ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற அரசு சான்றிதழ்களை பெற பொது மக்கள், பொதுவாக திருசெந்தூரில் உள்ள தாலுகா அலுவலகத்தை நாடுவது வழக்கம். காயல்பட்டினத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திலும் சில சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம் என்ற வசதியும் உள்ளது. இருப்பினும் - இவ்வழிகள் மூலம் சான்றிதழ்களை பெற காலதாமதம் ஆவது உண்டு.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் - சமீபத்தில் இச்சான்றிதழ்களை அரசு அலுவலகங்களை தவிர அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்களின் மூலமும் பெறலாம் என்ற வசதியை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து ஆறுமுகநேரி போன்ற ஊர்களில் வங்கிகள் இச்சேவையை வழங்க முன்வந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகளில் ஒரு நகராட்சியான காயல்பட்டினத்திலும் இச்சேவை அறிமுகம் செய்யப்படவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் IAS யை செப்டம்பர் மாதம் சந்தித்த நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தரும்படி மாவட்ட ஆட்சியர் அவ்வேளையில் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து - செப்டம்பர் மாத நகர்மன்ற கூட்டத்தில் பொருள் எண் 68 ஆக, இவ்விசயம் குறித்த நகர்மன்றத் தலைவரின் கடிதம் இடம்பெற்றது. நகர்மன்றத் துணைத் தலைவர் மும்பை மொஹிதீன் என்ற எஸ்.எம். மொஹிதீன் தவிர - கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் (தீர்மானம் எண் 598) நிறைவேற்றப்பட்டது.
தீர்மான நகல் மாவட்ட ஆட்சியற்கு அனுப்பப்பட்டதை அடுத்து - நேற்று (நவம்பர் 28) - தூத்துக்குடி மாவட்ட கேபிள் தொலைகாட்சி சம்பந்தமான சிறப்பு தாசில்தார் ராமசாமி, இச்சேவையை காயல்பட்டினத்தில் துவக்க தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள இடத்தை பார்வையிட்டார். இதற்கு முன்னர் குடிநீர் கட்டணம் வசூல் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த பார்வையிடப்பட்ட இந்த அறையில், சிறு பராமரிப்பு பணிகளை உடனடியாக நிறைவு செய்தால் - இச்சேவையை காயல்பட்டினத்தில் விரைவில் துவக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், 5வது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கிர், 6வது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் மொஹிதீன், 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
புகைப்படங்களில் உதவி:
எம்.ஜஹாங்கிர்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 6:55 pm / 29.11.2013] |