சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் கருணாநிதி, க.அன்பழகனுக்கு வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் பேசிய பலரும் மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடலாம்; காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் கூட்டணி வேண்டாம் என்று திருச்சி சிவா, கே.என்.நேரு, பழனி மாணிக்கம் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
ஒரு சில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, பா.ஜ.க.வுடனும் கூட்டணி வேண்டாம். நடிகர் (விஜயகாந்த்) கட்சி நமக்கு மரியாதையே தருவதில்லை. எனவே அந்தக் கட்சியுடனும் கூட்டணி வேண்டாம். 1989 தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவியது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த திமுக அமோக வெற்றிபெற்றது. எனவே அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தனர்.
தி.மு.க.வின் தென் சென்னை பகுதியின் செயலாளர் ஜெ. அன்பழகன் - பாரதிய ஜனதா கட்சியுடன் தேர்தல் கூட்டு வைத்துக்கொள்ள ஆதரவு தெரிவித்தாக தி ஹிந்து (ஆங்கிலம்) நாளிதழ் தெரிவிக்கிறது.
திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஆற்றிய உரையின் முழு வடிவம்:
"நம்முடைய கழகத்தின் இதயமாம் பொதுக்குழு நிறைவுறும் நிலையை அடையவிருக்கின்ற இந்த நேரத்தில் நான் பேருரையாற்றவோ, உங்களை
அதற்காக காத்திட வைக்கவோ விரும்பவில்லை. ஏனென்றால் நேற்றும், இன்றும் நீங்கள் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வந்து,
எங்களையெல்லாம் சந்திக் கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, கழகத்தின் எதிர்காலத்திற்கு இந்தப் பொதுக்குழு வாயிலாக என்ன கருத்துக்களை
பெறலாம், எத்தகைய ஊக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்ற நிலையில், நான் சில வார்த்தைகளை உங்களுக்கு வேண்டுகோளாக வைக்க
விரும்புகிறேன்.
கழகத்தின் பொதுச் செயலாளரும், நான் நேற்றைய தினம் குறிப்பிட்டதைப்போல என்னுடைய இளைய அண்ணனுமான பேராசிரியப் பெருந்தகை
அவர்கள், உடல் நலிவைக் கூடப் பொருட்படுத்தாமல், ஒரு எழுச்சி உரையை இப்போது ஆற்றியிருக்கிறார்.
அந்த உரையில் அவர் வெளியிட்ட எண்ணங்கள், கருத்துகள், இவைகள் அனைத்தும் கடந்த பல ஆண்டுக் காலமாக, இந்த இயக்கம், பகுத்தறிவு
இயக்கமாக இருந்த அந்த நேரத்திலேயே எடுத்துச் சொல்லப்பட்டு, அவைகளை ஏற்றுக் கொள்பவர்கள் ஊருக்கு ஒருவர் தான் என்ற நிலையிலே
இருந்து இன்றைக்கு எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை நான் இங்கே எடுத்து விளக்கி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று
இல்லை.
ஆனால் எப்படிப்பட்ட அடித்தளம், எத்தகைய அஸ்திவாரம் இந்த இயக்கத்திற்காகப் போடப்பட்டு, தந்தை பெரியார் அவர்களால் அது
வலிவுபடுத்தப்பட்டு, அறிஞர் அண்ணா அவர்களால் வளர்க்கப்பட்டு, நம்முடைய ஓயாத உழைப்பில், நாம் வழங்கிய தொண்டுகளால் அது வானுயர
ஓங்கி, வையம் புகழும் கழகமாக ஆகியிருக்கின்ற இந்த நேரத்தில், எனக்குள்ள வேதனையெல்லாம் இந்த இயக்கத்திற்கு தேர்தல் மூலம் ஒரு
சோதனையா? இந்த இயக்கத்திற்கு கூட்டணிகள் அமைப்பதில் ஒரு இன்னலா? இடுக்கண்ணா? என்றெல்லாம் ஏற்படுவது தான்!
ஆனால் நாம் இப்போது சந்திக்கவிருக்கின்ற இந்த ஒரேயொரு தேர்தலை மாத்திரமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய 1949 ஆம் ஆண்டு
தொட்டு இன்று வரையிலே தேர்தல் களங்களைச் சந்திக்காமலும், பிறகு சந்தித்து பல வெற்றிகளைப் பெற்றும், இப்போது நடைபெறவிருக்கும்
நாடாளுமன்றத் தேர்தலில், அடுத்து வரவிருக்கின்ற சட்ட மன்றத் தேர்தலில் நாம் எத்தகைய வியூகத்தை வகுக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களாக
இங்கே அமர்ந்திருக்கிறோம்.
