கேரளா மாநிலம் ஆலப்புழையை சார்ந்த இளைஞர் விஜோ வர்கீஸ். கர்நாடகா மாநிலம் ஷிமோகா நகரில் வசிக்கும் இவர், நவம்பர் 14 குழந்தைகள் தினம் அன்று - அனைவருக்கும் கல்வி (EDUCATION FOR ALL) மற்றும் குழந்தை தொழிலாளர்கள் கூடாது (NO TO CHILD LABOUR) என்ற இரு முழக்கங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் நோக்கில்,7000 கிலோமீட்டர் பயணத்தை - தனது இருசக்கர வாகனத்தில் - துவக்கினார்.
ஷிமோகாவில் துவங்கிய இவர் பயணம் உடிப்பி, மங்களூர், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு, கண்ணூர், கோழிகோடு, திருச்சூர் போன்ற ஊர்கள் வழியாக தொடர்ந்தது. பொதுவாக கிராம பகுதிகளில் தனது பயணத்தை தொடர்ந்த இவர், நேற்று (நவம்பர் 27) காயல்பட்டினம் வந்தார்.
மாலை 5 மணியளவில் சென்ட்ரல் பள்ளிக்கூட மாணவர்களை - சந்தித்து பேசிய வர்கீஸ், நாடு முழுவதும் ஆரம்ப கல்வியை அனைவரும் கற்க வேண்டும். அனாதை குழந்தைகள், திக்கற்ற சிறார்கள், தெருவில் வசிக்கும் குழந்தைகள் போன்றார்க்கு ஆரம்ப கல்வி அவசியம் வேண்டும். இவர்களுக்கு இக்கல்வி கிடைக்காத பட்சத்தில் பல குழந்தைகள் சமூக விரோத செயலில் ஈடுபடுவதற்கும், அல்லது குழந்தை தொழிலாளர்களாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இதை தடுக்கும் நோக்கில் தாம் நான்கு மாநிலத்தில் உள்ள பள்ளிகள், பொதுநல அமைப்புகள் ஆகியவற்றிற்கு சென்று மக்கள் மத்தியில் இதற்கான விழிப்புணர்வை தான் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
பொறியியல் படிப்பில் டிப்ளோமா பெற்றுள்ள விஜோ வர்கீஸ் தமது அடுத்த கட்ட பயணமாக இந்தியா முழுவதும் செல்ல இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
புகைப்படங்கள் மற்றும் தகவல்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம்.
|