அனைத்து கிராமங்களிலும், அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்குவதற்காக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது அம்மா (Assured Maximum Service to Marginal People in All Villages) திட்டம். இத்திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் வட்டத்தில் - காயல்பட்டினம் நகராட்சியை உள்ளடக்கிய காயல்பட்டினம் தென்பாகம் கிராம பகுதியில் ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமையன்று வட்டாட்சியர் தலைமையில் முகாம் நடைபெற்றது.
ரேஷன் கார்டு பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்கல், திருத்தம், பட்டா பெயர் மாற்றம், அரசு உதவிகள் பெறுவதற்காக சான்றிதழ் போன்ற சேவைகளை இம்முகாம் மூலம் பலர் பெற்றனர்.
சுழற்சி முறையில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டியுள்ள இந்த முகாம்களின் அடுத்தக்கட்ட கால அட்டவணை தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் - காயல்பட்டினம் தென் பாகம் கிராம பகுதியில், அடுத்தாண்டு (2014) ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை அன்று அம்மா முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட 2014 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்கள் குறித்த செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 29, 2014 அன்று விநாயக சதுர்த்தி முன்னிட்டு விடுமுறை என தெரிவித்துள்ளது.
அரசு விடுமுறை தினத்தில் அம்மா முகாம் நடத்தப்படுமா என சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் காயல்பட்டணம்.காம் வினவியது. அரசு விடுமுறை நாட்களில் இந்த முகாம் நடக்காது என்றும், காயல்பட்டினம் தென் பாகம் பகுதியில் இம்முகாம் தேதி மாற்றப்பட்டு புது தேதியில் நடத்தப்படும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.
காயல்பட்டினம் தென் பாக கிராமத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள தேதிக்கு இரு வாரங்களுக்கு முன்னர் - ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று - பள்ளிப்பத்து என்ற ஊரில் இம்முகாம் நடக்கும் என்றும் அரசு அறிவிப்பு தற்போது தெரிவிக்கிறது. இந்த தேதியும் மாற்றப்படும் என அரசு அதிகாரி காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் தெரிவித்தார். |