நம்முடைய பேராசிரியர் இங்கே குறிப்பிட்டாரே, சுயமரியாதையைப் பற்றி, அந்தச் சுயமரியாதை உணர்வும், அதே நேரத்தில் சுயநலமற்ற தன்மையும்,
பொது நல நோக்கும் நமக்கு இருக்குமேயானால், எத்தனை தேர்தல்கள் வந்தாலும், இந்த இயக்கத்தை யாராலும் அந்தத் தேர்தல் மூலமாக அசைத்து
விட முடியாது என்ற நம்பிக்கையை நமக்கெல்லாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இப்போது இந்தப் பொதுக்குழுவில் காலை முதல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதல் தீர்மானமாக அமைந்தது, நெல்சன் மண்டேலாவின்
மறைவு குறித்து நமது மன வேதனையை வெளிப்படுத்திய அனுதாபத் தீர்மானமாகும். மண்டேலா மறைந்ததற்காக இந்தப் பொதுக்குழுவில் நாம்
தீர்மானம் நிறை வேற்றுகின்ற அதே நேரத்தில், இதே மண்டேலா அவர்கள் 27 ஆண்டுக் காலம் தான் கொண்ட கொள்கைக்காக, நிறவெறியை
நிர்மூலமாக ஆக்க வேண்டும் என்று எடுத்துப் பிடித்த இலட்சியப் பதாகைக்காக அவர் அந்த இருண்ட கண்டத்திலே சிறையிலே இருந்தார் - 27 ஆண்டுக்
காலம். இன்றைக்கு 27 நாள் சிறையிலே இருந்தோம் என்றாலே, அதைப் பெரிதாக "தியாகிகள்" பட்டியலிலே இணைக்கின்ற இந்தக் காலத்தையும்,
27 ஆண்டுக் காலம் ஒரு மனிதர் சிறையிலே இருந்தார் என்பதையும் எண்ணிப் பார்க்கும்போது, அந்தத் தியாகம் தான் அவரை தென்னாப்பிரிக்காவின்
தலைவராகவே ஆக்கியது என்பதையும், இன்றைக்கு உலகம் முழுதும் உள்ள மக்கள், உலகம் முழுதும் உள்ள தலைவர்கள், உலகம் முழுதும் உள்ள
இயக்கங்கள், அவருக்காக கண்ணீர் சிந்துவது மாத்திரமல்ல, இரங்கல் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன என்பதையும், நம்முடைய இந்திய
நாட்டிலிருந்து குடியரசு தலைவரும், திருமதி சோனியா காந்தி அவர்களும் சென்று, அவருக்கு வீர வணக்கம் செலுத்தி விட்டு வருகிறார்கள் என்றால்,
அவருக்குக் கிடைத்த வெற்றி, அவர் சோதனைகளை இடறி, சிறைக் கஷ்டங்களை யெல்லாம் துச்சமெனக் கருதி, நடந்த பயணத்தினால் தான் இந்த
வெற்றி அவருக்கும், அவருடைய இயக்கத்திற்கும் கிடைத்தது.
அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கு, அவர் தெரிவித்த ஒரு கருத்தைச் சொல்கிறேன். "Honesty, sincerity, simplicity, humility, pure
generosity, absence of vanity, readiness to serve others - qualities which are within easy reach of every soul - are the
foundation of one’s spiritual life." இதனைத் தமிழிலே சொல்ல வேண்டுமேயானால் நேர்மை, உண்மை, எளிமை, பணிவு, தாராள
மனப்பான்மை, தற்பெருமை இன்மை, மற்றவர்க்குச் சேவை செய்யத் தயாராக இருக்கும் மனநிலை ஆகிய குணநலன்களே ஒரு மனிதனின்
வாழ்க்கைக்கு அடிப்படையாகும். இது நெல்சன் மண்டேலாவினுடைய வார்த்தைகள்.
அது மாத்திரமல்ல; மேலும் சொல்கிறார். "In real life we deal, not with gods, but with ordinary humans like ourselves : men and
women who are full of contradictions, who are stable and fickle, strong and weak, famous and infamous." (மாறாததும் மாறுவதும்
- வலிமையானதும் வலுவிழந்ததும் - புகழ் மிக்கதும் புகழ் இழந்தது மான முரண்பாடுகள் மிக்க ஆண்களோடும், பெண்களோடும் வாழ்க்கையில் நாம்
பழகுகிறோம்; கடவுளர்களோடு அல்ல; நம்மைப் போன்ற சாமான்ய மனிதர்களுடனேயே நாம் பழகுகிறோம்) இதுவும் நெல்சன் மண்டேலா எடுத்துச்
சொன்ன வாசகம் தான்.
நான் இந்த இரண்டையும் இங்கே நம்முடைய பேராசிரியர் குறிப்பிட்ட நம்முடைய ஆரம்பக் காலப் பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துகளோடு ஒப்பிட்டுப்
பார்த்து எந்த மண்டேலா அவர்களுக்கு நாம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, இங்கே நம்முடைய கண்ணீரைக் காணிக்கையாக்கினோமோ, அந்த
மண்டேலா உதிர்த்த வார்த்தைகளை, வாசகங்களை, வழிமுறை களை, மனித சமுதாயத்தைப் பற்றிய மகோன்னதமான எண்ணங்களை,
ஆண்டவனைப் பற்றி அவர் சொன்ன உண்மைகளை, மனதிலே பதிய வைத்துக் கொண்டால் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது மாத்திரமல்ல,
அவருடைய கருத்துக்களை, எப்படி பெரியாருடைய கருத்துகளை, அண்ணாவின் எண்ணங்களை நாம் பின்பற்றி நடக்க இன்றைக்கு நம்மைத் தயார்
படுத்திக் கொண்டிருக்கிறோமோ, அதற்குப் பெரும் உதவியாக நான் இங்கே எடுத்துச் சொன்ன இந்த வாசகங்கள், நெல்சன் மண்டேலாவின் வாசகங்கள்
துணை புரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதைத் தான் நான் இங்கே உங்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
நம்முடைய இயக்கத்தின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் எத்தகைய சோதனை ஆனாலும், வேதனை ஆனாலும் அவைகளை யெல்லாம் நாம் கடந்து
நின்ற, தாங்கிப் பழகியிருக்க; காரணம் என்றால், இப்படிப்பட்ட கருத்துகள் அடங்கிய மாமனிதர்களுடைய சொற்களைப் பின்பற்றியது, அவர்களுடைய
வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று இந்த இயக்கத்தின் தலைவர்கள் நமக்குக் கற்பித்ததை மறவாமல், இன்று வரையில் நடை
போட்டுக் கொண்டிருப்பது தான் நம்மை இன்றைக்கு வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற சக்தி என்பதை மறந்து விடக் கூடாது.
ஏதோ தேர்தலில் நாம் ஈடுபட வேண்டும்; வேண்டுமா, வேண்டாமா எப்படி ஈடுபடுவது? எந்த வகையில், என்ன முறையில், யாரோடு கூட்டுச் சேர்ந்து
என்றெல்லாம் இன்றைக்கு இந்தப் பொதுக்குழுவில் கேள்விகள் கேட்கப்பட்டு, வழி முறைகளும் கூறப்பட்டு, இறுதியாக எல்லா பொறுப்புகளையும்
நீங்களே தாங்கிக் கொள்ளுங்கள் என்று எங்கள் தலையிலே பாரத்தைச் சுமத்தி ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி, அதற்கான கையொலிகளையும்
பெற்று எங்களை இதிலே சிக்க வைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை
தனித்து நின்றே கூட இந்த வெற்றியைப் பெற முடியும். (நீண்ட கைதட்டல்) அவசரப்பட்டு கை தட்டக் கூடாது. "தனித்து நின்றே கூட" என்று நான்
கூறும்போது, "கூட" என்று குறிப்பிட்ட வார்த்தையை மறந்து விடக் கூடாது. தனித்து நின்றே இந்த வெற்றியைப் பெறுவோம் என்று நான்
சொல்லவில்லை. தனித்து நின்றே கூட நாம் வெற்றி பெற முடியுமென்று சொன்னால், கொஞ்ச நஞ்சம் ஒருவர், இருவருடைய உதவி இருப்பது
நல்லது.
நம்முடைய பேராசிரியர் இந்த மேடையில் வந்து அமர்ந்து, காலையிலிருந்து இதுவரை நம்முடைய கருத்துகளையெல்லாம் கேட்டறிந்து, தேவையான
அறிவுரைகளையெல்லாம் எடுத்துச் சொன்னாரென்றால், அதைப் போல நான் நேற்றும் இன்றும் உங்களோடு இருந்து உங்களுடைய
கருத்துகளையெல்லாம் கேட்டேன் என்றால் அதற்கு என்ன காரணம்? எந்த உணர்வு? என்பதை நாம் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று நான் கேட்பதும், பேராசிரியர் கேட்பதும், அவர் என்ன சொல்கிறார் என்று நான் உணர்வதும், என்னுடைய
உணர்வை அவர் புரிந்து கொள்வதும் இது தான் இந்த இயக்கத்தின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் இன்றைக்கு உதவிக் கொண்டிருக்கின்ற
நிலையாகும். அந்த நிலை இந்தப் பொதுக்குழுவில் நேற்றும் இன்றும் நான் காண்கிறேன். இந்த நிலை ஏதோ நிலைதடுமாறிப் போய் விட வேண்டும்
என்று யாரும் கருதத் தேவையில்லை.
மோடி அவர்கள் அரங்கத்திற்கு வந்திருக்கிறார். வந்த நேரமே, வந்த விதமே, அவருடைய படாடோப விளம்பரங்கள், அவருக்காக பத்திரிகைகள்,
ஊடகங்கள், கார்பரேட் நிறுவனங்கள் தருகின்ற ஊக்கங்கள், உலகம் முழுதும் இருக்கின்ற செய்தியாளர்கள் அல்லது ஊடக உரிமையாளர்கள் தருகின்ற
விளம்பரங்கள்!
இங்கே நம்முடைய முதல் அமைச்சருக்கே - இன்னும் சில நாட்களில் அவர்களுடைய கட்சி பொதுக்குழுவினைக் கூட்டுகிறார்கள் என்பதற்காக, இந்தப்
பொதுக் குழு முடிந்து நாம் செல்வதற்குக் கூட இடம் இல்லாத அளவிற்கு, எங்கு பார்த்தாலும் இப்போதே கம்புகளைக் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
நாளைக்கு "அம்மா", "அம்மா", என்று ஒவ்வொரு இடத்திலும் பெரிய பெரிய பலகைகளை வைத்து, பாதைகளை யெல்லாம் மறைப்பார்கள்.
அப்படிப்பட்ட விளம்பரங்கள் இங்கே ஒரு முதல் அமைச்சருக்கே செய்யப்படுகிறதென்றால், நாளைக்கு பிரதமராக ஆகப் போகிறார் என்று ஆசைப்படுகிற
கட்சியினர், அந்தப் பிரமுகருக்கு எவ்வளவு பெரிய விளம்பரங்களைத் தருவார்கள்? எவ்வளவு பெரிய ஆடம்பரமான அறிமுகங்களைச் செய்வார்கள்?
என்ற நிலையை தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.
நான் கூட நண்பர்களிடம் பேசும்போது, ஒருவருடைய விளம்பரத்தைப் பார்த்தால், ஏடுகளில் எட்டுப் பக்கச் செய்திகள், முதல் பக்கச் செய்திகள், ஒரு
பக்க விளம்பரங்கள் என்றெல்லாம் வருவதைப் பார்த்தால், எனக்கு, பேராசிரிய ருக்கு, ஸ்டாலினுக்கு, எங்களுக்கெல்லாம் அதிலே எந்தவிதமான
அதிர்ச்சியும் கிடையாது. நீங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டீர்களோ என்ற சந்தேகம் தான். அந்த அதிர்ச்சியின் காரணமாகத் தான் இன்று காலையிலே
இருந்து நீங்கள் ஆற்றிய உரைகளில் எல்லாம், உங்களுடைய பேச்சுக்கிடையே பாரதீய ஜனதா, பாரதீய ஜனதா என்று குறிப்பிட்டீர்களோ என்று
என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பாரதீய ஜனதா என்பதை நாங்களும் ஒரு காலத்தில், அந்தச் சொல்லை உச்சரித்துக்
கொண்டிருந்தவர்கள் தான். அந்த பாரதீய ஜனதோடு நாம் நட்பு கொண்டிருந்தவர்கள் தான். அது எந்தப் பாரதீய ஜனதா? இங்கே தம்பி டி.ஆர். பாலு
குறிப்பிட்டதைப் போல, மனிதாபிமானமில்லாமல் நடந்து கொண்ட அத்வானி போன்ற தலைவர்கள் உள்ள பாரதீய ஜனதா அல்ல. நாம் கோரிக்கை
வைத்தால், மாநிலத்திலிருந்து, அதை உடனடியாக தலை வணங்கி ஏற்றுக் கொண்டு, தோழமை உணர்வோடு நம்மோடு பழகிய வாஜ்பாய் போன்ற
நல்ல மனிதர்கள், யோக்கியமான மனிதர்கள் இருந்த அந்தக் காலத்திலே நாம் பாரதீய ஜனதாவோடு கை குலுக்கினோம். அப்படிப்பட்ட பாரதீய ஜனதா
ஆட்சியில், நம்முடைய தோழர்கள் ஓரிருவர் அமைச்சர்களாகக் கூட இருந்தார்கள்.
நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பெருந்தலைவர் காமராஜருக்கு கன்னியாகுமரி கடற்கரையிலே மணி மண்டபம் கட்ட வேண்டுமென்று ஒரு
முடிவு ஏற்பட்ட போது, நான் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருக்கிறேன். அந்த முடிவை வேண்டுகோளாக ஆக்கி, அன்றைக்குப் பாரதிய ஜனதா
கட்சியின் சார்பில் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவரைச் சுற்றியிருந்த அதிகாரிகள், கன்னியாகுமரியிலே
முதலமைச்சர் கருணாநிதி கேட்கின்ற அந்த இடத்தில் காமராஜருக்கு மணி மண்டபம் எழுப்ப முடியாது, காரணம் அந்த இடம் கடலுக்கு மிக அருகே
உள்ள இடம், எனவே சட்டப்படி, நியாயப்படி, முறைப்படி அந்த இடத்திலே அனுமதிக்க இயலாது என்று சொன்னார்கள். அந்தக் கருத்தை பிரதமர்
வாஜ்பாய் அவர்கள் அப்போது முதல்வராக இருந்த எனக்கு எழுதி அனுப்பினார்கள். நான் விடவில்லை, மீண்டும் மீண்டும் அதை வற்புறுத்திக் கேட்டு
இறுதியாக வாஜ்பாய் அவர்கள் அந்தக் கடற் கரையோரத்தில் பெருந்தலைவர் காமராஜருக்கு நினைவு மாளிகை எழுப்புவதற்கு அனுமதி தந்து எனக்கு
கடிதம் எழுதியதோடு அதைத் திறந்து வைக்கின்ற விழா விற்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள்.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், சட்டப்படி தான் நடந்து கொள்வேன் என்று பெருந்தலைவர் காமராஜர் விஷயத்தி லும் பிடிவாதம் பிடிக்காமல்
விட்டுக் கொடுத்த வாஜ்பாயை நாங்கள் உணர்ந்த காரணத்தால் தான், அவர் நம்முடைய தமிழ்நாட்டுத் தலைவர்களை மதிப்பவர் என்பதை எண்ணிய
காரணத்தால் தான், வாஜ்பாய் அவர்கள் நம்முடைய நண்பராக இருந்த காரணத்தால் தான் அப்போது நாம் அவர்களோடு உறவு கொண்டோம். பாலு
சொன்னதைப் போல, தம்பி மாறன் இறந்த போது அவரை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற போது, இடுகாட்டிலே வாஜ்பாய் அவர்கள் திடீரென்று வந்து
இறுதி வணக்கம் செலுத்தியதையும் நான் மறந்து விடக் கூடிய தல்ல. இதையெல்லாம் சொல்லக் காரணம், என்ன தான் பாரதிய ஜனதா கட்சி யின்
தலைவராக இருந்தாலும், அவர் மனிதாபிமானமிக்கத் தலைவராக இருந்தார், தோழமைக்கு மதிப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார், எனவே தான்
பாரதிய ஜனதா என்பது வாஜ்பாய் அவர்கள் பொறுப்பிலே இருந்ததோடு அந்த வரலாறு நம்மைப் பொறுத்த வரையிலே முடிந்து விட்டது.
அந்தப் பாரதிய ஜனதா கட்சியிலே இருக்கின்ற, எல்லோரும் வாஜ்பாய் அவர்களைப் போன்றவர்களா என்றால் இல்லை, இல்லை, இல்லை. ஒரு
கட்சிக்கு என்ன பெயர் என்பதைப் பற்றி அல்ல கவலை. அந்தக் கட்சிக்கு தலைமை ஏற்றிருப்பவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள், நம்மிடத்திலே எந்த
அளவிற்கு அன்பு வைத்திருக்கக் கூடியவர்கள், நம்மை எப்படி மதிக்கக் கூடியவர் என்பதைப் பற்றி யெல்லாம் நாம் எண்ணிப் பார்க்கின்ற காரணத்தால்
தான் நாம் இந்த வித்தி யாசங்களை, இந்த முரண்பாடுகளை உங்களிடத்திலே இப்போது எடுத்து விளக்கி னேன். பாரதிய ஜனதாவோடு தேர்தலில்
உடன்பாடு கொள்ளலாமா, கூட்டணி அமைக்கலாமா என்றெல்லாம் காலையிலிருந்து இதுவரையில் பேசினீர்களே, இதற்கெல்லாம் பதிலாகத் தான்,
இதற்கெல்லாம் விளக்கவுரையாகத் தான் நான் இந்தச் சுருக்கமாக கருத்துகளை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
புரிந்து கொள்வது மாத்திரமல்ல, என்ன தான் குழு போட்டாலும், உங்களுடைய முடிவுகளையெல்லாம் தலைவரிடத்திலே, பொதுச்
செயலாளரிடத்திலே, பொருளாளரிடத்திலே எடுத்துச்சொல்லி, அதற்குப் பிறகு தான் முடிவெடுப்போம் என்றாலுங்கூட, முடிவெடுப்பதற்கு முன்பு யார்,
எப்படிப் பட்ட தலைவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத் தான் இதைச் சொன்னேன்.
வாஜ்பாயினுடைய பாரதிய ஜனதா வேறு, இப்போது இருக்கிற பா.ஜ.க. வேறு; ஆனால் மனிதருள் மாணிக்கமாக, மனிதாபிமானம் மிக்கவராக,
எளியவராக, இனியவராக நம்மிடத்திலே நல்லெண்ணம் கொண்டவராக இருந்த வாஜ்பாய் தலைவராக இருந்த பா.ஜ.க. வேறு. அதை யெல்லாம்
வேறுபடுத்திப் பார்த்து, எண்ணிப் பார்த்து, இந்தக் குழுவிலே இடம் பெறப்போகின்ற நண்பர்கள், அதற்கேற்ப தங்களுடைய கருத்துகளை எடுத்துச்
சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தக் குழுவின் முடிவை, அங்கீகரிக்க வேண்டிய இடத்தில் நானும், பொதுச் செயலாளரும் மற்றும் இந்தக் குழுவிலே இடம் பெறப் போகின்றவர்கள்.
அதற்கு முன்பு வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்கிறேன் என்று கருதக் கூடாது. ஏனென்றால் மனிதாபிமானம் தமிழர்
களிடத்திலே அபிமானம், தமிழ்நாட்டு மக்களிடத்திலே பற்று, பாசம் இவைகள் எல்லாம் உள்ளவர்களாக இருந்தவர்களில் ஒருவர் தான் வாஜ்பாய்
என்பதற்காகத் தான் இதை நான் கூறுகிறேன். இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என்னுடைய முடிவை, நம்முடைய குழுவினர் எனக்கும்,
பொதுச் செயலாளருக்கும் அளித்தாலும் - இப்போது உங்களுக்கு உறுதியாகச் சொல்லி வைக்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்துகின்ற
காங்கிரஸ்காரர்களைப் போல நம்மிடத்திலே நன்றி மறந்து செயல்படுகின்ற சைபர், சைபர், சைபர் என்று ஏழு சைபரைப் போட்டு இந்த அளவிற்கு
ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி, அதற் கெல்லாம் யாரும் காரணம் இல்லை, ஒரே ஒரு நபர் தான், ராஜா
தான் என்று நம்முடைய தம்பி ராஜாவை, சிறையிலே வைத்து - இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜா மாத்திரமல்ல, என்னுடைய மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறைச்சாலையிலே வைத்து வாட்டி, இன்னமும் வழக்கு நடக்கிறது.
ஆனால் வழக்கை நடத்துகிறவர்களும் சரி, வழக்கிலே சாட்சியம் தந்தவர்களும் சரி, அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறதோ, அந்தத் தீர்ப்பை,
இப்போதே தயாரித்து, பத்திரிகைகளிலே அதைப் பற்றிய செய்திகளை ஓட விடுபவர்களும் சரி, அனைவருமே தெரிந்து ஒரு உண்மை தான், குற்றமே
செய்யாதவர்களை, குற்றவாளிகளாக சி.பி.ஐ. மூலமாக கூண்டிலே ஏற்றியிருக்கிறார்கள் என்றால், அந்தச் சி.பி.ஐ. யாருடைய கைவாள்? அந்தச்
சி.பி.ஐ. யாருடைய கையிலே இருந்த கடிவாளம்? அந்தச் சி.பி.ஐ. யார் கையிலே இருந்த ஆயுதம்? தெரியாதா மக்களுக்கு?
அன்றைக்கு பக்கம் பக்கமாக ஊழல் ஊழல் என்று, எத்தனை லட்சம், எத்தனை ஆயிரம், எத்தனை கோடி என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத
அளவிற்கு அன்றையதினம் ஊழல் புகார் சொன்ன, அந்தக் காரியங்களுக்கெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அந்த வேடிக்கையைப்
பார்த்து ரசித்து விட்டு, அதிலே யார் யார் சிக்குகிறார்கள் என்பதை யெல்லாம் பார்த்து, நம்மை விட்டால் சரி என்ற அளவிற்கு, பெரிய இடங்களிலே
இருந்தவர்கள், பெரிய பதவியிலே இருந்தவர்கள், பெரிய நிர்வாகத் தலைமையிலே இருந்தவர்கள் எல்லாம் தப்பித்தால் போதும் என்ற நிலைமையில்
மாட்டியவர்கள், சிக்கியவர்கள் தான் குற்றவாளிகள் என்று ராஜாவையும், அதற்குப் பிறகு திடீரென்று என்னுடைய மகள் கனிமொழியையும் சிறையிலே
வைத்து எட்டு மாத காலம் வாட்டினார்களே, இன்னமும் அந்த வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறதே, யாருடைய ஆட்சியில்? யார் இப்போது
ஆட்சியிலே இருக்கிறார்கள்? காங்கிரஸ்காரர்கள் தானே? எனவே அதையும் நாம் மறந்து விட மாட்டோம். மறந்து விடுவதற்கில்லை.
ராஜாவிற்கு ஏற்பட்ட அந்தச் சோதனை, ராஜாவுக்கு ஏற்பட்ட அந்தச் சங்கடம், அந்த அடக்கு முறை, அந்தக் களங்கம் இவைகள் எல்லாம்
இன்றையதினம் டெல்லியிலே ஆட்சியிலே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்லவா? அவர்களால் மறைமுகமாகச் செய்யப்பட்ட
மாய்மாலங்கள் அல்லவா?
எனவே இந்தப் பொதுக்குழுவிலே அமர்ந்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதி அளிக்கிறேன். நீங்கள் இந்தப் பொதுக்குழு தீர்மானங்கள் மூலமாக
அனுமதித்திருக்கின்ற அந்தக் குழுவிலே இடம் பெறுகிறவர்கள், அந்தக் குழு யாரிடத்திலே தன்னுடைய முடிவினைத் தெரிவிக்க விரும்புகிறதோ, அந்த
முடிவைப் பற்றி யோசித்து, இறுதி முடிவு எடுக்க வேண்டிய இடத்திலே இருக்கின்ற நானும், நம்முடைய பேராசிரியரும், நம்முடைய கழகத்தின்
தளபதி, அத்தனை பேரும் இவைகளையெல்லாம் மறந்து விட மாட்டோம். மறந்து விட்டு ஏமாந்து விடாதீர்கள் என்று நீங்கள் சொன்னால், நான்
உங்களுக்குச் சொல்கிற பதில், ஒரு முறைபட்டது போதும், தனிப்பட்ட ஒரு காயத்திற்காக நாங்கள் அழவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு
ஏற்பட்ட காயம் அல்லது ராஜாவிற்கு ஏற்பட்ட காயத்திற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. அவைகளை நாங்கள் சமாளிக்க முடியும். ஆனால் ஒரு
இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத்
தெரியும். அதையெல்லாம் மறந்து விட்டு எப்படி அவர்களை நாங்கள் காப்பாற்றியிருக்கிறோம் என்பது காப்பாற்றப்பட்டவர்களுக்குத் தெரியும்.
இதையெல்லாம் விட முக்கியமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் நாங்கள் எந்த அளவிற்கு
ஏமாற்றப்பட்டோம் என்பதும், தொடர்ந்து தாக்கப்படுகின்ற இந்திய மீனவர்களைக் கூட பாதுகாக்க முடியாத நிலையிலே இருக்கிறோம் என்பதும் மறந்து
விடக் கூடிய ஒன்றா என்ன?
ஆகவே இந்தப் பொதுக்குழுவிலே கலந்து கொண்டிருக்கின்ற என்னுடைய உடன் பிறப்புகளே, என்னுடைய அருமைத் தம்பிகளே, கழகத்தின்
காவலர்களே, உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இவைகளையெல்லாம் மறந்து விட்டு நாங்கள் மீண்டும் காங்கிரசுடன் சேருவோம் என்று
தயவுசெய்து நீங்கள் எண்ண வேண்டாம்.
நம்மோடு அணி சேர எந்தக் கட்சியும் விரும்பாவிட்டாலுங்கூட, நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை. நீ இருக்க, தம்பீ, நான் எதற்காக
கவலைப்பட வேண்டும்?
யாருக்காக நாங்கள் அஞ்சப் போகிறோம்? 75 இலட்சம் பேர் கழகத்தின் உறுப்பினர்கள் என்று பேராசிரியர் அவர்கள் பெருமிதத்தோடு இங்கே
சொன்னார்களே, அந்த 75 லட்சம் உடன்பிறப்புகளும், அவருடைய வீட்டார், குடும்பத்தார், உற்றார் உறவினர்களை யெல்லாம் சேர்த்துப் பார்த்தால்
அந்த எண்ணிக்கை கோடிக் கணக்கிலே வரும். அவைகளை யெல்லாம் நாங்கள் கணக்குப் பார்த்து, யாரும் அணி சேர வரா விட்டாலும் கூட,
தனியாக நிற்போம்.
வந்தால், வந்தவரையிலே இலாபம் என்று வட்டிக் கணக்குப் பார்க்காமல், அவர்களுடைய தோழமை உணர்வுக்கு, எங்களோடு இருந்தால் நாட்டுக்கு
நன்மை என்று கருதுகிறார்களே, அந்த நம்பிக்கைக்கு நாங்கள் தருகின்ற மதிப்பாக, அணி சேருவோம். ஆனால் யாரோடு அணி சேர்ந்தாலும், யாரோடு
என்பதிலும் - இரண்டு பேரும் இரண்டு கட்சிகள் - நான் பேசும்போதே விடப்பட்டு விட்டன என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படிச்
சேரும்போது, கட்சிகளோடு அணி சேருவது பற்றி அல்ல. தனித்து நிற்போம் என்று நான் சொன்னேன், பேராசிரியரும் சொன்னார், நம்முடைய தம்பி
ஸ்டாலினும் சொன்னார். இந்தப் பொதுக்குழுவிலே பேசிய பலரும் சொன்னீர்கள். ஆனால் தனித்து நின்றாலுங்கூட, ஓரிரு கட்சிகளின் துணையோடு
மாத்திரம் தான் நிற்க முடியுமென்றாலும் கூட, அப்போது அமைகின்ற அந்த அணியில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களாகிய நீங்கள் தான்,
என்னுடைய உடன்பிறப்புகளாகிய நீங்கள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவீர்கள்.
அப்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், அந்த வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கின்ற கழகத்தின் உடன்பிறப்புகள், அவர்கள் தனி அணி அமைத்து
விடக் கூடாது. அணி தேவை என்று நான் நம்புகிறேன், ஆனால் நீங்கள் அணி வேண்டுமென்றீர்களே, அதனால் நாங்கள் எங்கள் ஊரிலே, நீங்கள்
யாரை நிறுத்துகிறீர்களோ, அவர் ஒரு அணி, அவரை எதிர்க்கின்ற நாங்கள் இன்னொரு அணி என்று பல அணிகளாக ஆகி, எல்லா அணிகளும், பல
உப நதிகள், ஒரு பெரு நதியிலே கலந்து அதை மகாநதியாக ஆக்குவதைப் போல, நீங்கள் ஆக்க வேண்டுமே தவிர, கிளைநதிகளாக ஆனால், அது
வாய்க்கால்களாக மாறி விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
அணி சேருகின்ற நேரத்தில், அந்த அணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அந்த அணிகளில் ஒன்றாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தால்,
அந்த தி.மு. கழக வேட்பாளருக்கு அவர் எந்தத் தொகுதியிலே நின்றாலும், எந்தத் தொகுதியிலே போட்டியிட்டாலும், யாரை எதிர்த்துப் போட்டி
யிட்டாலும் நம்முடைய முழு பலமும், முழு சக்தியும், நம்முடைய முழுமையான ஆர்வம் அனைத்தும் அவருடைய வெற்றிக்கே தான் என்கிற அந்த
நிலையில் நீங்கள் பாடுபட வேண்டும். (இதற்கு அல்லவா நீங்கள் கைதட்டியிருக்க வேண்டும்) அந்த வெற்றியை நீங்கள் குவித்து, அடுத்த பொதுக்
குழுவில் உங்களுக்கெல்லாம் நானும், பேராசிரியரும், நம்முடைய தளபதியும் மற்றவர்களும் நன்றியினைக் குவிக்கின்ற அந்த வாய்ப்பை எங்களுக்குத்
தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்னும் சொல்லப் போனால், நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்தத் தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
கழகத்தை, மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள். உங்களைத் தாள் பணிந்து கேட்கிறேன். உங்கள் ஒற்றுமையை வீணாக்கி விடாதீர்கள்.
வேற்றுமையினால் ஒருவருக்கு ஒருவர் உள்ள தனிப்பட்ட விரோதங்களையெல்லாம், இந்தத் தமிழகத்தைக் காக்க வந்த இந்த இயக்கத்தின் மீது காட்டி,
இயக்கத்தைப் பழி தீர்த்து விடாதீர்கள். ஏனென்றால் இது ஆயிரங்காலத்துப் பயிர். பெரியாரும், அண்ணாவும் என்னைப் போன்றவர்களும்,
பேராசிரியரைப் போன்றவர்களும், இன்றைக்கு இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கின்ற ஸ்டாலினைப் போன்றவர் களும், நம்முடைய
கழகத்தின் செயலாளர்களும், துரைமுருகன் ஆனாலும், சற்குணம் அம்மையார் ஆனாலும், துரைசாமி ஆனாலும், டி.கே.எஸ். இளங்கோவன்
ஆனாலும் மற்றும் யாராக இருந்தாலும் எல்லோரும் என்னுடைய உயிருக்கு உயிரான உடன்பிறப்புகள்.
அந்த உடன்பிறப்புகளை நான் எந்த அளவிற்கு நம்புகிறேன் என்பதும், எந்த அளவிற்கு அவர்களிடம் பற்றும் பாசமும் வைத்திருக்கிறேன் என்பதும்
நீங்கள் அறியாதது அல்ல. அவரோடு பழகுகின்ற அந்தந்த ஊரைச் சேர்ந்த கழகத் தோழர்கள் அறியாதவர்கள் அல்ல. என்னைப் போல, பேராசிரியரைப்
போல, ஸ்டாலினைப் போல இந்த இயக்கத்திற்காக உழைக் கின்ற ஒவ்வொரு தோழனையும் நீங்கள் கழகத்தின் கண்மணியாகக் கருதி, இந்தக்
கழகத்தைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி வரும், தோல்வி வரும், ஆனால் கழகம் நிலைக்கும். ஒரு
கழகத்தினுடைய ஆற்றலை, அதனுடைய வாழ்வை, அதனுடைய வளத்தை நிர்ணயிப்பது தேர்தல் வெற்றி அல்ல. தேர்தல் என்பது வந்து போகின்ற
ஒன்று. ஆனால் அதே நேரத்தில் ஒரு தேர்தல், நமக்குச் சோதனை. என்ன சோதனை என்றால், நாம் எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோம்,
எந்த அளவிற்கு நாணயமாக இருக்கிறோம், எந்த அளவிற்கு ஒருவரையொருவர் காட்டிக் கொடுக் காமல் இருக்கிறோம், எந்த அளவிற்கு
ஒருவரையொருவர் வீழ்த்தாமல் நல்ல எண்ணத்தோடு பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அளக்கும் கருவி - நாங்கள் அந்த அளக்கும் கருவிகளாக
இந்தப் பொதுக் குழுவிலே உள்ள எல்லோரையும் கருதுகிறோம். அந்த நம்பிக்கையோடு இந்த வேண்டுகோளை உங்களுக்கு வைத்திருக்கிறேன்.
நாளைய தினம் எந்த அணியோ, எந்தக் கட்சியோடு அணியோ, அந்த அணி உங்களால் முன்மொழியப்பட்ட, உங்களால் தீர்மானிக்கப்பட்ட, நீங்கள்
வகுத்த தீர்மானங்களிலே ஒன்றான கழகத்தின் தலைவரும், பொதுச் செயலாளரும் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் மூலமாக தேர்தல் உடன்
பாட்டிற்கான சக்திகளை ஒன்று திரட்ட வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்களே, அந்தச் சக்தியை நாங்கள் வீணாக்காமல் பாடுபடுவோம்,
பணியாற்றுவோம், எங்களுக்காக அல்ல, உங்களுக்காக, உங்களுடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்வுக்காக, தமிழுக்காக, தமிழர்களுக்காக, திராவிட
இன உணர்வைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக என்பதை எடுத்துக் கூறி, அந்த உங்களைக் கட்டிக் காத்திட முன் வாருங்கள் என்று உங்களையெல்லாம்
கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பேசினார்.
தகவல்:
தி இந்து
மற்றும்
தினமணி |