ஐசன் வால்நட்சத்திரம் (COMET ISON; C/2012 S1) - சூரியனுக்கு மிக அருகாமை நிலையை (PERIHELION) இன்றிரவு அடைகிறது. இங்கிலாந்து
நேரப்படி வியாழக்கிழமை மாலை 6:35 மணிக்கு (இந்திய நேரம் - நள்ளிரவு 12:05, வெள்ளிக்கிழமை, நவம்பர் 29) - சூரியனில் இருந்து சுமார் 12
லட்ச கிலோமீட்டர் தூரத்தில் ஐசன் வால்நட்சத்திரம் இருக்கும். ஐசன் வால்நட்சத்திரம் - மணிக்கு சுமார் 12 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில்
பயணித்து கொண்டிருக்கிறது. டிசம்பர் 26 அன்று பூமிக்கு மிக அருகாமை தூரமான (PERIGEE) 4 கோடி கிலோமீட்டர் அளவை ஐசன் வால்நட்சத்திரம் அடையும்.
சூரியனை ஐசன் வால்நட்சத்திரம் நெருங்கும்போது SOHO விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படம் ...
இந்த வால்நட்சத்திரத்தின் மையக் கரு (NUCLEUS) சுமார் 2 கிலோமீட்டர் அகலம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சூரியனுக்கு மிக அருகாமையில்
செல்லும்போது - சூரிய வெப்பம், 2700 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், இந்த வெப்பத்தை தாங்கி - வால்நட்சத்திரம், முழுமையாக தன்
பயணத்தை தொடருமா என பார்க்க ஆவலுடன் விஞ்ஞானிகள் உள்ளனர்.
நவம்பர் 15 அன்று தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு எடுக்கப்பட்ட படம் ...
சூரிய வெப்பத்தால் பெரிய அளவு பாதிப்பு இன்றி இந்த வால்நட்சத்திரம் மீண்டால், டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து ஜனவரி வரை -
வெறுங்கண்கள் கொண்டு, பூமியின் வட பகுதிகளில் (NORTHERN HEMISPHERE) இருந்து - இந்த வால்நட்சத்திரத்தை - காணலாம் என நம்பப்படுகிறது.
வால்நட்சத்திரங்கள் பனிக்கட்டி போன்ற விண்வெளி பொருட்கள் ஆகும். பொதுவாக வால்நட்சத்திரங்களை - விண்வெளி ஆய்வாளர்கள், நீண்ட கால
பயண வால்நட்சத்திரங்கள், குறுகிய கால வால்நட்சத்திரங்கள் என இருவகையாக பாகுபடுத்துவர்.
குறுகிய கால வால்நட்சத்திரங்கள் - பூமியில் இருந்து 30 AU முதல் 55 AU தூரத்தில் உள்ள கைபர் பெல்ட் (KUIPER BELT) என்ற பகுதியில் இருந்து
வரும். I AU என்பது பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள சராசரி தூரமான 15 கோடி கிலோமீட்டர் அளவை குறிக்கும். இந்த பகுதியில் கோடிக்கணக்கான
வால் நட்சத்திரங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்பகுதி வால்நட்சத்திரங்கள் - குறுகிய கால வால்நட்சத்திரங்கள் என கூற
காரணம், இவை சூரியனை சுற்ற சுமார் 200 ஆண்டுகள் வரை எடுக்கும் என்பதாகும்.
நீண்ட கால வால்நட்சத்திரங்கள் - பூமியில் இருந்து 5,000 AU முதல் 1,00,000 AU தூரத்தில் உள்ள ஊர்ட் மேகம் (OORT CLOUD) என்ற
பகுதியில் இருந்து வரும். இவை சூரியனை வலம்வர பல ஆயிரம் ஆண்டுகள் எடுக்கும்.
செப்டம்பர் 21, 2012 அன்று International Scientific Optical Network என்ற ரஷ்ய நிறுவனத்தில் பணிப்புரிந்த விஞ்ஞானிகள் - Vitaly
Nevsky மற்றும் Artyom Novichonok ஆகியோர் இந்த வால் நட்சத்திரத்தை - முதல்முறையாக தொலைநோக்கிகள் மூலம் - கண்டுபிடித்தனர்.
விஞ்ஞானிகள் ஒரு விண்வெளி பொருளின் பூமியில் இருந்து காணக்கூடிய தன்மையை ASTRONOMICAL MAGNITUDE SCALE என்ற அளவுக்கோல் மூலம் குறிப்பிடுவர். இந்த முறைப்படி சூரியன் (-)23 என்றும், முழு நிலா (-)13 என்றும் அளவிடப்பட்டுள்ளது.
இந்த வால்நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டப்போது, இதன் ஒளி அளவு +18.8 என இருந்தது எனக்கூறப்படுகிறது. சூரியனை நெருங்க நெருங்க இது அதிகரித்து சமீபத்தில் சுமார் +5 அளவை அடைந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொதுவாக நகர வெளிச்சத்தை தாண்டி வெகு தூரத்தில் உள்ள கிராம பகுதிகளில் இருந்து +7 அளவிலான விண்வெளி பொருட்களை காணலாம். நகர்ப்புறங்களில் +4 அளவு அல்லது அதற்கு கூடுதலான (+3, +2 ...) விண்வெளி பொருட்களையே காண முடியும்.
ஐசன் நட்சத்திரம் - நிலவின் ஒளி தன்மையை அடையும் என்ற சில ஊடக செய்திகளை விஞ்ஞானிகள், சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
ஐசன் வால்நட்சத்திரம் குறித்த நேரடி ஒளிபரப்புக்கு நாசா அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும் |