தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக - உற்பத்திக்கு அதிகமாக மின்சாரம் பயன்பாடு இருப்பதால், அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவிக்கு வந்தப்பிறகும் தொடர்ந்த இந்த சூழல், கடந்த சில மாதங்களாக பெரும் அளவில் குறைந்து, சீரான மின் விநியோகம் மாநிலம் முழுவதும் நிலவிவந்தது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சென்னை தவிர மாநிலத்தின் இதர பகுதிகளில் மீண்டும் நீண்ட நேரங்கள் மின் விநியோகம் தடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் சாமானிய மக்கள், தொழிற்சாலைகள் என பலரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து - தமிழக முதல்வர், நேற்று (நவம்பர் 26) தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் IAS, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே. சண்முகம் IAS, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் கு.ஞானதேசிகன் IAS, உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி IAS, வேளாண்மைத் துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா IAS, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் கே. பனிந்திர ரெட்டி IAS மற்றும் அரசு உயர் அலுவலகர்கள் கலந்துக்கொண்டனர்.
இதற்கிடையில் தமிழகத்தை இருளில் தள்ளுவதற்காக, மத்திய அரசு நிறுவனங்கள் சதி செய்வது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும், எனவே, இதில் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைச் சீர்செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விபரம் வருமாறு:
தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) இரண்டாவது வாரத்தில் இருந்து திடீரென கடும் மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்.
கடந்த 2011-இல் தமிழக முதல்வராக (நான்) பொறுப்பேற்ற போது, மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு இருந்தது. திமுக ஆட்சியின் செயல்படாத தன்மையால் இந்த நிலைமை ஏற்பட்டது. எனவே இந்தத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக புதிய அனல்மின் நிலையத் திட்டங்களை உருவாக்கியது, மாநில அரசுக்குச் சொந்தமான அனல்மின் நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்தியது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சாதகமான நடவடிக்கை இல்லை:
மேலும், மாநிலங்களுக்கு இடையிலான மின்கடத்தும் வழித்தடங்களை அதிகப்படுத்த வேண்டும் என தங்களுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறேன். இதன்மூலம், மிகையளவு மின்சாரத்தைக் கொண்டிருக்கும் மாநிலங்களிடம் இருந்து தமிழகத்துக்கு மின்சாரத்தை வாங்க முடியும். மத்திய மின் தொகுப்புகளில் இருந்து கூடுதலாக மின்சாரத்தை ஒதுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், இதற்கு மத்திய அரசு சாதகமான பதிலைத் தரவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஜூலையில் இருந்து நல்ல பலன்கள் கிடைத்தன. மத்திய அரசின் உதவியில்லாமலேயே மின்சாரத் தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டது. இதனால் கடந்த ஜூலையில் இருந்து நவம்பர் மாத மத்தியில் வரை மாநிலத்தில் மின்வெட்டே இல்லை.
இதுபற்றி சட்டப்பேரவையில் கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று, 4 ஆயிரம் மெகாவாட் தட்டுப்பாடு பூர்த்தி செய்யப்பட்டது எனப் பெருமிதப்பட்டேன். 2014 ஆம் ஆண்டில் இருந்து மின் மிகை மாநிலமாகத் தமிழகத்தை மாறுவதற்குத் தேவையான திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தேன்.
மின்சார விநியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதைக் கண்டு, மக்கள் மகிழ்ச்சி அடைந்து அரசைப் பாராட்டினர். இந்தநிலையில் மாநிலத்தில் மின்சார நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இதற்குக் காரணம், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள உற்பத்திக் குறைபாடாகும்.
மத்திய மின் உற்பத்தி நிலையங்கள்:
மத்திய அரசு மற்றும் அதன் பொதுத் துறை நிறுவனங்களான தேசிய அனல்மின் கழகம் (என்.டி.பி.சி.), பாரத மிகுமின் நிறுவனம் (பெல்), இந்தியன் ஆயில் நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றில் இருந்து 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழகத்துக்கு அளிக்கப்படுகிறது. அதில் இப்போது எதிர்பாராத வகையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
வட சென்னை அனல்மின் நிலையத்தின் 600 மெகாவாட் திறனுடைய இரண்டு அலகுகளில் கடந்த 16 ஆம் தேதியன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்துக்கு உரிய காரணம் கூறப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட அலகுடன், மற்றொரு 600 மெகாவாட் திறனுடைய அலகினை பெல் நிறுவனம் தனியாக இயக்கி வருகிறது.
சென்னை அருகே வல்லூரில் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் மற்றும் தேசிய அனல்மின் கழகம் கூட்டு ஒப்பந்த முறையில் 500 மெகாவாட் திறனுடைய இரண்டு அலகுகளை இயக்கி வருகின்றன. இந்த இரு அலகுகளில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. ஆனால், கடந்த 14 ஆம் தேதி முதல் நிலக்கரி தட்டுப்பாட்டினால் ஒரு அலகில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
வல்லூரில் மட்டுமின்றி, தமிழ்நாடு மின்சார உற்பத்திக் கழகத்தின் அனைத்து அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம்தான் நிலக்கரியை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்கு 1,113 மெகா வாட் ஆகும். ஆனால், தற்போது 777 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது. என்.எல்.சி. அலகுகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 336 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கல்பாக்கம் மற்றும் கர்நாடகத்தின் கைகா அணுமின் நிலையங்களில் உற்பத்தி இல்லாததால் 241 மெகா வாட் மின்சாரம் கிடைக்கவில்லை. நாப்தா மூலமான மின் உற்பத்திக் திட்டத்துக்குப் போதிய மூலப் பொருளை இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்காததால் அந்த உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
சதி நடக்கிறதோ என சந்தேகம்:
இதனால் நவம்பர் மாத மத்தியில் இருந்து மீண்டும் மின்வெட்டு அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகிவிட்டது. தேசிய அனல்மின் கழகம் மற்றும் பெல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மின்உற்பத்தி நிலையங்கள் ஒரே நேரத்தில் இயல்பாக செயலிழந்து விட்டன என்பதை தமிழக மக்களால் சுலபமாக நம்ப முடியவில்லை.
மத்திய மின் உற்பத்தி நிலையங்களின் மோசமான செயல்பாடுகளால் மின்சார உற்பத்தியில் தொடர் பாதிப்பு ஏற்படுமானால் தமிழகத்தை இருளில் தள்ள சதி நடக்கிறதோ என்ற முடிவுக்கு மக்கள் வரக் கூடும்.
எனவே, மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் முழுத்திறனுடன் உற்பத்தியைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய ஆற்றல் மற்றும் நிலக்கரித் துறையினருக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் கடிதம் முழுமையாக ஆங்கிலத்தில் ...
தகவல்:
தினமணி மற்றும்
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.
|