை
நேரம்:
இரவு 09.30 மணி முதல் 10.30 மணி வரை (கூட்டம்)
இரவு 10.30 மணிக்கு இரவுணவு விருந்துபசரிப்பு
இடம்:
ABC HOTEL CONFERENCE HALL
MASJID INDIA
KUALALAMPUR
இக்கூட்டத்தில், நமதூர் காயல்பட்டினத்தின் மீதும், காயலர்கள் மீதும் தீராத பற்றும், பாசமும் கொண்டுள்ளதோடு, சிங்கப்பூர் உள்ளிட்ட பிற பகுதிகளிலிருந்து காயலர்கள் மலேஷியா வரும்போதெல்லாம் தேவையான ஒத்துழைப்புகளை நிறைவாக வழங்கி வரும் - ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த சகோதரர் ஹமீத் ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அங்கத்தினர் சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பழைப்பாளர்களாகவும் கலந்துகொள்ளவுள்ள நற்செய்தியையும் உங்கள் யாவருக்கும் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
எனவே, இச்செய்தியையே அழைப்பாக ஏற்று, மலேஷியாவில் வசிக்கும் அனைத்து காயலர்களும், உங்கள் பொன்னான நேரத்தை நமதூர் நலனுக்காக ஒதுக்கித் தந்து, இக்கூட்டத்தில் அவசியம் பங்கேற்று, நல்ல பல ஆலோசனைகளை நிறைவாக வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அமைப்பு துவக்கப்படும் செய்தி இதுவரையிலும் கிடைக்கப்பெறாத காயலர்கள் யாரேனும் இருப்பின், அவர்களையும் அவசியம் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைத்து வருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ், உளத்தூய்மையுடன் நாம் மேற்கொள்ளும் அனைத்து நற்காரியங்களையும் முழுமையாக ஏற்று அருள் புரிவானாக, ஆமீன்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |