சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்கான உண்டியல் நன்கொடையாக உறுப்பினர்களிடமிருந்து ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் வெளியிட்டுள்ள அறிக்கை:-
செயற்குழுக் கூட்டம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 06ஆம் தேதி இரவு 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
கிராஅத்துடன் துவங்கிய இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத், அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், அண்மையில் தான் ஹஜ் பயணம் சென்று வந்த அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்துகொண்டதோடு, மன்றத்திற்காகவும் - மன்ற உறுப்பினர்களுக்காகவும் - ஹஜ்ஜின்போது துஆ இறைஞ்சியதாகக் கூறினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் உரையாற்றுகையில், முதன்முறையாக மன்றக் கூட்டத்தை ஒருங்கிணைக்க தன்னிடம் பொறுப்பு வழங்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தன்னாலியன்ற அளவுக்கு அதை நன்முறையில் செய்துள்ளதாகவும் கூறியதோடு, தற்போது சிங்கப்பூரில் வேலைவாய்ப்புச் சந்தை மிகவும் நெருக்கடியான சூழலில் இருந்து வருவதைக் கருத்திற்கொண்டு, புதிதாக வேலைவாய்ப்பு தேடி சிங்கைக்கு வரும் காயலர்களுக்கு, மன்ற உறுப்பினர்கள் கூடுதல் ஒத்துழைப்பு வழங்கி வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தேடி வருகை தந்த காயலரான ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் பாதுஷா இக்கூட்டத்தில் மன்றத்தின் புதிய உறுப்பினராக இணைந்துகொள்வதாகக் கூறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதோடு, தனக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக மன்ற அங்கத்தினர் அளித்த ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
கடந்த கூட்ட நிகழ்வறிக்கையையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பான விளக்கங்களையும், மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் விவரித்துப் பேசினார். 2014ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கையை, மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளரான ஜவஹர் இஸ்மாஈல் தயாரித்து வருவதாகவும், விரைவில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, பொருளாளர் அபூ முஹம்மத் உதுமான், துணைச் செயலாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை ஆகியோரிணைந்து கூட்டத்தில் சமர்ப்பித்தனர். மன்ற உறுப்பினர்கள் தமது சந்தா தொகைகளை நிலுவையின்றி செலுத்தச் செய்திடும் பொருட்டு, கூடுதல் முயற்சிகள் செய்யப்படவுள்ளதாக அப்போது அவர்கள் கூறினர்.
‘ஷிஃபா’ விண்ணப்பங்கள் பரிசீலனை:
ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது போல, ‘ஷிஃபா’ மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உதவித்தொகை ஒப்புதல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த கூட்டத்திற்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் குழுவின் இசைவு பெறப்பட்டுள்ளதாக - அக்குழுவில் ஒருவரான கே.எம்.டி.ஷேக்னா லெப்பை தெரிவித்தார்.
அடுத்த குடும்ப சங்கமம்:
மன்றத்தின் அடுத்த குடும்ப சங்கம நிகழ்ச்சி, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களது இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியாக - வரும் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 அல்லது 4ஆவது வாரத்தில் நடைபெறும் எனவும், நிகழ்விடம் (Chalet) அமையப்பெறுவதன் அடிப்படையில், தேதியும் - இடமும் முடிவு செய்யப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளராக எம்.எம்.அப்துல் காதர் இக்கூட்டத்தில் நியமிக்கப்பட்டார்.
மலேஷிய கா.ந.மன்ற துவக்கத்திற்கு வாழ்த்து:
மலேஷிய காயலர்களை ஒருங்கிணைத்து அண்மையில் துவக்கப்பட்ட மலேஷிய காயல் நல மன்றம் (KWAMALAY) அமைப்புக்கு, இக்கூட்டத்தில் வாழ்த்துக்களும் - பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. அம்மன்றத்தின் பணிகள் சிறக்க, சிங்கை காயல் நல மன்ற உறுப்பினர்கள் அனைவரும் எல்லா வகையான ஒத்துழைப்புகளையும் நிறைவாக வழங்க வேண்டுமென மன்றத் தலைவர் அனைவரையும் கேட்டுக்கொண்டதோடு, KWAMALAY துவக்கக் கூட்டத்தில், சிங்கை காயல் நல மன்றத்தின் பிரதிநிதியாகச் சென்று கலந்துகொண்ட உறுப்பினர் அப்துர்ரஹீமுக்கு நன்றி தெரிவித்தார்.
உண்டியல் திறப்பு:
மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கான நிதி சேகரிப்புத் திட்டங்களுள் ஒன்றான - உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், மன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட உண்டியல்கள் இக்கூட்டத்தில் திறக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட ஆடிட்டர் ஹாஜா மைதீன் - முதல் உண்டியலைத் திறந்து எண்ணிக்கையைத் துவக்கி வைத்தார். மொத்த உண்டியல் நிதியாக இந்திய ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் தொகை சேகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இரவுணவு விருந்துபசரிப்பு:
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் கோழிக்கறி கலந்த இடியாப்ப பிரியாணி இரவுணவாக விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, சிங்கை காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் குறித்து, அதன் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |